நழுவிச் செல்லும் கனவாக நல்லிணக்கம்
2017-11-04 09:56:29 | General

இன நல்லிணக்கம் என்பது நழுவிச் செல்லும் கனவாகவே தென்படுகிறது. நீடித்ததும் நிலையானதுமான சமாதானத்தை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை சம்பந்தப்படுத்தியதொன்றாகும்.

அதேவேளை, அரசியல் தீர்வென்பது நெடுங்காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடிய அமைதிக்கான சாத்தியப்பாட்டை அதிகரிப்பதற்கு முக்கியமான பங்களிப்பை செலுத்துகிறதென்பதை நிராகரிக்க முடியாது.

சகல தரப்பினரையும் உள்வாங்கிக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சகல தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றைக் கண்டுகொள்வதற்கு கௌரவமான நல்லிணக்கம் தேவையானதொன்று. அதேவேளை நல்லிணக்கம் இல்லாமல் சமாதானம் ஏற்படாதென்பதற்கு உலகில் பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன.


தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வட, கிழக்கை வரலாற்று பூர்வ வாழ்விடமாக கொண்டவர்கள் மத்தியில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனதியான முறையில் தற்போதைய அரசாங்கமும் எடுத்திருக்கவில்லையென்ற கவலையும் விரக்தியும் இப்போது அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது.

வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் நல்லிணக்கத்தை வலுவடையச் செய்வது நிலையான சமாதானத்துக்கு வழிவகுக்குமென்பது வெறும் "வாய்ப்பாடாகவே' அதிகளவுக்கு தென்படுகிறது.


உண்மையில் நல்லிணக்க நடவடிக்கைகள் வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதும் இதய சுத்தியுடன் நேர்மையான விதத்தில் சாத்தியமான எதிர்காலத்தை கண்டறிந்து கொள்வதுமாகும். புரிந்துணர்வு, , அன்பு, கருணை போன்ற நல்லுணர்வுகளுடன் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் ஒரு தரப்பினர் மறு தரப்பினரின் இருப்பை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். யதார்த்தநிலை, மனித உணர்வுகள், தார்மீக ரீதியான விவாதம், கடந்தகால அதிகாரம், எதிர்கால அரசியல் என்பனவற்றை உள்ளடக்கியதாகவே நல்லிணக்கம் ஏற்படுகிறது.

அத்துடன் நல்லிணக்கம் என்பது ஒரு நிகழ்வல்ல. மனித உறவுகள், அதிகார இயக்கவியல் என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்ட நடவடிக்கையாகவே இதனை கருத முடியும். 


அத்துடன் புதிய சிந்தனை, செயற்பாடு, உறவுகளையும் இது ஏற்படுத்துகிறது. சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் கடப்பாடுகளை உள்ளடக்கியதாகவும் நல்லிணக்கம் அமையமுடியும். அதேவேளை மேலாதிக்கம், பிளவுகள், வன்முறை என்பனவற்றுக்கான கட்டமைப்புகளை இல்லாமல் செய்துவிட்டு நீதி மற்றும் சமாதானத்தினூடான நடவடிக்கையாகவே நல்லிணக்கத்தை நோக்க முடியும்.

அத்துடன் இதற்கு சீரான வடிவமொன்றைக் கொடுக்கவும் இயலாது. மேலும் சகல நடவடிக்கைகளிலும் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் முக்கியமானதொன்றல்ல.

பரஸ்பரம் கௌரவத்தை அளித்தல், அகிம்சாவளியில் வேறுபாடுகளைக் களைதல், பொதுவாக நன்மையைத் தேடித்தரும் விடயங்களில் கவனத்தைச் செலுத்துதல் என்பனவற்றை உறுதிப்படுத்துவதே முக்கியமானதாகும். பொதுவான நன்மையே இதன் தீர்க்கமான நோக்கமாகும்.


பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர்தப்பியவர்களுக்கும் இடையிலான சிந்தனைகளில் மாற்றமும் அவசியமாகத் தேவைப்படுகிறது. சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் ஒரு இன குழுமம் தாங்கள் பாதிக்கப்பட்ட தரப்பாக தொடர்ந்து இருந்து வருகிறார்களெனவும் தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுகிறார்களெனவும் விரக்தியையும் கவலையையும் கொண்டிருப்பார்களேயானால் வெறுப்புணர்வு, அவநம்பிக்கை, ஐயுறவு என்பன தொடர்ந்து நீடித்துச் செல்லும்.

இலங்கையின் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வை காணும் விவகாரத்தைப் பொறுத்தவரை அதிகளவுக்கு பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றம் தரும் கசப்பான அனுபவங்களையே பெற்று வருகின்றனர்.

இன, மத மேலாதிக்கவாத சிந்தனைகளை முழுமையாக நிராகரித்து மனிதத்துவத்துடன் கூடிய அடிப்படை மனித உரிமைகள் சகல இன, மதக் குழுக்களுக்கும் உரியவையென்ற தார்மீக சிந்தனையை சகல தரப்பினர் மத்தியிலும் கட்டியெழுப்பக் கூடியவர்களும் இதற்கான பாதையில் மக்களை வழிநடத்திச் செல்லக் கூடியவர்களும் பெரும்பான்மையினராக உருவாகாதவரை தேசிய நல்லிணக்கம் என்பது நழுவிச் செல்லும் கனவாகவே அமைந்துவிடும்.

 

TOTAL VIEWS : 1417
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
bet6e
  PLEASE ENTER CAPTA VALUE.