அதிகரிக்கும் சிறுவர் கடத்தல் சம்பவங்கள்
2017-05-18 09:43:54 | General

ஆட்களை குறிப்பாக இளம் சிறார்களை கடத்திச் சென்று கப்பம் கோருவது, அல்லது துஷ்பிரயோகத்திற்குட்படுத்தும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. நாட்டில் கடந்த 5 மாதங்களில் சிறுபிள்ளைகள் கடத்தப்பட்டமை தொடர்பாக 47 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

பெருந்தொகை பணத்தை கப்பமாகப் பெற்றுக்கொள்வதற்காகவே சிறுபிள்ளைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அநேகமானவையாக காணப்படுகின்றன. பெரும்பாலும் பிள்ளைக்கு அறிமுகமானவர்களே இக்குற்றச்செயலின் பின்னணியிலிருப்பதும் விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதும் கடத்தல் பேர்வழிகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறதெனவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.


உண்மையில் பணத்திற்காக அல்லது பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக பிள்ளைகளை கடத்திச் செல்வதென்பது முன்னர் மிகவும் அபூர்வமான சம்பவங்களாகும். அத்துடன் பிள்ளைகளுக்கு வீடுகளில், சுற்றாடலில் போதியளவுக்கு பாதுகாப்பான தன்மை காணப்பட்டது. ஆனால் சமூகக் கட்டமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்கள் தொகைப்பெருக்கத்தால் நகரமயமாதல் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணிகளினால் தத்தமது பிள்ளைகளின் பாதுகாப்பை பெற்றோரே அதிகளவுக்கு கவனிக்க வேண்டியுள்ளது.

நகரப்புறங்களில் வாழும் பெற்றோர்களில் இருவரும் வேலைக்கு செல்வோராக இருந்தால் குழந்தைகளாயின் பகல் நேரப்பராமரிப்பு நிலையத்தில் குழந்தையை விட்டு வேலைக்குச் சென்றுவிட்டு பின்னர் மாலையில் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டி நேரிடுகிறது. பாடசாலை செல்லும் பிள்ளையாயின், வேலைக்குச் செல்லும் பெற்றோர் தமக்கு அறிந்தவர்கள் அல்லது நண்பர்கள், உறவினர்களின் பராமரிப்பில் அவர்களை ஒப்படைப்பதுமுண்டு. 


இந்நிலையில் பிள்ளையொன்று கடத்தப்படுமானால் அதற்கு பெற்றோரும் பாடசாலையுமே பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுவது சமூகத்தின் மத்தியில் வழமையானதொன்றாக காணப்படுகின்றது. ஆனால் பாராயம் எய்தாத பிள்ளையொன்று கடத்தப்படும் போது அந்தப் பிள்ளையைப் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வை பெற்றோர் கொண்டிருக்கின்றபோதிலும் சகல வேளையிலும் கண்காணித்துக்கொண்டிருப்பதென்பதும் நடைமுறைச்சாத்தியமற்றதொன்றாகும்.

ஆயினும் வெளியாட்கள் அதாவது அறிமுகமற்றவர்கள் இனிப்புப் பண்டங்கள், பானங்களை கொடுத்தால் பெற்றுக்கொள்ளக்கூடாதென்று பிள்ளைகளுக்கு பெற்றோர் அறிவூட்டவேண்டும். அத்துடன் தங்களுக்கு மிகவும் நம்பிக்கையானவர்களென தாங்கள் அடையாளம் கண்டவர்கள் தவிர வெளியாட்கள் எவராவது இனிப்புப் பொருட்களை தரும்போது, பெற்றுக்கொள்ளக் கூடாதென பெற்றோர் கண்டிப்பாக பிள்ளைகளுக்கு கூறுவதும் அவசியம். 


இணையப் பாவனை அதிகரிப்பும் அத்தளங்களில் பாலியல் விவகாரங்களைப் பார்ப்பதற்கு முன்னுரிமையளிப்பதும் சிறுவர் கடத்தல் , பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றுக்கு காரணமாக அமைவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானிடவியல் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் மயூர சமரக்கோன் தெரிவித்திருக்கின்றார். "இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தமது 30 வயதுகளில் தனியாட்களாகவே இருக்கும் போக்கு காணப்படுகின்றது.

ஆண்கள் அநேகமாக 33 வயதிலும் பெண்கள் 32 வயதிலும் திருமணம் செய்வது ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. கல்வி, தொழில்வாய்ப்பில் ஆர்வம் காட்டுவது அதிகரிப்பதால் திருமணத்தை தள்ளிப்போடுகின்றனர் இதுவும் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு பங்களிப்பை செலுத்த முடியுமென பேராசிரியர் சமரக்கோன் கூறுகிறார்.


நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம், கடத்தல் என்பது பாரதூரமான குற்றச்செயலாகும். கப்பம் கோரி பிள்ளைகள் கடத்தப்பட்டால் அது தொடர்பாக பெற்றோரோ பாதுகாவலரோ புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமெனவும் பொலிஸாருக்கு தெரியப்படுத்திவிட வேண்டுமெனவும் தேசிய 
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறுகிறது. பிள்ளைகள், பெண்கள் பாதுகாப்புத் தொடர்பாக சட்டரீதியான ஏற்பாடுகள் அதிகளவுக்கு மேற்கொள்ளப்பட்டாலும் கடத்தல், வன்புணர்வு உட்பட வன்முறைச் சம்பவங்கள் மோசமாக அதிகரித்துச் செல்லும் போக்கை அவதானிக்க முடிகிறது.

கலாசாரம், பண்பாடு மற்றும் ஒழுக்கம் தொடர்பான பெறுமானங்கள் சமூகங்களின் மத்தியில் அருகிச் சென்று விடாமலிருப்பதையும் வக்கிர உணர்வு மேலோங்குவதற்கு இடமளிக்காலிருப்பதையும் உறுதிப்படுத்துவதே அவசியத் தேவையாகும். இதற்கு சர்வமதத் தலைவர்கள் அளப்பரிய பங்களிப்பை வழங்க முடியும்.

TOTAL VIEWS : 1367
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
cg1lj
  PLEASE ENTER CAPTA VALUE.