வளி மாசடைதல்
2016-08-01 17:43:59 | General

வளி மாசடைவதால் ஆண்டுதோறும் சராசரியாக  65 இலட்சம் பேர் உலகில் உயிரிழப்பதாகவும் இன்னும் இரு தசாப்தங்களில் இந்த எண்ணிக்கை அபாயகரமான முறையில் அதிகரிக்கும் என்றும் சர்வதேச எரிசக்திக் கழகம் எச்சரித்திருக்கிறது.

மனித ஆரோக்கியத்துக்கு இரத்த அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், புகை பிடித்தல் போன்றவற்றுடன் நாம் சுவாசிக்கும் காற்று மாசடைவதால் மரணமடைவோரின் தொகை அதிகரித்து வருகிறது. சனத் தொகைப் பெருக்கத்தால் நகர மயமாதல் அதிகரித்து வரும் நிலையில் அபிவிருத்திப் பணிகளும் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதனால் தூசு நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டியுள்ளது. மறுபுறம் வீதிகளில் வாகனங்களின் பெருக்கத்தால் அவை கக்கும் புகைகள் மனித ஆரோக்கியத்துக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன. உலோகத்துகள், மண், செப்பு ஒட்சைட், இதர தூசுகள் வளியுடன் கலப்பதால் அவை மரணத்தை ஏற்படுத்துகின்றன.

காற்றில் கலந்திருக்கும் மிக நுண்ணிய பொருட்களை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் , பக்கவாதம், இதயக்கோளாறு போன்ற வியாதிகள் ஏற்படுவதாக  மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 


எரிபொருட்களை கட்டுப்பாடின்றிப் பயன்படுத்துவதால் ஆயுட்காலம் குறைவதற்கு காரணமாக அமைவதாகவும் சனத்தொகை கூடிய ஆசியக் கண்ட நாடுகளே அதிகளவுக்கு பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ரீதியாக புகை வெளியிடுவதை குறைக்க நடவடிக்கைகள் எடுத்தாலும் அது போதாது என்றும் வளி மாசடைவதை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சர்வதேச எரிசக்தி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று இல்லாமல் உயிரினங்கள் வாழ முடியாது.

இயற்கையின் கொடையான அதனை மாசுபடுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அதிகளவுக்கு எவரும் சிந்திப்பதில்லை. காற்றின் மூலமே தொற்று நோய்கள் இலகுவாகப் பரவுகின்றன. நுரையீரல் தொற்று, சுவாசப் பிரச்சினைகள் காற்றினாலேயே ஏற்படுகின்றன.

அதேவேளை, காற்று மாசுபடும் இடங்களை வரையறைப்படுத்துவதும் கடினமாகும். இது நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் பாதிப்பை ஏற்படுத்தும் எரிமலை கக்குவதால்  காடுகள் தீப் பற்றிக் கொள்வதால் வளி மாசடைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவது நாம் அறிந்ததே. 


பயிர்ச்செய்கை நாசமடைவதுடன் பாரியளவில் புகை மேலெழும்போது விமான சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. அத்துடன், கைத்தொழில் துறையில் வளர்ச்சியடைந்த அமெரிக்கா, சீனா போன்ற பெருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட வளர்ச்சியடைந்த நாடுகளில் காபனீரொட்சைட்டு அதிகளவில் வெளியேற்றப்படுவதால் உலகின் வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணமாக அமைவதால் காபனீரொட்சைட்டின் வெளியேற்றத்தை 2 சதம பாகைக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டுமென்ற இணக்கப்பாடு சர்வதேச ரீதியாக எட்டப்பட்ட போதிலும் நடைமுறைப்படுத்தப்படாமல் இழுபறி நிலைமை காணப்படுகிறது. பூமி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் குறிப்பாக தீவுகள் நீரில் மூழ்கும் அபாயம் தொடர்பாக தொடர்ந்தும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. 


அதேவேளை, காற்றுக்கு தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதாகவும் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களினால் வளிமாசடையும் போது தானாகவே சுத்திகரிப்பு இடம்பெறுவதாகவும் கூறப்பட்டாலும் இதற்கு அளவு மட்டம் உள்ளதாகவும் மிகையாக மாசடையும்போது வளிமண்டலத்தால் சுத்திகரிப்பை முழுமையாக மேற்கொள்ள முடியாதெனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலக நாடுகளின் தொழிற்சாலைகளின் பெருக்கம், வீடு நிர்மாணம் போன்றவற்றால் காடுகள் அழிக்கப்படுகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் ஒட்சிசன் வெளியேற்றம் குறைந்து காபனீரொட்சைட்டின் வெளியேற்றம் அதிகரிக்கிற து. அதேவேளை மின் சக்தியை உற்பத்தி செய்வதற்காக அனல்மின் நிலையங்களை நிர்மாணிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

நிலக்கரி போன்றவற்றைப் பயன்படுத்தி அனல் மின் உலைகளை அமைக்கும் போது வளிமாசடைவதும் அதிகரிக்கின்றது. இந்நிலையில் மரங்களை வளர்ப்பதன் மூலம் வளிமாசடைவதைக் குறைக்க முடியும்.

TOTAL VIEWS : 2420
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
r0zss
  PLEASE ENTER CAPTA VALUE.