தகவல் பெறும் உரிமை ஜனநாயகத்தை வலுப்படுத்தும்
2018-01-08 12:01:17 | General

தகவலைப் பெற்றுக் கொள்ளும் உரிமை ஜனநாயகத்துக்கு சமமான கருத்தைக் கொண்ட வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது. நாடொன்றின் பிரஜைகளின் இறைமையை வலுப்படுத்துவதற்கான கருவியாக இதனை நோக்க முடியும்.

இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இச்சட்டத்தால் சகல தரப்பினரும் நன்மையடையக் கூடியதாக இருக்கின்றதென கடந்த டிசம்பரில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இடம்பெற்ற "வெளிப்படைத்தன்மை வாய்ந்த அரசாங்கம்' தொடர்பான ஆசிய பசுபிக் தலைவர்களின் சந்திப்பில் இலங்கையின் தகவல் உரிமைச் சட்ட ஆணைக்குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான கிஷாலி பின்ரோ ஜயவர்தன தெரிவித்திருக்கிறார்.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் முதல் தகவலைப் பெற்றுக்கொள்வதற்கானதாகவும் எல்லைகளற்றதாகவும் வர்க்க,
சமூக, இனம் தொடர்பான தடைகளை கொண்டிராததாகவும் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை தகவலைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்திருப்போரில் விவசாயிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள், விசேட தேவையுடைய படைவீரர்கள், நோயாளர்கள், சிவில் சமூகக் குழுக்கள், ஊடகவியலாளர்களென சகல தரப்பினரும் உள்ளடங்கியுள்ளமை ஆக்கபூர்வமான விடயமாகவும் அதேசமயம் இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியதால் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் பட்டியலிட்டுக் காண்பிப்பதாக அமைகிறது.

உலகில் தகவல் உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய முதலாவது நாடு சுவீடன். 1766 இல் அந்த நாடு இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது. இப்போது 116 நாடுகளில் இச்சட்டம் அமுலில் உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மனித உரிமைகளிலுள்ள பிரதான விடயங்களிலொன்றாகும். 

அபிவிருத்தியடைந்த நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் திகழ்கின்றன. நாடொன்றின் பிரஜைகள் தகவல்களை அறிந்திருப்பதற்கு இச்சட்டம் உதவுகின்றது. ஜனநாயக ரீதியாக செயற்படக்கூடியதற்கும் இச்சட்டமூலம் துணைநிற்கிறது.

அரசாங்கம் மற்றும் பொது அமைப்புகளிடமிருந்து தமக்குத் தேவையான தகவல்களை பொதுமக்கள்  பெற்றுக் கொள்வதற்குரிய அதிகாரத்தையும் இச்சட்டமூலம் வழங்குகிறது. அரசாங்கத்தின் தீர்மானங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு இச்சட்டமூலம் உதவக் கூடியதாக இருக்கின்ற போதிலும் நாடு மற்றும் அரசாங்கத்தைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு வரையறைகள் உண்டு.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை இச்சட்ட மூலத்தினூடாக பெற்றுக்கொள்ள இலங்கையில்  இதரபல நாடுகளும் இதே விதிமுறைகளை கைக்கொண்டுள்ளன. உண்மையில் இச்சட்டமூலத்தை முறையாக பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் அதிகளவுக்கு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். 

இச்சட்டம் வெளிப்படைத்தன்மை, பதிலளிக்கும் கடப்பாட்டை மேம்படுத்துகிறது. தகவலைப் பெற்றுக் கொள்வதற்கான தமக்குள்ள உரிமையை பொதுமக்கள் பயன்படுத்தும் போது தங்களுக்கு கிடைத்த கௌரவமாக அவர்கள் அதனை நோக்குகின்றனர். அதேவேளை தகவலைப் பெறுவதற்கான தங்களது உரிமையை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் இச்சட்டத்தை பிரயோகிக்கும் போது அந்தரங்கம் தொடர்பான தமது உரிமை பற்றியும் அவர்கள் அறிந்து கொள்கின்றனர்.

இந்த நடவடிக்கைகளில் அவர்களுக்கு இரு வழிகளில் நன்மைகள் கிடைக்கின்றன. தகவல் உரிமை சட்டத்தினூடாக அவர்கள் தகவலைப் பெற்றுக் கொள்கின்றனர். அதேவேளை அந்தரங்கத்துக்கான உரிமையின் கீழ் தமது தனிப்பட்ட தகவல்களையும் அவர்கள் பாதுகாத்துக் கொள்கின்றனர்.

ஊழலுக்கு எதிரான போராட்டம், மனித உரிமைகளை பேணிப் பாதுகாத்தல் போன்ற விவகாரங்களிலும் தகவல் உரிமைச் சட்டத்தால் கனதியான பங்களிப்பை வழங்க முடியும். இச்சட்டத்தின் பயனை சாதாரண மக்களும் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதே மிகவும் முக்கியமான தேவைப்பாடாகும்.

இதற்கு இச்சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம். இதில் அரசாங்க தகவல் துறை அதிகாரிகளின் வகிபாகம் குறிப்பிடத்தக்கதாகும். தகவல்துறை அதிகாரிகளே நல்லாட்சிக்கு நேரடியாக ஆதரவளிப்பவர்கள். தகவலை வெளியிடும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் அரசாங்கமொன்று தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள முடியும்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்படும் வேண்டுகோள் தொடர்பாக மௌனம் காக்கக்கூடாது. அதேவேளை இச்சட்டம் தொடர்பாக அரசாங்கமும் அதன் முகவரமைப்புகளும் இணையத்தளங்களை கொண்டிருக்க வேண்டும்.

அரசாங்கமொன்று தகவல் உரிமைச் சட்டத்தை சிறப்பான முறையில் அமுல்படுத்துமாயின் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகளவில் பெற்றுக்கொள்ள இயலும். உண்மையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தகவல் பெறும் உரிமை முக்கியமான வகிபாகத்தை செலுத்துகின்றது.

 

TOTAL VIEWS : 1505
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zptn2
  PLEASE ENTER CAPTA VALUE.