நீதியின் 'குரலை' மெளனமாக்கும் முயற்சி?
2017-07-24 11:37:01 | General

யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குடாநாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சமீபமாக இடம்பெற்ற இச்சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியன் தெய்வாதீனமாக மயிரிழையில் உயிர்தப்பியிருப்பதுடன் கடும் காயமடைந்த அவரின் இரு மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்த பாடசாலை மாணவி வித்தியா வழக்கு உட்பட பாரதூரமான சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்துவரும் நீதிபதியாக இளஞ்செழியன் இருப்பதால் தன்னை இலக்கு வைக்கும் நோக்கில் இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமென்ற சந்தேகத்தை நீதிபதி இளஞ்செழியன் வெளிப்படுத்தியிருப்பதுடன் இச்சம்பவம் நீதித்துறைக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலென சுட்டிக்காட்டியிருப்பதுடன் இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, பிரதம நீதியரசர் பொருத்தமான நடவடிக்கையை எடுக்கவேண்டுமென வலியுறுத்தல் விடுத்திருக்கிறார்.


விசாரணைகளை தீர்க்கமான முறையில் மேற்கொண்டு "சமன் செய்து சீர்தூக்கும் கோலாக' செயற்படுபவர் என்ற புகழைப் பரவலாக பெற்றிருப்பவர் நீதிபதி இளஞ்செழியன். வல்லுறவு மற்றும் கொலை வழக்குகளில் கடுமையான தீர்ப்புகளை வழங்குபவரென்ற நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றிருக்கும் அவரை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தச் சம்பவம் நாட்டின் நீதித்துறைக்கு மட்டுமன்றி பொதுமக்களின் பாதுகாப்புக்கும் விடுக்கப்பட்ட சவாலாகும்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து செல்வதையும்  சமூகவிரோதச் செயல்கள் பெருகிவருவதையும் அவதானிக்க முடிகிறது. அத்துடன் போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவது குறித்தும் பரவலாக கவலை வெளிப்படுத்தப்படுகிறது. 


நாட்டின் எந்தவொரு மாகாணத்திலும் இல்லாத வகையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகமாக இருப்பது குறித்து வடமாகாண நிர்வாகம் தொடர்ந்து விசனம் தெரிவித்துவரும் அதேசமயம், தேசிய பாதுகாப்புக்கு இராணுவ பிரசன்னம் அவசியமென மத்திய அரசாங்கம் கூறிவருகிறது. ஆனால் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் வாள்வெட்டுகள், கொள்ளை, வீதிச்சண்டைகள், கொலைகள், வன்புணர்வுகள், கடத்தல் போன்றவை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை சட்டம், ஒழுங்கின் அமுலாக்கம் தொடர்பாக கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

அதேவேளை தற்போது நீதிபதியை இலக்குவைத்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் நீதித்துறையை அச்சுறுத்தி "காட்டுத்தர்பார்' நடத்துவதற்கான முயற்சியாகத் தோன்றுகிறது. அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தின் முக்கியமான மூன்று கிளைகளாக நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவை விளங்குகின்றன. அதில் நீதித்துறையானது அரசியலமைப்பையும் சட்டங்களையும் உரைபெயர்ப்பதும் சர்ச்சைகள் ஏற்படும் போது தமது உரைபெயர்ப்புகளை பொருத்தமான முறையில் பிரயோகிப்பதுமான பொறுப்பைக் கொண்டிருக்கிறது.


அதேவேளை அரசாங்கத்தின் முறைமையானது நீதிபதிகள் எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாமல், பாரபட்சமின்றி செயற்படுவதை நோக்கமாகக் கொண்டதாகும். தனிப்பட்ட அல்லது அரசியல் ரீதியான தலையீடுகளின்றி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நீதிபதிகள் தமது கடமையை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதற்குரிய வசதிகளை மட்டுமன்றி அவர்களுக்கான பாதுகாப்பையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். 


நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்ததாக சந்தேகிக்கப்படும் சூட்டுச்சம்பவம் தொடர்பாக துரிதமான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை நீதியின் முன் நிறுத்தி சட்டத்தின் பிரகாரம் உரிய தண்டனை வழங்கப்படவேண்டும். அத்துடன் இச்சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் பதவி, அந்தஸ்தை பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதை உறுதிப்படுத்தி நீதியை நிலைநாட்டுவதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த முடியும்.

TOTAL VIEWS : 1478
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ean2g
  PLEASE ENTER CAPTA VALUE.