போதைப் பொருளுக்கு எதிராக தொடரும் போராட்டம்
2018-01-09 09:59:31 | General

இலங்கையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களில்  45 ஆயிரம் பேர்கள்  4 கிலோ கிராம் ஹெரோயினை பாவித்திருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ அண்மையில் செய்தியாளர் மாநாடொன்றில் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

வருடாந்தம்  1478  கிலோ ஹெரோயினை போதைக்கு அடிமையானவர்கள் பாவித்திருப்பதாகவும் இந்த ஆபத்தான போதைவஸ்து அநேகமாக இந்திய, பாகிஸ்தானிய மீன்பிடிப் படகுகள் மூலமே நாட்டுக்குள் கடத்தி வரப்படுவதாகவும் பேராசிரியர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, நாட்டின் கிழக்கு ஊவா, தென் மாகாணங்களில் சுமார்  500 ஹெக்டேயர்களில் கஞ்சா சட்டவிரோதமாக செய்கை பண்ணப்படுவதாகவும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்திருக்கிறது.

போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் ஆட்களை தடுத்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் விசேட நிகழ்ச்சித் திட்டங்களும் கடந்த பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இந்த சட்டவிரோதமானதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதுமான போதைப் பொருள் பாவனைக்கு எதிராக செயற்றிறன் வாய்ந்த நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லையென்பதே யதார்த்தம். 

இந்தப் பிரச்சினை தொடர்பாக பல்முனை அணுகுமுறை தேவைப்படுவதாக தோன்றுகிறது. சட்டவிரோதமாக போதை வஸ்துகளை கடத்தி வருவோர், செய்கை பண்ணுவோர் போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றபோதிலும் போதைப் பொருட்கள் கடத்திவரப்படுவதும் விற்பனை செய்யப்படுவதும் பாவனைப்படுத்தப்படுவதும் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.

சிறைச்சாலைத் திணைக்களத்தின்  2015 ஆம் ஆண்டுப் புள்ளி விபரங்களின் பிரகாரம்  சிறைவைக்கப்பட்டிருப்போரில் சுமார் அரைவாசித் தொகையினர் (46.4%) போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குற்றமிழைத்தவர்களாகுமென்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்து நிறுத்திவிட முடியுமெனவும் அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஹெரோயினுடன் இப்போது கேரளக் கஞ்சா கடத்தலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட கடலில் அடிக்கடி படகுகளில் வைத்து கேரளக் கஞ்சா கைப்பற்றப்படுகிறது. 

நாட்டில் போதைப் பொருள் பாவனையால் பல்வேறுபட்ட சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. போதைப் பொருட்களுக்கு அடிமையாவோர் மோசமான இதர குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதுண்டு. போதைப் பொருள் பாவனை, கடத்தல், வியாபாரத்தில் ஈடுபடுவோரை கைது செய்து சிறைச்சாலைகளில் வைத்துப்  பராமரிப்பதுடன், அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதால் அதற்காக பொது நிதியை செலவிட வேண்டி நேரிடுகிறது.

அதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் போதைப் பொருளுக்கு அடிமையான எந்தவொரு வேட்பாளருக்கும் பொது மக்கள் வாக்களிக்கக் கூடாதென ஜனாதிபதி அண்மையில் வலியுறுத்திக் கூறியுள்ளமை சமூக மட்டத்தில் போதைப் பொருள் பாவனை ஏற்படுத்தியிருக்கும் பிரச்சினையின் பாரதூரமான தன்மையை வெளிப்படுத்துகின்றது. அதேவேளை, கிராமப் புறங்களில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகளை இல்லாமல் செய்வதற்கு கிராம மட்டத்தில் பெண்கள் படையொன்றை அமைக்கப்போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 

உண்மையில் போதைப் பொருள் பாவனையால் பாடசாலை மாணவர்கள் உட்பட இளம் பராயத்தினருக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. இந்தப் பாதிப்பை இல்லாமல் செய்வதற்காக 2020 இல் நாட்டில் போதைப் பொருட்களையும் புகையிலைப் பாவனையையும் இல்லாதொழிப்பதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொண்டிருப்பதுடன், அந்த இலக்கை வென்றெடுக்க முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமை பயனுள்ளதொன்றாகும்.

இலங்கைக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் பாரிய பிரச்சினையாக போதைப்பொருள் பாவனை உருவெடுத்திருக்கும் நிலையில், அவற்றுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை அரசாங்கம் மட்டுமன்றி சிவில் சமூக அமைப்புகளும் முன்னெடுப்பது தேவையானதொன்றாகும். அத்துடன், போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படாமல் தடுக்க தரை, கடல், வான் மார்க்கத்தில் தீவிர கண்காணிப்பும் அவசியம்.

 

TOTAL VIEWS : 1143
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
m5sde
  PLEASE ENTER CAPTA VALUE.