இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாக தீவிரமடையும் வன்முறைக் கலாசாரம்
2017-07-27 12:05:41 | General

கலந்துரையாடல், கருத்தொருமைப்பாடு, தேசிய நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் "மந்திரம்'  போன்று உச்சாடனம் செய்யப்படுவது அதிகரித்துக் காணப்படுகின்ற போதிலும் அதற்கு சமாந்தரமாக அல்லது அதனையும் மேவிச் செல்வதாக வன்முறைக் கலாசாரம் வியாபகமடைந்து வருவதாகத் தோன்றுகிறது.

துப்பாக்கிச் சூடு, கொலைகள், கொள்ளைகள், வன்புணர்வு சம்பவங்கள் , தாக்குதல்களென சட்டம், ஒழுங்குக்கு சவாலானதும் பொது மக்களின் இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலானதுமான சம்பவங்கள் அதிகளவுக்கு தலைதூக்கியிருப்பதாக தோன்றுகிறது.


மறுபுறம் இன,மத சிறுபான்மையினருக்கு எதிரான குரோத உணர்வுப் பேச்சுக்களும் தீவிரமடைந்திருக்கின்றன. 2015 ஜனவரி 8 இற்கு முன்னரான தசாப்த காலப் பகுதியில் ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் கடும்போக்குக் கொள்கையினால் இன,மத சிறுபான்மைச் சமூகங்களும் குழுக்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் துன்பங்களுக்கும் இலக்காகியிருந்தனர்.

இந்நிலையில் அவர்களின் அமோக ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி சிறிசேன  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நியாயபூர்வமான அரசியல் தீர்வை முன்வைக்குமென்று தமிழ் மக்கள் மட்டுமன்றி ஏனைய சிறுபான்மைச் சமூகத்தவர்களும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். அதற்குச் சாதகமான சமிக்ஞைகளையும் அரசாங்கத்தின் தலைவர்கள் ஆரம்பத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆயினும், கடந்த இரு வருடங்களாக சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் மக்களின் முக்கியமான  பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் எதுவுமே கனதியான முறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. படையினர் வசமிருக்கும் தனியாரின் காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்தல் போன்ற முக்கியமான பிரச்சினைகள் எவற்றுக்கும் தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. 


உண்மையில் எண்ணிக்கையில் குறைவான சமூகங்கள் மீதான வன்முறைகள், அடாவடித்தனங்கள, மேலாதிக்கவாதச் சிந்தனை என்பன வேருடன் அகற்றப்பட வேண்டும். மாறாக இலங்கை பல்லின, பல் மத, பல் மொழி, பல் கலாசாரத் தன்மை கொண்ட நாடென்ற எண்ணப்பாட்டை எண்ணிக்கையில் பெரும்பான்மையான சமூகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் சகிப்புணர்வு என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டிருப்பதன் மூலமே சகல வடிவத்திலுமான வன்முறைகளை இல்லாதொழிக்க முடியும்.  

பன்முகத்தன்மை வாய்ந்த சமூகங்கள் வாழும் நாடொன்றில் சகல தரப்பையும் உள்ளீர்த்துக் கொள்ளாமல் பெரும்பான்மையானவர்கள் கடைப்பிடிக்கும் மதம், அவர்கள் பேசும் மொழி, அவர்களின் பண்பாடு, கலாசாரத்திற்கு முன்னுரிமை அளித்து ஏனைய சமூகங்களை இரண்டாம் பட்சமாகக் கருதி நடத்துவதற்கு முயற்சிக்கும் போது கருத்தொருமைப்பாடோ நல்லிணக்கமோ ஏற்படமாட்டாது. மாறாக பிளவுகளே மேலும் விரிசலடையும்.


நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன,மத, மொழி ரீதியான குரோத உணர்வுகளை தூண்டிவிட்டு அதன்மூலம் அரசியல் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளும் போக்கு பல தசாப்தங்களாக  நீடித்துச் செல்கின்றமையும் மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தம் ஏற்படுத்திய கோரம், பொருளாதாரப் பாதிப்பு என்பன பற்றி தெளிவான பாடத்தை கற்றுக் கொண்டிராத தன்மையுமே
"சகிப்புணர்வின்மை' தொடர்ந்து இருந்து வருவதற்கு காரணமாக காணப்படுகிறது.

சகல மதங்களுமே ஒற்றுமையையும் அன்பையும் பரிவிரக்கத்தையும் போதிக்கின்றன. ஆனால், மனிதர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் "சுவராக' மதத்தை குறுகிய எண்ணம் கொண்டவர்கள், கட்டியெழுப்பிக் கொண்டிருப்பதை காண முடியும். சகல மதங்களும் பிற உயிர்களிடத்து அன்பு கொண்டிருக்க வேண்டுமென்று போதிக்கின்ற போது யதார்த்தத்தில் நச்சுத் தன்மை வாய்ந்த குரோத கருத்துகள் பரப்பப்படுவதையும் அவதானிக்க முடியும். இவர்களே சகலவிதமான அநீதிகளிலும் சம்பந்தப்படுகின்றனர். அத்துடன், அநீதியை நியாயப்படுத்துவதற்கு தமது அதிகார பலம், பண பலத்தை அவர்கள் அதிகளவுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். 


எண்ணிக்கையில் சிறிய தொகையினரான இத்தகைய ஆட்களின் உண்மையான ஆர்வம் பொதுநலன் பற்றியதல்ல. மாறாக தமதும் தமக்கு நெருக்கமானவர்களினதும் செல்வம், அதிகாரம் என்பன நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென்பதே அவர்களின் அடிப்படை நோக்கமாகும். இந்த எண்ணப்பாடே மனிதத்துவத்துக்கு மிகவும் ஆபத்தான புற்றுநோயாகும். இந்நிலையில், தற்போது அதிகளவுக்கு தேவைப்படுவது இன, மத வேறுபாடுகளை முழுமையாக நிராகரித்து மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை கனதியாக முன்னெடுப்பதாகும். சகல மதங்களுமே வேற்றுமையில் ஒற்றுமையையும் ஆன்மீக உணர்வையும் போதிக்கின்றன. குறுகிய இலாபத்திற்காக அவற்றை வர்த்தக மயப்படுத்தக் கூடாது. 

TOTAL VIEWS : 1920
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5jijh
  PLEASE ENTER CAPTA VALUE.