நல்லிணக்கப் பயணத்திற்கான தடைகளைத் தாண்டுதல்
2016-07-29 12:16:03 | General

பொருளாதார நெருக்கடிகள், அரசியல் விவகாரங்களில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தால் நல்லிணக்கம் பற்றிய பேச்சுகளும் சமூகங்கள் மத்தியில் சௌஜன்யத்தை கட்டுறுதியுடன் வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு தொடர்பாக தீவிரமாக கரிசனை காட்டுவதும் குறைவடைந்து வருவதாக தென்படுகிறது.

நடைமுறை வாழ்வில் பீதி, அறியாமை, வெறுப்புணர்வு, தப்பெண்ணம், அதிகாரம், சுயநேர்மை என்பனவே பொது மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் தலையாய விடயங்களாக அமைந்திருக்கின்றன. உண்மையான நல்லிணக்கத்தை நோக்கிய பயணமானது இந்த முக்கியமான விடயங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்டதாக இருக்க வேண்டும்.

அத்துடன், நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இந்த விடயங்கள் உங்களிடமிருந்து நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டும் அல்லது விலகியிருக்க வேண்டுமென்பதை அடையாளம் கண்டுகொள்வதும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதும் தேவையானதொன்றாகும்.

மாமனிதர் மண்டேலா மற்றும் ஏனைய தலைவர்கள் பலர் தமது எதிராளிகள் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் உடனடியாக இல்லாமல் போய்விடமாட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக விருந்தமை முக்கியமானதும் அத்தியாவசியமானதுமான புரிந்துணர்வாக இருந்தது.

இந்த யதார்த்தத்தை அவர்கள் புரிந்துகொண்டமையே அவர்களின் எதிராளிகளை நண்பர்களாக உருவாக்கிக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு உதவியதாக பார்க்கப்படுகிறது.


அதேவேளை, நல்லிணக்கமானது சாத்தியப்படுவதற்கு எமது எதிர்த்தரப்பினர் இழைத்த தவறுகளின் அளவுக்கு நாங்களும் தவறுகளை இழைத்திருக்கிறோமா என்பதை விளங்கிக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.

அத்துடன், ஒவ்வொருவருமே தங்களின் வகிபாகத்தையும் நிலைவரத்தை தோற்றுவிக்க தாங்கள் எத்தகைய பங்களிப்பை வழங்கியிருந்தார்களென்பதையும் ஏற்றுக் கொள்வதற்கான விருப்பத்தைக் கொண்டிருப்பதும் தேவைப்பாடாகக் காணப்படுகிறது.

நல்லிணக்கம் அர்த்தபுஷ்டியானதாக சாத்தியப்படுவதற்கு நேர்மை, வெளிப்படையாக கருத்துகளைப் பகிர்ந்துகொள்தல், மன்னிப்பு வழங்குதல் என்பன தேவைப்படுகின்றன. இங்கு மன்னிப்பு என்பது தவறானதை சரியானதாக மாற்றிவிடுவதல்ல.

அத்துடன், இதன் நோக்கமும் தவறை நியாயப்படுத்துவதல்ல. ஒருவரின் மனிதத்துவத்தை பற்றிப் பிடிப்பதே இதன் அர்த்தமாகும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். 


அதேவேளை, மனித உறவுகளை மீள ஏற்படுத்துவதற்கு "பச்சாதாபம்' தேவையான விடயமாகும். இழைத்த செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாததென்ற உறுதிப்பாடாக இது விளங்குகிறது. யாவற்றுக்கும் மேலாக புதிய வாழ்க்கை முறையை இது வடிவமைக்கின்றது.

தவறாக நடத்தப்பட்ட, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து ஆச்சரியப்படும் விதத்தில் கருணை, மனிதாபிமானம், இதய சுத்தி என்பன மனித உறவுகளை கட்டியெழுப்புவதற்கு முதற்படியாக அமைந்ததென்பதற்கான வரலாற்று முக்கியமான முன்னுதாரணங்கள் பல இருக்கின்றன.

மன்னிப்பை நல்லிணக்கத்துடன் இணைத்துப் பார்த்து ஆட்கள் அடிக்கடி குழம்புவதும் உண்டு. சிறிதளவு மட்டத்திலாவது மன்னிக்கும் உணர்வு ஏற்படாவிடின் நல்லிணக்கம் ஏற்படாதென்பது உண்மைதான். 


அதேவேளை  பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களைத் தாங்கள் குறைந்தளவாவது தேற்றிக் கொள்ளாவிடின், மன்னிக்கும் உணர்வை சிறிதளவாவது கொண்டிராவிடின் நல்லிணக்கத்தை நோக்கி முன்னகர்வது கடினமான விடயமாக அமையும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாயின் ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகள் இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். தவறுகளும் பாதிப்புகளும் இழைக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடிதாக இருந்தால் மட்டுமே வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வுக்கான கட்டுமானங்கள் கலைக்கப்பட்டு நல்லிணக்கம் ஏற்பட முடியும்.

விசனம், பழிவாங்கும் உணர்வு, பீதி போன்ற எந்த உணர்வுகளும் நல்லிணக்க நடவடிக்கைகளின் போது இருக்கக் கூடாது. சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தண்டனை வழங்குவதே சமப்படுத்துவதாக அர்த்தப்படுகிறது.

இதய சுத்தியுடனான நல்லிணக்க நடவடிக்கைகள் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசியல் தீர்வை உள்ளடக்கியதாகவும் அதேசமயம் உணர்வு பூர்வமானதாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்தப் பாதையில் அரசாங்கம் அடியெடுத்து வைத்திருப்பதாக தெரிவித்து வருகின்றபோதிலும் தொடக்கப் புள்ளியாகவே இருந்து வருவதாகத் தென்படும் நிலையில் அதனைத் துரிதப்படுத்த முன்வர வேண்டும்.

நல்லிணக்க நடவடிக்கைளுக்கான பாதை கரடு முரடானதாகவே இருந்தாலும் தீர்க்கமான உறுதிப்பாடும் இதயசுத்தியுடனான விருப்பமுமே இந்தப் பயணத்தை வெற்றிகரமானதாக முன்னெடுக்க உதவும்.

TOTAL VIEWS : 2297
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
s7mda
  PLEASE ENTER CAPTA VALUE.