சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துதல்
2016-07-25 13:19:37 | General

சமூக ஊடகங்களின் வருகை பொது மக்களுக்கு அதிகளவுக்கு நன்மைகளைப் பெற்றுத் தருகின்ற அளவுக்கு பொறுப்பற்ற, தரக்குறைவான இணையத்தளமானது சமூக ரீதியான ஒத்திசைவான தன்மைகள் மற்றும் சௌஜன்யத்துக்கு பாரிய அச்சுறுத்தலை தருவதாக பரவலாக கவலையும் விசனமும் வெளிப்படுத்தப்படுகின்றது.

பொது மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைப் பரப்புவதற்கு இணையத்தளங்கள் பல துணை போகின்றன. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற ஜனநாயக உரிமையின் கீழ் வெறுப்பு, காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு அவை உதவுகின்றன.

ஜனநாயக ரீதியாக செயற்படும் சகல அரசாங்கங்களும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இடமளிக்கின்றன. ஆனால் பிறருக்கு எதிரான வெறுப்புணர்வுகளைப் பரப்புவதற்கான சுதந்திரமாக கருதி இந்த சுதந்திரத்தை வழங்கவில்லை. 


கொள்கை ரீதியாக சமூக உறுப்பினர்கள் மத்தியில் வேறுபாடுகள், கருத்துப் பேதங்கள் இருக்க முடியும். ஆனால் ஒவ்வொருவரினதும் கருத்துகளை வெளிபடுத்துவதற்கான உரிமையை அதாவது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை  பயன்படுத்தி தமக்கு விரும்பாத அல்லது எதிரான கருத்துகளை, நிலைப்பாடுகளை கொண்டிருப்போருக்கு எதிரான விதத்தில் கருத்துகளைப் பரப்புவதோ அல்லது வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதோ மனித நாகரிகத்திற்கு மாறானதொன்றாகும்.

அதேவேளை  சமூகங்களை  பிளவுபடுத்துவது தொடர்பான பரிந்துரைகளை ஜனநாயகம் கொண்டிருக்கவில்லை என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆதரவான குழுக்கள், எதிரான குழுக்கள் எனவும் சமூகத்தில் குறிப்பிட்டதொரு தரப்பை அந்நியப்படுத்தி ஓரங்கட்டி வைப்பதற்கும் ஜனநாயகத்தில் இடமில்லை. அவ்வாறு செய்தால் சமூகத்தை அது அழித்து நாசமாக்குவதாக அமையும். 


உண்மையில் பார்க்கும் போது சகல தரப்பினர் மத்தியிலும் வெவ்வேறு விதமான கருத்துகள் காணப்படும். எமது அவதானிப்புகளும் உரை பெயர்ப்புகளும் வேறுபட்டதாகவே பெரும்பாலும் இருக்கும். ஒரு தரப்பின் அரசியல் ரீதியான அபிப்பிராயம் அல்லது கருத்து மட்டும் தான் புனிதமானதெனவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதெனவும் கருத முடியாது.

அதேபோன்றே சமூக, பொருளாதார, மத ரீதியான சிந்தனைகளும் அபிப்பிராயங்களும் வெவ்வேறானவையாக விளங்குகின்றன. வேறுபட்ட கருத்துகள், எண்ணப்பாடுகள் மத்தியில் மோதல்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவற்றை தெரிவிப்போர் தரப்பு கருத்துகளாக ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர சொந்தமான அபிப்பிராயம் வேறுபட்டதாக இருக்கலாம்.

பல்வேறு கருத்துகள், விவாதங்களின் போது வெளிப்படுத்தப்பட்டு நியாயபூர்வமானவையென கற்றறிந்த சமூகத்தால் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுபவற்றுக்கு சமூக ரீதியான அங்கீகாரம் அதிகளவுக்கு கிடைக்கிறது.

ஆனால் இணையத்தளங்களைப் பயன்படுத்தி  தனிப்பட்ட ரீதியான பகைமை, காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வதை காண முடிகிறது. இணையத்தளங்களை ஒழுங்கமைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான செயற்பாட்டுத் திறன் வாய்ந்த சட்டங்களை பல நாடுகள்  இன்னமும் ஏற்படுத்தவில்லை. 


இதனால் இணையத்தளங்களை தான் தோன்றித்தனமாக பயன்படுத்தும் நடவடிக்கைகளும்  பெருகி வருகின்றன. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள அல்  கைடா,  ஐ.எஸ். ஐ.எஸ்., போஹோ ஹரம் போன்ற தீவிரவாத அமைப்புகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஆட்சேர்ப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது.பிற மதத்தவர்கள், இனத்தவர்கள் மீது வெறுப்புணர்வைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களை அந்த இயக்கங்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்பின் உறுப்பு நாடுகள் அந்த அமைப்பின் வழிகாட்டலின் கீழ் இணையத்தளங்களை ஒழுங்கமைப்பதற்கான செயற்பாட்டுத் திறன் வாய்ந்த சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை "காட்டு தர்பார்' நடத்துவதற்கு  இடமளிக்காத வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்புடையதாகவும் அதே சமயம் வெறுப்புணர்வுகளை பயன்படுத்துதல் மற்றும் ஏனைய சமூக விரோத நடவடிக்கைகளுக்கு  இடமளித்தல் போன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 


சைபர் குற்றங்கள் நாங்கள் நினைப்பதிலும் பார்க்க பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துபவையாகும். இக்குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் அமைப்புகளை தொழில்சார் நிபுணத்துவத்துடன் கூடிய அதிகாரிகளை உள்ளடக்கி அமைக்க வேண்டும். இப்பிரச்சினையை  கையாள்வதற்கு சைபர் குற்ற நிலையங்களை அமைக்க முடியும்.

வளர்ச்சியடைந்த நாடுகள் பல அத்தகைய நடைமுறைகளை உள்வாங்கியிருக்கின்றன. பாதிப்பை ஏற்படுத்தும் இணையத்தளங்களை அகற்றுவதன் மூலம் தனிப்பட்டவர்களின் பாதுகாப்பை மட்டும் உறுதிப்படுத்துவதன்றி தேசிய பாதுகாப்புக்கும் அனுசரணையாக அமையும். 

TOTAL VIEWS : 1939
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7fooi
  PLEASE ENTER CAPTA VALUE.