இழுபட்டுச் செல்லும் மீனவர் பிரச்சினை
2016-07-22 12:44:10 | General

இலங்கை  இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் இழுபட்டுச் செல்வதாக தோன்றுகிறது. இப் பிரச்சினையால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வட பகுதி மீனவர்களே அதிகளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசித்தல் மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமாக  மடிவலைகளைப் பயன்படுத்துதல், தென்பகுதி மீனவர்களின் மிதமிஞ்சிய வருகையும் அவர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்ற இறங்கு துறை தொடர்பான பிரச்சினைகள் போன்றவை தொடர்பாக வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் உட்பட மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் தொடர்ந்து  தமது கவலைகளையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றன.

அதேவேளை சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வரும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிலையில் அவர்களையும் அவர்களின்  கைப்பற்றப்பட்ட படகுகளையும் மீட்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி வருவதும் தொடர்ந்து கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

இழுவைப் படகுகள் மூலம் மடிவலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் கடல் வளத்தை சூறையிடுவதாக வட பகுதி  மீனவர்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டும் சாத்வீக ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்ற போதிலும் அவர்களின் பிரச்சினைக்கு திருப்திகரமான தீர்வு இன்னமும் கிட்டவில்லை.

மடிவலைகளைப் பயன்படுத்தி இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதால் கடல் வளம் முழுமையாக நாசமடைந்து விடுகிறது. கடல் வாழ் உயிரினங்கள், முருகைகற்கள் சில நிமிடங்களுக்குள் அழிக்கப்படுகின்றன. 


இந்தக் காரணங்களினால் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதை  2013 இல் சிலி தடை செய்தது. அந் நாடே கடல் வளத்தைப் பாதுகாக்க இத்தகைய நடவடிக்கையை எடுத்த  முதல் நாடாகும். இதனைத் தவிர இந்தோனேஷியா, நியூஸிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிப்பதை தடை செய்துள்ளன.

இழுவைப் படகு மூலம் மீன்பிடிப்பதை முழுமையாகத் தடை செய்வதற்கு சட்ட ரீதியான திருத்தப் பிரேரணையை  2015 ஏப்ரல் 21 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்திருந்தார். பின்னர்  2015 ஆகஸ்டில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்தப் பிரேரணை பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை.

பின்னர் அண்மையில் பாராளுமன்றத்தில் இத் திருத்தச் சட்ட மூலம் மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்தச் சட்ட  மூலத்தை வர்த்தமானி அறிவித்தலூடாக பிரகடனப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இரு வாரங்களுககு முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இச்சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சரியான திசையில் செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமையுமென தோன்றுகிறது. வாராந்தம் ஆயிரக் கணக்கில் இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 


இந்தப் படகுகள்  தமது வாழ்வாதாரத்தை நாசமாக்குவதாக வட பகுதி மீனவர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். அதேசமயம் இலங்கைக் கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமைகளை தாங்கள் கொண்டிருப்பதாக இந்திய படகு உரிமையாளர்கள் உரிமை கோருவதையும் காண முடிகிறது.

ஆயினும் இலங்கைக் கடற்பரப்புக்குள் சென்று இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்காமல்  சர்வதேசக் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுமாறு இந்திய மீனவர்களுக்கு அந்நாட்டு மத்திய அரசாங்கம் அடிக்கடி அறிவுரை கூறிவருவதையும் காண முடிகிறது. மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தால் வட பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர். 


 அவர்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டு சொல்லொணா நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொண்டிருந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்து கடந்த ஏழாண்டு காலத்திலும் அவர்கள் தமது வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை சுமுகமாக மேற்கொள்ள முடியாத நிலைமை நீடித்துச் செல்கிறது.

இந்நிலையில் வட பகுதி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வு காணப்பட வேண்டும். வட மாகாண  சபை ஸ்தாபிக்கப்பட்டு மீன்பிடித் துறைக்கான அமைச்சும் இயங்கி வரும் நிலையில் இலங்கை  இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில்  வட மாகாண மீன்பிடித்துறை அமைச்சையும் இணைத்துக் கொண்டு மீனவர்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி  கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும்.

இப் பிரச்சினை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெரும்பாலான மீனவர்களின் ஜீவனோபாயப் பிரச்சினை என்பதை முன்னிறுத்தி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து  பாக்கு நீரிணைக்கு இருமருங்கிலுமுள்ள மீனவர்கள் தமது தொழிலை சுமுகமாக முன்னெடுப்பதை இரு நாட்டு அரசாங்கங்களும் துரிதமாக உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் இந்தியப் படகுகளை வெறுமனே தடுத்து நிறுத்துவதால் மட்டும் இப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடமுடியாது. இரு நாடுகளும் பாக்கு நீரிணை கடல் வளத்தை பாதுகாப்பதற்கு அதி முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டியது அவசரத் தேவைப்பாடாக தென்படுகிறது.

TOTAL VIEWS : 2110
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
s6one
  PLEASE ENTER CAPTA VALUE.