அதிகரித்துச் செல்லும் மத சகிப்புணர்வின்மை
2017-10-27 09:55:53 | General

உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் மத சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மதம் அல்லது  நம்பிக்கை சம்பந்தப்பட்ட சமூக ரீதியான விரோத உணர்வுகள் அதிகளவுக்கு கொண்ட நாடுகளில் வாழ்வதாக  மத உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் அகமட் சாகீட் பொதுச் 
சபையின் மனித உரிமைகள் குழுவுக்கு இந்த வாரம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மத ரீதியான  சகிப்புணர்வின்மை சர்வதேச மட்டத்தில் காணப்படுவதுடன், உலகம்  பூராகவும்  அதிகரித்து வருவதாக  அவர் குறிப்பிட்டிருப்பதுடன் மாற்றுக் கருத்துகளை கொண்டிருப்போரை  அடக்குவதற்கு பயன்படுத்தக்கூடிய மத நிந்தனைக்கு எதிரான சட்டங்களையும் 70 க்கும்  மேற்பட்ட  நாடுகள் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சர்வதேச  மனித உரிமைகள் தொடர்பான தரத்தை மீறுவதாக அவை அமைந்திருப்பதாவும் மத நிந்தனை சட்டத்தை அகற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.


அதேவேளை  மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை நிலை நிறுத்துவதில் அரசாங்கங்கள் கவனத்தைச்  செலுத்த வேண்டுமென மத சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளரான சாகீட்  அழுத்தி உரைத்திருப்பதை காண முடிகிறது. உண்மையில் மதமொன்று இறுக்கமானதாக்கப்படும் போது அது துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றதெனவும்  ஐதீகமான தன்மை உடையதாகவும் அமானுஷ்யமானதாகவும் மார்க்ஸிஸ்ட்டுகள் கூறுவது போன்று "அபினி' யாக  மாறி விடுகின்றதெனவும் நவீன சிந்தனைவாதிகள்  கூறுகின்றனர்.

உண்மையில் மனிதத்துவத்துக்கு எதிரானதாக மதமொன்று இருக்குமானால் அது பொதுமக்கள் மனங்களை நஞ்சுத்தன்மை கொண்டதாக்கிவிடும்.  நாடொன்றின் பெரும்பான்மையினரின் மதம் மற்றும் கலாசார நடைமுறைகளுடன் மட்டும் "தேசியவாதம்' தன்னைப் பிணைத்துக் கொள்ளும் போது  சிறுபான்மை மதக் குழுக்களின் சுதந்திரங்கள் மறுக்கப்படும் தன்மையும் காணப்படுகிறது. 


பெரும்பான்மை  இன மதச் சமூகத்தினரை மையப்படுத்திய தேசியவாதமென்பது  உண்மையான  ஜனநாயகமாக ஒருபோதும் அமைய முடியாது. அத்தகைய தேசியவாதம்  ஹிட்லரின் "நாசிஸ' அல்லது முசோலினியின் "பாசிஸ' மாகவே  மாறிவிடும்.  பல்லின, பலமத, பலமொழி, பல்கலாசாரத் தன்மை கொண்ட நாடொன்றின் "பன்முகத்' தன்மைக்கு மதிப்பளிக்காவிடின் அங்கு  "சமாதான சகவாழ்வு'  என்பது தொடர்ந்தும்  சவாலுக்கு உட்பட்டதாகவே இருந்துவரும்.

அதனாலேயே  பன்முகத் தன்மை கொண்ட மக்கள் வாழும் பல நாடுகள் சோசலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயக நாடுகளென்று "அரசியலமைப்பு' ரீதியாக தங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும்  ஆசியாவின் நீண்ட கால பாராளுமன்ற  ஜனநாயகங்களிலொன்றெனக் கருதப்படும்  இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள்,  கிறிஸ்தவர்கள் உட்பட இன, மத  சிறுபான்மைச் சமூகங்கள் சமூகத்தில் விளிம்பு நிலையில்  தாங்கள் இருக்கின்றார்களென்ற உணர்வையே  அதிகளவில் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் பேசும்  மக்களைப் பொறுத்தவரை வட, கிழக்கு  மாகாணங்களில் அவர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் பாராளுமன்றத்தில்  அவர்களின் பிரதிநிதித்துவம் சிறியளவாக இருக்கும் நிலையில் பெரும்பான்மையினரால்  ஓரங்கட்டப்படுகின்றனரென்ற உணர்வைக் கொண்டிருக்கின்றனர். 


நாட்டின்  அரசியல் முறைமையே இன, மதச் சமூகங்கள் மத்தியில்  பிளவுகளை அதிகரிக்கச் செய்திருப்பதாக தேசிய சமாதானப் பேரவை போன்ற ஆய்வு மற்றும்  செயற்பாட்டாளர்களடங்கிய அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இன, மத  ரீதியான பிளவுகள் நாடொன்றில் இருக்குமானால்  நிரந்தரமான சிறுபான்மையினர் மீது  நிரந்தரமான பெரும்பான்மையினரால் சர்வாதிகாரம் செலுத்தக்கூடிய பெரும்பான்மை ஆட்சியாகவே இருக்க முடியும் என்று தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா குறிப்பிட்டிருந்தார். 

 உண்மையில் இன, மத ரீதியான  மேலாதிக்க சிந்தனைளுக்கு  இடமாளிக்காமல் சகல இன, மதக் குழுக்களும் சமமானவர்களாக எந்தவொரு பாரபட்சமுமின்றி நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள்  சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படுவது மட்டுமன்றி இதய சுத்தியுடன்  அவற்றை நடைமுறைப்படுத்தும் போதே இலங்கை போன்ற பன்முகத் தன்மை கொண்ட மக்கள் வாழும் நாட்டில்  நீடித்ததும் நிலையானதுமான சமாதான சகவாழ்வென்ற எதிர்பார்ப்பு நிறைவேற இயலும்.   

TOTAL VIEWS : 1472
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
e1qab
  PLEASE ENTER CAPTA VALUE.