2018; எதிர்பார்ப்புகளும் கவலைகளும்
2018-01-02 12:01:19 | General

2018 இன்று பிறந்திருக்கிறது. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல' என்பர். நல்லனவற்றைச் சிந்திப்போம். நல்லவற்றை அரவணைத்துக்கொள்வோம். அதேவேளை கடந்த வருடத்தில் நாம் கடந்து வந்த தீங்கானவற்றை, பாதகமான விடயங்களை படிப்பினைகளாகக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு சிந்திப்போம்.

வாழ்வு முற்றிலும் காலத்தை ஆரத்தழுவியதாகும். காலம் எமக்கு வழங்கிய சிறப்பான வெகுமதிகளில் ஒன்று “நம்பிக்கை‘. மனித மனங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் இந்த “நம்பிக்கை‘யே. இந்த நம்பிக்கை தோன்றுவதற்கும் அதனை மனங்களில் இருத்திக் கொள்வதற்கும் காலமே இடமளிக்கின்றது. வாழ்வெனவொன்று இருக்குமானால் அங்கு "நம்பிக்கை' யென்றதொன்று இருக்குமென்பது நீண்ட கால அனுபவத்தின் வெளிப்பாடு.

எம்மை விட்டுச்சென்ற வருடத்தில் நாங்கள் நம்மையானவற்றையும் அதேசமயம் தீமையானவற்றையும் எதிர்கொண்டிருக்கிறோம். ஆதலால் பிறந்திருக்கும் புத்தாண்டிலும் எமக்கு நன்மையும் கிட்டும், தீங்கையும் எதிர்கொள்ள நேரிடும் சாத்தியப்பாடு உள்ளதென்பதை அனுமானித்துக்கொள்ள முடியும். அதனால், காலம் எமக்கு அளித்திருக்கும் “ வருடம் ‘ என்ற நாட்காட்டி வெகுமதியை  நாம் எவ்வாறு பயன்படுத்தப்போகிறோம் என்பதிலேயே யாவும் தங்கியுள்ளது. விசேடமாக 2018 ஆம் ஆண்டை “ காலம் ‘ எமக்குத் தந்திருக்கிறது. 

கடந்த காலத்தில் எமக்குக் கிடைத்திருந்த “ தருணத்தை ‘ நாங்கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளோம் என்பதை தீர்மானிப்பதற்கான அளவுகோல்களில் ஒன்றாக தனிப்பட்டதும் ஒட்டுமொத்தமானதுமாக “மனமுதிர்வு‘ விளங்குகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு பிறந்திருக்கும்  புத்தாண்டிலும் நேரத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வதென எம்மால் சிறப்பான முறையில் திட்டமிட முடியும்.

எமது வாழ்வை சிறப்பானதாகவும் வளமானதாகவும் அதிகளவுக்கு ஆக்கபூர்வமானதாகவும் உருவாக்கிக்கொள்வதற்கு மற்றொரு புத்தாண்டை காலம் எமக்கு கொடையாக வழங்கியிருக்கும் நிலையில், எமக்கும் எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் மேலும் நன்மையளிக்கக் கூடியவற்றை செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றதென்பதை மனங்களில் இருத்திக் கொள்தல் அவசியம். அத்துடன், எமது உலகத்தை அதாவது நாம் வாழும் பூமியை சிறப்பானதாக உருவாக்குவதற்கான காலமும் எமக்குக் கொடையாக கிடைத்திருக்கிறது.

எமது சுற்றுச் சூழலை நாம் வாழ்வதற்கு ஏற்புடையதாக வைத்திருப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக நாம் இதனைக் கருதவேண்டும். அத்துடன், நாங்கள் அற்பத்தனமான விடயங்கள், கோபம், அகங்காரம், பக்கச்சார்புணர்வு, தப்பபிப்பிராயம் போன்ற எதிர்மறையான குணாம்சங்களை விலக்கிக் கொள்வதற்கான தருணமும் எமக்கு கிடைத்திருக்கின்றதென்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மனிதத்துவத்தை, மனிதாபிமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை விடைபெற்றிருக்கும் வருடம் அவர்களின் அபிலாஷைகள், விருப்பங்கள், ஏக்கங்களை நிறைவேற்றியிருக்கவில்லையென்றே கூறவேண்டும்.

குறிப்பாக வட, கிழக்கை வரலாற்றுப் பூர்வ வாழ்விடமாக கொண்ட தமிழ் மக்கள் குறிப்பாக உக்கிரமான இறுதிப்போர் இடம்பெற்ற வன்னிப் பிராந்தியம் உட்பட கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களில் கணிசமான தொகையினர் இயல்பு வாழ்வை முன்னெடுக்க முடியாமல் அல்லல்படுகின்றனர். 

2015 ஜனவரிக்குப் பின்னர் கடந்த மூன்று வருடங்களாக அடிப்படை சுதந்திரங்களை பெற்றுக்கொள்வதில் முன்னேற்றம் காணப்பட்டபோதிலும் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமலும் ஜீவனோபாயத்திற்கான தொழில் வாய்ப்பின்றியும் சுய தொழிலை மேற்கொள்வதற்கு மூலதனம் உட்பட அடிப்படை வசதிகளின்றியும் பல குடும்பங்கள்  துன்பப்படுவது தொடர்கிறது.
அதேவேளை, இனநெருக்கடிக்கு "அரசியல் தீர்வு' என்பதும் “ கானல் நீராகவே‘ காணப்படுகிறது.

புதிய அரசியலமைப்பொன்றினூடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென்ற நம்பிக்கையை வட, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளும் பிரதிநிதிகளும் அதிகளவுக்கு கடந்த மூன்று வருடங்களாக ஏற்படுத்தி வந்த நிலையில், தென்னிலங்கையில் அந்தப் “ பேச்சே' இப்போது மேலெழாத நிலைமை காணப்படுகிறது. இப்போது  நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சித் தேர்தல்களிலேயே அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் “ சுறுசுறுப்பாக ‘ ஈடுபட்டிருக்கின்றனர்.

இனி அடுத்துவரும் ஆண்டுகளில் மாகாண சபைகள் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்று தொடர்ந்து தேர்தல்கள் இடம்பெறவேண்டியிருப்பதால் அரசியல்களம் தேர்தல் தொடர்பாக முழுக்  கவனத்தையும் கொண்டிருக்கும். இந்நிலையில், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட முக்கியமான பிரச்சினைகள் “பேசாப் பொருளாகி‘விடும்.

ஆனால், எதிர்நோக்கக் கூடிய இந்த நிலைமையில் மாற்றத்தை சாதகமான முறையில் ஏற்படுத்த பொது மக்களால் இயலும். சுயநலன்களை ஒதுக்கிவிட்டு பொது நலன்கருதி மக்கள் அணிதிரளும் போது எம்மைச் சூழ மாற்றங்கள் ஏற்படுவதை நாம் கண்டு கொள்ள முடியும். பிறந்திருக்கும் “2018‘ நன்மைகளை, நாம் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும் இலக்குகளை எட்டுவதற்கு கொண்டு செல்லுமெனவும் சாதகமான முறையில் சிந்திப்போம்.

TOTAL VIEWS : 1689
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yb1wa
  PLEASE ENTER CAPTA VALUE.