விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் மறுபக்கம்
2017-03-29 11:23:55 | General

விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற போதிலும் மறுபுறம் பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்து வருகிறது. உதாரணமாக "தானியங்கி' இயந்திரங்களினால் "மனித வலு'வின் தேவைப்பாடு அருகிவருகின்றது. ஆனால் சனத்தொகை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் வேலைவாய்ப்பின்மை உக்கிரமடையும் நிலைமை காணப்படுகிறது.

கணினிகளின் வருகை தொழில் வாய்ப்பை பாதிக்கச் செய்து விட்டதாக ஆரம்பத்தில் கவலைகள் வெளிப்படுத்தப்பட்டன. அதேவேளை வளர்ச்சியடைந்த நாடுகளில் ரோபோக்கள் போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகள் மக்களின் தொழில் வாய்ப்புக்களை இல்லாமல் செய்துவிடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

சமீப காலத்தில் உலக கோடீஸ்வரரும் மைக்ரோ சொவ்ற்றின் ஸ்தாபகருமான பில்கேற்ஸ், ரோபோக்களுக்கு வரி அறவிடப்படுவதை நியாயப்படுத்தும் விதத்தில் கருத்தை வெளியிட்டிருந்தார். அந்தவிடயம் தொடர்பான விவாதம் ஊடகங்களில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடியும்.


ரோபோக்கள் போன்ற தானியங்கிகளினால் ஏற்படும் சமூக ரீதியான தாக்கங்களுக்கான  இழப்பீடாக, ரோபோக்களுக்கு வரி அறவிடுவதன் மூலம் பெறப்படும் பணத்தின் மூலம் உலகின் அடிப்படை வருமானத்திற்கான நிதியை ஈட்டிக் கொள்ளமுடியுமென்பது பில்கேற்ஸின் வாதமாக காணப்படுகிறது. நடைமுறையில் இதன் சாத்தியப்பாடுகள் எவ்வளவு தூரத்திற்கு சாதகமாக அமையுமென்பது பற்றி உடனடியாகத் தெரியாவிடினும் தானியங்கிகளால் ஏற்படக்கூடிய சமூகத்தாக்கங்கள் குறித்து இந்த யோசனை அதிகளவு கவனத்தை ஈர்த்துக் கொள்ளுமென்பது நிச்சயமான விடயம்.

ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றம் ஒவ்வொரு கட்டத்தை எட்டிச்செல்லும் போதெல்லாம் இத்தகைய கவலைகள் வெளிப்படுத்தப்படும் உதாரணங்கள் நீண்டகாலமாக இருந்து வருவதையும் மறுக்க முடியாது. கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது இத்தகைய கவலைகள் அதிகளவுக்கு வெளிப்படுத்தப்பட்டன. கணினி மயமாக்கத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகள் கூட ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் கணினிகள் பொருளாதார நடவடிக்கைகளில் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதையும் அதனால் அதிகளவு அனுகூலங்களை மனித சமூகம் பெற்றுவருவதையும் "அனுபவம்' வெளிப்படுத்தியுள்ளது. கணினிகளின் பாவனை அதிகரிப்பால் வேலைவாய்ப்பு பறிபோகுமென்ற அச்சம் ஆரம்பத்தில் அதிகமாக காணப்பட்டது.

ஆயினும் எமது இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் கூட கணினிகளின் அறிமுகம் அதிகளவு வேலைவாய்ப்புக்களை தோற்றுவித்துள்ளதுடன் படிப்படியாக சகல துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதையும் அதனால் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு மத்தியதர வர்க்கத்தினரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதையும் கடந்த தசாப்த காலத்தில் அதிகளவுக்கு உணரக்கூடியதாகவுள்ளது. 


இதேபோன்று மனிதர்களின் இடத்தை ரோபோக்கள் இல்லாமல் செய்துவிடாமல், மனிதர்கள் ஒருபோதும் செய்திராத வேலைகளை ரோபோக்கள் செய்துமுடிக்கும் சாத்தியப்பாடும் காணப்படுகின்றது. இந்த நிலையில் ரோபோக்களுக்கு வரி அறவிடும் யோசனை  தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்காமல் உற்பத்தித்துறையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது பொருளாதாரத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அதனால் தொழில் வேலைவாய்ப்பிலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.ஆயினும் நவீன தொழில்நுட்பத்தின் ஆற்றல் வேலைவாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்பதை மறுக்கமுடியாது.

ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தாமல் ஏற்படக்கூடிய தாக்கங்களுக்கு பதிலீடான புதிய தீர்வுகளை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அதேவேளை உலகில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி படுமோசமாக அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த ரோபோக்களுக்கு வரியை அறவிடும் போது உலக சனத்தொகையில் ஒரு சதவீதத்தவர்களே தற்போதைய நிலையில் இந்த வரியை செலுத்த வேண்டியவர்களாக இருப்பார்கள்.

"ரோபோ மயமாக்கம்' அன்றாட வாழ்க்கைக்கான தொழில்வாய்ப்புக்களில் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால் மக்கள் மத்தியிலுள்ள அதிகளவிலான ஆற்றலினூடாக இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு கற்றுக்கொள்வார்களென்பதை கடந்தகால அறிவியல் தொழில்நுட்ப ரீதியான அபார முன்னேற்றங்கள் வெளிப்படுத்தியுள்ளன. 


மனித மனங்கள் புரிந்துகொள்ள முடியாத பல்வேறு பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவின் மேம்பாடுகள் இதுவரை தீர்வுகளை தேடித்தந்திருக்கின்றன என்பதையும் நிராகரிக்க முடியாது. அதேவேளை மனிதர்களின் அதிகபட்ச செயற்பாடுகளை "செயற்கை நுண்ணறிவு' அகற்றிவிடும் அச்சுறுத்தல் இல்லாமல் போய்விடவில்லை. ஆனால் ரோபோக்கள் மட்டுமன்றி சாதாரண இயந்திரங்கள் தொடக்கம் அதிநவீன கணினிகள் வரை மனிதர்களின் செயற்பாடுகளுக்கு பதிலீடாக அமையமுடியும்.

ஆனால் இத்தகைய முன்னேற்றங்களுக்கு தடையை ஏற்படுத்தியிருந்தால் மனித நாகரீகம் பழைய கற்கால யுகத்திலேயே முடங்கி இருந்திருக்கும்.  ஆனால் தொழில்நுட்பத்துறை மீது வரி விதிப்பது புதிய கண்டுபிடிப்புக்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும். இதனால் தானியங்கிகளால் ஏற்படும் பாதிப்பை இல்லாமல் செய்வதற்கான கொள்கையை எவ்வாறு பயன்படுத்துவதென்பது பற்றிய "அறிவுப்புரட்சி' உலகத்திற்கு தேவைப்படுகிறது.

அதேவேளை பெரும் கடன்சுமையால் பொருளாதார ரீதியில் நலிவடைந்த சூழ்நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளுக்கு ரோபோக்களுக்கு வரி விதிக்கும் யோசனை பற்றிய விவாதம் தற்போதைய நிலையில் பொருத்தப்பாடற்றதாக தோன்றுமாக இருக்கின்றபோதிலும் உலகமயமாகிவிட்ட இன்றைய நிலையில் சர்வதேச ரீதியான எந்தவொரு தாக்கமும் குறிப்பாக பொருளாதார ரீதியாக ஏற்படும் சாதக, பாதக விளைவுகளிலிருந்தும் எந்தவொரு தேசமும் தாக்கத்தை எதிர்நோக்காமல் இருக்கமுடியாது.

TOTAL VIEWS : 1461
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
bw8gt
  PLEASE ENTER CAPTA VALUE.