இழுபட்டுச் செல்லும் 'பொறுப்புக் கூறல்'
2017-08-01 10:04:17 | General

நாட்டில் நிலையானதும் நீடித்ததுமான சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு வட, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்துக்குக்கும் சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கும் உரிமைகளுக்கான ஆர்வலர்களும் அமைப்புகளும் வலியுறுத்தல் விடுத்து வருகின்றமை தொடர்கதையாகியிருப்பதாக தென்படுகிறது. போரின் இறுதிக்கட்டம் உட்பட யுத்தகாலத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உட்பட பாரதூரமான விடயங்கள் தொடர்பான பொறுப்புக் கூறலும் உண்மையை கண்டறிதல் அவசியமென்பதை வலியுறுத்தி வட, கிழக்கை வரலாற்றுபூர்வ வாழ்விடமாகக் கொண்ட தமிழ் மக்கள் குறிப்பாக பெண்கள் தொடர்ந்து சாத்வீக வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 6 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் உறுதி மொழியை வழங்கியிருந்தது.


உண்மை ஆணைக்குழுவை அமைத்தல், காணாமல் போனோரைக் கண்டறியவும் இழப்பீடுகளை வழங்குவதற்கும் விசேட நீதிமன்றமொன்றையும் அலுவலகங்களையும் நிர்மாணிப்பதற்கான விசேட அனுமதியும் அதற்குக் கிடைத்துள்ளது. ஆயினும் வட, கிழக்கு மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரம்கட்டப்பட்டவர்களாகவே தொடர்ந்து இருந்து வருகின்றனர். காணாமற் போனோரைக் கண்டறியும் குழுவினரின் தொடர்ச்சியான போராட்டம், சொந்தக் காணிகளை மீளக் கையளிக்குமாறு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான நல்லிணக்க முன்முனைப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே காணப்படுகின்றன. அத்துடன் போரின் வடுக்களை அதிகளவுக்கு கொண்டிருக்கும் பெண்களே பெரும்பாலான குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. 


வட, கிழக்கில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுத்த விதவைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. காணாமல்போன உறவினர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்காமலிருப்பதுடன் இடம்பெயர்வும் ஜீவனோபாய நெருக்கடியும் உளரீதியான பாதிப்பும் பாலியல் வன்முறை, சுரண்டலுக்கு இலக்காகும் நலிந்த தன்மையும் அதிகளவு இராணுவப் பிரசன்னம் கொண்ட சூழலுக்குள் தொடர்ந்து இருந்து வரும் நிலைமையும் வட, கிழக்கு பெண்களைப் பொறுத்தவரை தொடர்ந்து நலிவான நிலைமையிலேயே வைத்திருக்கின்றதென்பதை அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் மட்டுமன்றி உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புகள் சுட்டிக்காட்டி வருவதுடன் நிலைமாற்ற நீதி தொடர்பான கொள்கைகளை வடிவமைக்க பெண்கள் அதிகளவிலான வகிபாகத்தை கொண்டிருக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தின் மீது வலியுறுத்தல்களும் தீவிரமடைந்திருப்பதை காணமுடிகிறது. சர்வதேச நெருக்கடிக்குழு என்ற உரிமைகளுக்கான கண்காணிப்புக் குழு தனது பிந்திய அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை கொழும்புக்கு வழங்கியிருப்பதுடன் அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வட, கிழக்கில் மக்கள் மத்தியில் அமைதியை தோற்றுவிக்க முடியுமெனவும் தெரிவித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.


நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் பரந்துபட்டதாக விளங்குவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கொழும்பு அளித்திருக்கும் உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறும் காணாமற் போனோர் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகங்கள் மூலம் சகல சமூகங்களுக்கும் பயன்கிட்டுமென்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விளக்கமளிக்குமாறும் காணாற்போனோர் தொடர்பான அலுவலகங்களை வட, கிழக்கில் உடனடியாக ஸ்தாபித்து அங்கு சுயாதீன அலுவலர்களை நியமித்து செயற்பட வைக்குமாறும் இழப்பீடுகளை வழங்கும் நிலையத்தை அமைத்துப் போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்கள் அனுகூலமடைவதற்கான செயற்றிட்டங்களை மேற்கொள்ளுமாறும் ஐ.நா., உதவி வழங்கும் அமைப்புகள், மாகாண சபைகள் என்பவற்றின் ஒத்துழைப்பைப் பெற்று யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பொருளாதாரத் தேவைகளை மதிப்பீடு செய்யுமாறும் சர்வதேச நெருக்கடிக்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பால் நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்செயல்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து அந்த சர்வதேச அமைப்பு அழுத்தி உரைத்திருக்கிறது.

TOTAL VIEWS : 1864
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
znv5d
  PLEASE ENTER CAPTA VALUE.