தொழில் வாய்ப்பை அதிகரிக்க கூடிய கவனம் தேவை
2017-04-05 10:56:45 | General

வேலைவாய்ப்பை பெற்றுத் தருமாறு அரசியல்வாதிகளின் பின்னால் இளைஞர்கள் செல்வதை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருப்பது வரவேற்கத்தக்கதும் ஆரோக்கியமானதுமான அறிகுறியாகத் தென்படுகிறது. பட்டதாரிகள் உட்பட வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வட, கிழக்கில் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொழில் வழங்குமாறு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் ஏனைய பிராந்தியங்களிலும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், க.பொ.த. உயர்தரம், சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்களும் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.  

சனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தொழில்வாய்ப்புகள் பெருகாவிடின் வேலையில்லாப் பிரச்சினை அதிகரிக்கவே செய்யும். தொழில் வாய்ப்பின்றி இளைஞர், யுவதிகள் இருப்பது சமூக ரீதியான பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான மூலதனமாகக் கருதப்படும் இளைய சமூகத்தின் ஆற்றலை உரிய முறையில் பயன்படுத்த அரசாங்கங்கள் தவறிவிடுவதால் பொருளாதாரத்திற்கு மட்டுமன்றி சமூக ரீதியான பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன.


அதேவேளை, அரசாங்கத் தொழில் வாய்ப்புகளையே பட்டதாரிகள் உட்பட அநேகமானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தன்மையும் சமூகங்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிக் காணப்படுகின்றது. ஓய்வூதியம் உட்பட இதர பல வசதி வாய்ப்புகள் கருதி அரச உத்தியோகத்தில் அதிக நாட்டம் கொள்வது பிரிட்டிஷ் காலனியாட்சிக் காலத்திலிருந்து இலங்கையில் மட்டுமன்றி இந்தியா உட்பட காலனித்துவ ஆட்சியின் கீழிருந்து வந்த நாடுகள் மத்தியில் தொடர்ந்து காணப்படுகிறது.

திறந்த பொருளாதாரத்தை நாடுகள் உள்ளீர்த்துக் கொண்ட பின்னர் தனியார் துறை குறிப்பாக கோப்பரேற்துறைகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் தன்மை காணப்பட்டாலும் இப்போதும் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் மத்தியில் அரச சேவையில் இணைந்து கொள்ளும் விருப்பமே அதிகளவுக்கு மேலோங்கி காணப்படுகிறது. அரசாங்கங்கள் தொழில் சட்டங்களையும் தொழிலாளர் நலனோம்பல் ஏற்பாடுகளையும் கடந்த காலங்களிலும் பார்க்க அதிகளவுக்கு உள்ளீர்த்துக் கொண்டிருக்கின்ற போதிலும் அரசாங்கத் தொழில் மீதான விருப்பம் தொடர்ந்தும் இருந்து வருகிறது.


அதேவேளை, அரசாங்கத் தொழில்களை மாத்திரமன்றி தனியார் துறையிலும் வேலைவாய்ப்பை பெற்றுத் தருமாறு அரசியல்வாதிகளின் பின்னால் இளைஞர்கள் செல்வது இப்போதும் காணப்படுவதை ஜனாதிபதியின் கருத்து வெளிப்படுத்துகிறது. வாக்கு வங்கி கையிருப்புக்காக அதிகார பலமுள்ள அரசியல்வாதிகள் தமக்குத் தேர்தல் காலங்களில் ஆதரவளித்தோருக்கு தொழில்வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுப்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இதனால் போதிய கல்வித் தகைமை,  தொழிற் சிறப்புத் தேர்ச்சி அனுபவம் இருப்போர் கூட உள்வாங்கப்படாமலிருக்கும்  நிலையும்  உள்ளது. நாட்டில் 1971 1988 காலப்பகுதியில் இடம்பெற்ற இளைஞர் கிளர்ச்சிகள் வட கிழக்கில் இடம்பெற்ற போரில் பெருந்தொகையான இளைஞர்களின் மரணம் போன்ற விடயங்களை நினைவூட்டியிருந்த ஜனாதிபதி சிறிசேன நாட்டில் மற்றொரு இளைஞர் கிளர்ச்சி ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதெனவும் சமூகத்தில் இளைஞர்களுக்குரிய இடத்தை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியாகத் தெரிவித்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.


அதேவேளை வட, கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். வட கிழக்கில் மத்திய, மாகாண அரசாங்கங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தரத்தில் நியமனங்களை விரும்பும் பட்டதாரிகளுக்கு அப்பதவிகளை வழங்குமாறும் அத்துடன் இதர அரச நிறுவனங்களிலும் தனியார் துறையிலும் பொருத்தமான தொழிலை வழங்குமாறும் சுற்றுலாத் துறையிலும் தொழில் வாய்ப்பை எற்படுத்த முடியுமெனவும் முதலமைச்சர்  ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

வட, கிழக்கில் மட்டுமன்றி நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள்  இருக்கும் போதே தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அத்துடன் இளைஞர், யுவதிகள் மத்தியில் விரக்தியும் ஏற்படுகிறது. தாங்கள் தங்கள் குடும்பத்திற்கு பாரமாக இருக்கின்றனரென்ற கவலை விரக்தியினால் தவறான வழிகளில் பயணிக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில் தொழில் வாய்ப்பை பெருக்க அரசாங்கம் தனியார் முதலீடுகள் உட்பட முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

அதற்கான வாய்ப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். உள்நாட்டு கடன் சுமை அதிகரிப்பு சர்வதேச ரீதியாக பொருளாதாரத்தில் சாதகமான அறிகுறிகள் தென்படாமை போன்ற காரணிகள் தொழில் வாய்ப்பை அதிகரிப்பது தொடர்பாக பாரிய சவாலை தோற்றுவிக்கும். ஆயினும், தொழில் வாய்ப்புகளை பெருக்குவதற்கான முன்முனைப்புகளுக்கு  அதிக முன்னுரிமையை கொடுக்க வேண்டிய அவசியம் அதிகமாக தற்போது தேவைப்படுவதாக தோன்றுகிறது. 

TOTAL VIEWS : 1545
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1mrke
  PLEASE ENTER CAPTA VALUE.