கடன் சுமையிலிருந்தும் மீட்டெடுத்தல்
2017-11-07 15:57:13 | General

யாழ்.குடாநாட்டில் கடந்த மாத இறுதிப் பகுதியில் கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகியிருந்ததுடன், அக்குடும்பத் தலைவரும் சிறிது காலத்துக்கு முன்னர் இதே காரணத்துக்காக உயிரிழந்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் முழுவதுமே பாரிய கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாக பல மாதங்களாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. உயிர்களை காவு கொண்டுவரும் இந்த சமூக அனர்த்தத்துக்கு துரித தீர்வை அரசாங்கமும் வட மாகாண நிர்வாகமும் கண்டுகொள்வது அவசர தேவையாகும்.

கடந்த அக்டோபர் முற்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி வட பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்ததுடன், அப்பிராந்தியத்தில் பொது மக்கள் மத்தியில் கடன் சுமை அதிகரித்திருப்பது குறித்தும் அதற்கான காரணங்கள் பற்றியும் அப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகை குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.


உண்மையில் 2009 மேயில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வட, கிழக்கிற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வட்டிக்குக் கடன் கொடுப்போர் பெருமளவுக்கு படையெடுத்திருந்தனர். பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. போர்க் காலத்தில் அழிவுகளும் பொருட்களுக்கான பெருந் தட்டுப்பாடும் நிலவியதால், மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூட பெரும் சிரமப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பொருட்கள் அங்கு தாராளமாக செல்லத் தொடங்கியதும் கடன்பட்டென்றாலும் அவற்றைக் கொள்வனவு செய்யும் நிலைமை காணப்பட்டது. இந்த நிதி நிறுவனங்களும் அவர்களுக்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தன. அநேகமானோர் கடனைப் பெற்று வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்ததுடன் சிறிய தொழில் நடவடிக்கைகளையும் ஆரம்பித்தனர்.

ஆனால், யுத்தத்துக்குப் பின்னர் யாவுமே செழிப்படையுமென நினைத்து மக்கள் கடன்பட்டு போட்டிருந்த முதலுக்குக் கூட பெரும் பாதிப்பு ஏற்படும் நிலைமை உருவாகியது. வட்டிக்கு கடன் பெற்று முதலீட்டை மேற்கொண்ட போதும் உரிய அனுகூலம் கிட்டவில்லை. பட்ட கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த முடியாத அவல நிலைமைக்கு அநேகமானவர்கள் தள்ளப்பட்டனர். 


அதேவேளை கடன்பெற்று சிறு தொழில்களை ஆரம்பித்தவர்களுக்கு தாங்கள் அதிக வட்டி வீதத்துக்கு கடனைப் பெற்றிருக்கிறார்கள் என்பது பற்றியும் அதனைத் திரும்பச் செலுத்துவதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பது குறித்தும் அறியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. அத்துடன், கடும் வரட்சி போன்ற காலநிலை பாதிப்பும் பட்ட கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த முடியாத நிலையை பலருக்கு தோற்றுவித்திருந்தது.

ஆனால், கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனை திரும்பப் பெற்றுக் கொள்ள கடுமையாக இருக்குமென்பது பற்றியும் அவர்கள் அதிகளவுக்கு அறிந்திருக்கவில்லை. கடன் சுமையால் பெண்களே அதிகளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். வட, கிழக்கில் யுத்தத்துக்குப் பின்னர் 80 ஆயிரம் பேர் விதவைகளாக இருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இப்பெண்களில் அநேகமானவர்கள் குடும்பத் தலைவிகளாவர். வழங்கிய கடனை திரும்ப அறவிடுவதற்காக செல்லும் முகவர்கள் சிலர் பெண்களுடன் கடுமையாகவும் அநாகரிகமாகவும் நடந்து கொள்வதாகவும் அதனால் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் மேலதிகமான அழுத்தத்தை  எதிர்நோக்குவதாகவும் அறிய வருகிறது.


அதேவேளை, கடன்பெற்றவர்களில் பலர் எந்த நிறுவனம்  தங்களுக்கு கடன் வழங்கியதென்பது பற்றியோ என்ன நிபந்தனையின் கீழ் கடனைப் பெற்றுள்ளனர் என்பது குறித்தோ அறியாதவர்களாக இருப்பதையும் காண முடிகிறது. பெற்ற கடனை சிலர் சொந்தத் தேவைகளுக்கு பயன்படுத்தி விடுவதாலும் போதிய வருமானம் இல்லாததால் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த இயலாததாலும் சிலர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.

அதேவேளை சிறு தொழில்களில் கடன் பெற்ற தொகையை முதலீடு செய்தவர்களும் அத்தொழிலின் மூலம் ஆதாயத்தைப் பெற்றுக் கொள்ள இயலாதிருப்பதால் அவதியுறுகின்றனர். அதேவேளை மூன்று அல்லது நான்கு பேரைக் கொண்ட குழுவினருக்கு உத்தரவாதத்தின் அடிப்படையில் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடனைத் திரும்பச் செலுத்த ஒருவரால் இயலாவிட்டால் பொறுப்புக்கு நின்றவர் அக்கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இது பாரிய சச்சரவுகளையும் சமூகத்தில் தோற்றுவிக்கிறது. 


அதேவேளை மத்திய வங்கியின் ஆளுநர் நேரடியாக நிலைவரத்தை ஆராய்ந்திருப்பது ஆக்கபூர்வமானதொன்றாகும். நலிந்த வர்க்கத்தினருக்கு கடன் வழங்கும் போது அவர்கள் பயனடையும் வகையில் தீர்மானங்களை எடுக்கக்கூடிய விதத்தில் அவர்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் தெளிவூட்ட வேண்டும். அதேசமயம் இந்த நிறுவனங்கள் கடன் வழங்குகின்ற போது என்ன நிபந்தனையின்  அடிப்படையில் வழங்க வேண்டுமென்பது குறித்து இறுக்கமான ஒழுங்கு விதிகளை அவற்றுக்கு நடைமுறைப்படுத்துவது வங்கிகளின் வங்கியான மத்திய வங்கியின் கடமையும் பொறுப்புமாகும்.

இதேவேளை ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடும் போது வட, கிழக்கு போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியென்பதையும் குறிப்பாக வடக்கு இறுதிப் போரில் மோசமான உயிர், உடைமை இழப்புகளை எதிர்கொண்டதென்பதையும் கவனத்தில் கொண்டு அப்பகுதியின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் அங்குள்ள மக்களின் குறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருப்போரின் நெருக்கடிகளை தளர்த்தி அவர்கள் வாழ்வை மேம்படுத்த உதவ வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

TOTAL VIEWS : 1611
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vbv9t
  PLEASE ENTER CAPTA VALUE.