தகவல் தொழில்நுட்பத்தில் பாரிய பாய்ச்சல் தேவை
2016-08-05 12:34:05 | General

அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கையின் தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளின் எண்ணிக்கை போதியதாக இல்லையென்ற கருத்தை கூகிள் இந்தியா முகாமைத்துவப் பணிப்பாளர் ரஞ்சன் ஆனந்தன் தெரிவித்திருக்கிறார்.

2016 இலங்கை பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் இதனைத் தெரிவித்திருக்கும் அவர் தகவல் தொழில்நுட்பத்துறையில் நன்கு தேர்ச்சிபெற்றவர்களின் தொகை போதாமலிருப்பதே நாடு எதிர்நோக்கும் சவாலென்ற கருத்தை முன்வைத்திருப்பதை அவதானிக்கமுடிகிறது.

தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பல ஆண்டுகளாக சமூகத்தில் அதிகளவு செல்வாக்கைச் செலுத்திவருகின்றது. தகவல்களைப் பரிமாறிக்கொள்ள எமது முன்னோர்கள் பல்வேறு முறைமைகளைக் கையாண்டு வந்துள்ளனரென்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. 


தீமூட்டி சமிக்ஞைகளை வெளிப்படுத்துவது தொடக்கம் ஓலை அனுப்புதல், பேனா, கடதாசிகளைப் பயன்படுத்துதல் என்று விபரங்கள், தகவல்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பும் முறைமைகள் கையாளப்பட்டன.

இப்போதும் கையாளப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பமானது சில காலத்துக்கு முன்னர் வங்கித் தொழில்துறை, பொறியியல் துறை, கணினிச் சமூகம் என்பன மத்தியில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது எம்மைச்சூழவுள்ள, எமக்குத் தேவையான சகல விடயங்களுக்கும் அதிகளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றோம். அத்துடன் எமது சுற்றாடலில் இருக்கும் சகலவையுமே அதிகளவுக்கு மேம்பட்ட, முன்னேற்றம் கண்ட தரத்தைக் கொண்டவையாக மாற்றம் அடைந்து வருவதையும் காண்கிறோம்.

தொழில்நுட்பத்துறையில் எட்டப்படும் இந்த முன்னேற்றமே தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அதிக பெறுமதி கொண்டதாக மாற்றியுள்ளது. வர்த்தகம், பாதுகாப்பு, கலாசாரமென எந்தத் துறையிலும் மேம்பாடு காண்பதற்கு தகவல் தொழில்நுட்பம் முக்கியமானதொன்றாக விளங்குகின்றதென்பதை வரலாற்று ரீதியான நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.


கணினியின் வருகை தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் வேகமாகச் சகலரிடத்தும் பரவுவதற்கு வழிவகுத்திருக்கின்றது. கணினி மென்பொருள், வன்பொருள், வலைப்பின்னல் என்பனவற்றை ஒன்றுதிரட்டும் நடைமுறை கொண்டதாக இத்தொழில்துறை விளங்குகிறது.

அதனால் தகவல் தொழில்நுட்பம் அத்தியாவசிய உதவியாளராக மாற்றம் பெற்றிருக்கிறது. மின்னல் வேகத்தில் உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தகவலைக் கொண்டு செல்வதற்கு இந்த தகவல் தொழில்நுட்ப முன்னேற்றமே உதவுகின்றது.

தகவல்களிலிருந்து தெரிவுகளை செய்யவும், தொடர்புகளை தக்கவைத்துக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்வதற்கும் வியாபார நடவடிக்கைகளை கையாள அல்லது கண்காணிக்கவும் நடமாட்டங்களை அவதானிக்கவும் தகவல் தொழில்நுட்பமே அதிகளவுக்கு உதவுகின்றது.

தகவல் தொழில்நுட்பம் உற்பத்தியையும் அபிவிருத்தியையும் கொண்டு வருகின்றது. கையடக்கத் தொலைபேசிகள், ஐபோன்கள் போன்றவை சந்தைக்கு வருவதற்கும் இந்த தகவல் தொழில்நுட்பமே வழிவகுத்துக்கொடுத்திருக்கின்றது.


அத்துடன் இவற்றைப் பயன்படுத்துவதால் அனுகூலமான செயற்பாடுகளுக்கு இது வழிவகுத்துக்கொடுத்திருக்கிறது. காலத்துக்குக் காலம் மாற்றங்களை உள்ளீர்த்துக்கொண்டதாகவும் தகவல் தொழில்நுட்பம் விளங்குகிறது.

ஒவ்வொருவரையும் மிக இலகுவாக தொடர்பாடல் கொள்ளச் செய்வதும் தகவல் தொழில்நுட்பமே. ஆரம்பத்திலிருந்து தகவல் தொழில்நுட்பம் உபயோகமற்றதொன்றாகவே இருக்கவில்லை. அத்துடன் தாமதமான நடவடிக்கையாகவும் அமைந்திருக்கவில்லை. மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு வினைத்திறனுடன் நீண்டகாலமாக இது பயணித்துவருவதை அவதானிக்க முடியும்.

இந்நிலையில் 4  5000 பட்டதாரிகள் தேவைப்படுவதாகவும் அவர்களின் சிறப்புத் தேர்ச்சியை மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் கூகிள் இந்தியா முகாமைத்துவப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச தரத்தைக் கொண்ட தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளை மொரட்டுவை பல்கலைக்கழகம் உருவாக்கி வருவதாக குறிப்பிட்டிருக்கும்அவர், ஆனால் அடுத்த தலைமுறைத் தொழில் நுட்பங்களுக்கு அவர்களின் தொகை போதாமலிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த முதலீடு நாட்டுக்குத் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதாக அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பங்கள் விளங்க வேண்டுமென்றும் கூறியுள்ளார். 


மேலும் நாடுகள் புதிய கொள்கைகளை நாடிநிற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் பாரிய தொகுதியைக் கொண்ட தகவலை பரிமாறிக் கொள்வதற்கும் துணைநிற்கிறது.

அத்துடன் அதிகளவுக்கு வளர்ச்சிகண்டுள்ளதுடன் மனித வாழ்வில் அதிகளவுக்கு ஊடுருவியிருக்கின்றது. மூளைசாலிகள் வெளியேற்றத்தால் வளர்முகநாடுகள் பல மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை இப்பாதிப்பிலிருந்தும் மீட்சிபெறுவதற்கு செயற்பாட்டுத்திறனுள்ள நடவடிக்கைகள் தேவையாகும். இலங்கை போன்றதொரு சிறியநாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண்பதற்கு வெளிநாடுகளிலிருந்து தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை வரவழைத்துக் கொள்ளமுடியும்.

TOTAL VIEWS : 2803
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0nsbp
  PLEASE ENTER CAPTA VALUE.