கட்டலோனியா விவகாரம் ஐரோப்பாவில் மற்றொரு நெருக்கடி
2017-10-30 10:47:37 | General

ஸ்பெயினின் சுயாட்சிப் பிராந்தியங்களிலொன்றான கட்டலோனியாவின் பாராளுமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை சுதந்திரப் பிரகடனத்தை விடுத்திருந்த நிலையில், சில மணித்தியாலங்களுக்குள் ஸ்பெயினின் தேசிய செனட் சபை கட்டலோனியாவை மட்ரிட்டின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கியிருப்பது ஸ்பெயினில் மோசமான நெருக்கடி ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

 சுதந்திரப் பிரகடனமும் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் மட்ரிட்டின் தீர்மானமும் புரையோடிப் போயிருக்கும் சர்ச்சைக்கு தீர்வைத் தராது என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கட்டலோனியாவின் அரசியல் நெருக்கடியும் எவ்வாறு அதற்கு தீர்வு காணப்படுமென்ற விடயமும் ஸ்பெயினுக்கு மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமென்பது அவர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.

கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை இலங்கை நிராகரித்திருப்பதுடன், உலக வல்லரசான அமெரிக்காவும் ஏற்க மறுத்திருக்கிறது. ஆனால், சுய நிர்வாகம் மற்றும் சுயவிருப்புடன் பிணைப்பைக் கொண்டிருத்தல் என்பன தொடர்பாக வரலாற்று ரீதியாக விருப்பத்தை வெளிப்படுத்தி வந்த மக்களை பலவந்தமாக ஒருங்கிணைப்பதனால் ஏற்படும் பிரச்சினையை இது முன்னிறுத்துகின்றதென ஸ்பெயினின் மற்றொரு சுயாட்சிப் பிராந்தியமான பாஸ்க்கின் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி , இனிக்கோ ஊர்கு ளூ சுட்டிக்காட்டியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

கட்டலோனியாவில் கடந்த அக்டோபர்  1 இல் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் பெறுபேறுகள் அந்நாட்டின் மத்திய அரசாங்கத்திற்கும் கட்டலோனிய தேசியவாத சக்திகளுக்கும் இடையில் மோதல்களை தீவிரமடையச் செய்திருந்தன. 1990 களின் ஆரம்ப மற்றும் நடுக்காலப் பகுதியில் பொஸ்னியா  ஹேர்ஸிகோவினால் கொடூரமான உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றது. அதன்பின்னர் இப்போதே ஐரோப்பாவின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் ஆபத்தான நெருக்கடி கட்டலோனியாவில் ஏற்பட்டிருக்கிறது. 


ஜெனரல் பிரான்ஸிஸ் பிராங்கோவின்  36 வருட எதேச்சாதிகார ஆட்சி 1975 இல் ஸ்பெயினில் முடிவுக்கு வந்தபோது அந்நாடு ஜனநாயகப் பாதையை நோக்கி நகர்ந்து சென்றதுடன், கட்டலோனியாவுக்கு மீண்டும் சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. பிராங்கோவின் அடக்குமுறை ஆட்சியில் சுயாட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டிருந்தது.

ஸ்பெயினின் வட, கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் கட்டலோனியா தனித்துவமான வரலாறு, கலாசாரம், மொழியைக் கொண்டிருக்கிறது.  2010 ஜூலை வரை சுயாட்சி அந்தஸ்தை கட்டலோனியா அனுபவித்துவந்த போதிலும் ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் கட்டாளன் சுயாட்சி அந்தஸ்துக்கு தடை விதித்ததையடுத்து, கட்டலோனியாவிலுள்ள விடுதலைக்கு ஆதரவான சக்திகள் அங்கு வலுப்பெற ஆரம்பித்திருந்தன.

அக்டோபர்  1 இல் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பை ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் தடை செய்திருந்தபோதும்  43 சதவீத கட்டாளன்கள் வாக்களித்திருந்தனர். ஆனால், பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லையென ஒன்றுபட்ட ஸ்பெயினை ஆதரிக்கும் கட்சிகள் கூறுகின்றன.


ஸ்பெயினில் இன, மொழி, கலாசார ரீதியாக தனித்துவமான அடையாளத்துவத்தைக் கொண்ட குழுமமாக கட்டாளன்கள் விளங்குகின்றனர். பிராந்திய பாராளுமன்றத்துடன், சுயாட்சியும் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியும் எழாமலில்லை. உண்மையில் ஸ்பெயினில் 75 இலட்சம் மக்களைக் கொண்ட கட்டலோனியா அதிக செல்வ வளமுள்ள பிராந்தியமாகும். ஆள்வீத வருமானம்  30 ஆயிரம் யூரோவாகும்.

அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார சுபீட்சம், அடையாளத்துவத்தை மட்ரிட் ஓரம்கட்டிவிட்டு மேலாதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதாக கட்டாளன் தேசியவாதிகள் விசனமடைந்திருப்பதே தற்போதைய சர்ச்சைக்கு காரணமாகும். இந்த சர்ச்சை உள்நாட்டு யுத்தமாக வெடிக்குமானால் ஸ்பெயினுக்கு மாத்திரமன்றி ஐரோப்பாவுக்கும் பாதிப்பாக அமையுமெனவும் அங்குள்ள ஏனைய இனக் குழுமங்களும் விடுதலை கோருவதற்கு முயற்சிப்பதற்கு தூண்டுகோலாக அமைந்து விடுமெனவும் கருதப்படுகிறது. 


ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து சிறிய தொகை வாக்குகளினாலேயே தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் தற்போது ஸ்பெயினுக்கும் கட்டலோனியாவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் மோதலுக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டால் மற்றொரு ஆயுத மோதலை ஐரோப்பா எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது.  உண்மையில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே ஒரேயொரு வழிமுறையாக இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பரஸ்பர அங்கீகாரம் மற்றும் கௌரவத்தை அடிப்படையாகக் கொண்டு வேறுபட்ட அடையாளங்களுக்கிடையில் சகவாழ்வை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வே அவசியமெனவும் அதாவது ஐரோப்பாவின் இணை இறைமை கோட்பாட்டை உள்ளீர்த்துக் கொள்வதன் மூலம் வெவ்வேறான  அடையாளங்களுக்கிடையில் சக  இருப்புக்கான இலக்கை எட்ட முடியுமென அவர்கள் கூறுவது கவனத்திற்கு எடுக்கப்படக்கூடிய யோசனையாகத் தென்படுகிறது.

TOTAL VIEWS : 1232
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
tnvn3
  PLEASE ENTER CAPTA VALUE.