பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போடப்படவுள்ள 'கடிவாளம்'
2017-07-18 17:38:33 | General

பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் தண்டனையளிக்கக் கூடிய வகையிலான சட்டமொன்றை விரைவில் தயாரிக்கவுள்ளதாக, பாராளுமன்ற பொதுச் செயலாளர் நாயகம்  தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளைத் திருத்தி, அது குறித்து தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் இதன்படி, பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எட்டு வாரங்களுக்கு பாராளுமன்றத்திற்குள் நுழையத் தடைவிதிக்கக் கூடிய வகையில் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வில் கலந்து கொண்ட போதே அவர்  இவ்விடயத்தை கூறியுள்ளார்.பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்காக கொண்டுவரப்படவுள்ள  புதிய சட்டம் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதே. 


தற்போதைய பாராளுமன்ற அமர்வுகளையும் அதில் உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் முறைகளையும் பார்க்கும் போது இது பாராளுமன்றமா,பாதாளக்குழு மன்றமா என்ற சந்தேகமே ஏற்படுகின்றது.அதிலும் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வந்துள்ள உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் முழுநாட்டுக்கும் நாட்டின் உயர் பீடமான பாராளுமன்றத்தின் கீர்த்திக்கும் கரும் புள்ளியாகவே உள்ளது. சிலவேளைகளில் புதியவர்களுடன் போட்டிபோட்டு அனுபவஸ்தர்களான உறுப்பினர்கள் கூட கொஞ்சமும் நாகரீகமின்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதையும் அடிக்கடி  அவதானிக்க முடிகிறது.

சபாநாயகருக்கு கூட புதிய உறுப்பினர்கள் சவால் விடும் வகையில் நடந்து கொள்வதுடன் அவரின் கட்டளைகளை ஏற்க மறுக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்தேறுகின்றன.இதனால் சபை நடவடிக்கைகளை முன் கொண்டு செல்வதில் சபாநாயகர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியும் ஏற்படுகின்றது.
பொதுத் தேர்தலொன்று இடம்பெற்று பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டவுடன் அவர்களுக்கு பாராளுமன்ற விதிமுறைகள், நிலையியல் கட்டளைகள், பாராளுமன்றத்தில் நடந்து கொள்ளும் முறைகள் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன.

இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவேண்டியது அவசியம்.எனினும் பலர் இப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதில்லை. அது மட்டுமன்றி கலந்து கொண்டாலும் கூட அதில் கற்பிக்கப்படும் விடயங்களை புரிந்துகொள்ளக் கூடிய அறிவோ, பக்குவமோ பலரிடம் கிடையாது. அடிதடி, ஆட்பலம், பணபலம், பாதாளக்குழு கைவசம் இருந்து விட்டால் போதும் நானும் அரசியல்வாதிதான் .எனக்கும் எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் பல உறுப்பினர்களும் இருப்பதுடன் பல இளம் உறுப்பினர்களும் பிரதேச சபை உறுப்பினர்களாகவிருந்து நேரடியாக பாராளுமன்றம் வந்துள்ளதால் அவர்களுக்கு பிரதேச சபைக்கும் பாராளுமன்றத்துக்கும் வித்தியாசம் தெரியாமையும்  பாராளுமன்றத்தின் கௌரவம், கீர்த்தி நாசமடையக் காரணங்களாகவுள்ளன.


மக்கள் சேவை செய்வதற்கு கல்வி அறிவு அவசியமில்லையென கூறுபவர்கள் உண்டு.  ஆனால் இன்றைய அரசியல்வாதிகளில் அதாவது ஒன்பது மாகாணங்களிலுள்ள 25 மாவட்ட மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகும் 196 பேரிலும் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படும் 29 பேரிலும் எத்தனை பேர் மக்களுக்கு சேவை செய்கின்றனர்? அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக முன்னர் அவர்களிடம் இருந்த அசையும் அசையா   சொத்துக்களையும் மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் வந்த பின்னர் அவர்களிடம் இருக்கும் அசையும் அசையா சொத்து விபரங்களையும் கணக்கிட்டால் இந்த உறுப்பினர்களின் மக்கள் சேவையின் விற்பன்னத்தை தெரிந்து கொள்ள முடியும். குற்றங்கள் ,ஊழல் மோசடிகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்படாத உறுப்பினர்களை விரல் விட்டு எண்ணி விட முடியும்.

எனவே ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே  விதி விலக்காக மக்கள் சேவை செய்கின்றனர். மிகுதிப்பேர் பாராளுமன்றம் என்ற பங்குச் சந்தையில் உறுப்பினர்களாக போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக உழைத்துவிடவே பாராளுமன்றத்தை பயன்படுத்துகின்றனர்.


எனவே தான் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேர்மை,  
நீதி, நியாயம் போன்றவற்றைத்தேடித்தான் பார்க்கவேண்டியுள்ளது. இந்த குணாம்சங்கள் இல்லாத உறுப்பினர்கள்தான் பாராளுமன்றத்தின் கீர்த்திக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் அந்த உயர் சபையில் மிகவும் கீழ்த்தரமாக செயற்படுகின்றனர்.

இதனால்தான் பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் தண்டனையளிக்கக் கூடிய வகையிலான சட்டமொன்றை கொண்டுவர வேண்டிய தேவை தற்போது சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் நாயகம்  தம்மிக தசநாயக்கவுக்கும் ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள இரண்டு கோடி சனத்தொகையிலிருந்து தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்களும் சகல விடயங்களிலும் எவ்வளவு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் ஆனால் மக்கள் செய்த பாவம் இந்த 225 பேரில் பெரும்பாலானோர் மிக மோசமானவர்களாக,  மோசடிக்காரர்களாக, குற்றவாளிகளாக, பாதாளக்குழுவினர்களாகவே உள்ளனர்.

ஆகையினால்தான், பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் தண்டனையளிக்கக் கூடிய வகையிலான சட்டம் விரைவில் கொண்டுவரப்படவிருப்பதை  வரவேற்க வேண்டியுள்ளது. இச் சட்டத்துக்கான அவசியத்தை பாராளுமன்ற அமர்வில் இடம்பெறும் அசிங்கங்களை நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் பார்த்து முகம் சுளித்துவரும் மக்களும் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

TOTAL VIEWS : 1098
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5ispa
  PLEASE ENTER CAPTA VALUE.