பிள்ளைகளை மனவளப்படுத்துதல்
2016-12-05 13:33:51 | General

சமூகம் கெட்டுவிட்டது, இளைஞர்கள் தறிகெட்டு நடந்து கொள்கிறார்கள். கலாசாரம், பண்பாடு, ஒழுக்க விழுமியங்களை பின்பற்றுபவர்கள் எவருமில்லையென்ற நிலமை ஏற்பட்டுவிட்டது என்று சிரேஷ்ட பிரஜைகள் பலர் சலித்துக்கொள்வதை அவதானிக்க முடியும்.

இந்த அபிப்பிராயங்கள் தலைமுறையாக வெளிப்படுத்தப்படுபவையென்பது ஒரு புறமிருக்க, அவற்றில் உண்மையும் அதிகளவிற்கு இருக்கின்றதென்பதையும் மறுத்துவிடமுடியாது. நாடொன்றுக்கு இளையசமூகமே சுபிட்சத்தையும் மேம்பாட்டையும் ஈட்டித்தருபவர்கள் என்பதையும் எவரும் நிராகரித்துவிட இயலாது.

ஆனால் இளைய சமூகத்தினர் சிலர் தமக்குத்தாமே பாதிப்பை ஏன் தேடிக்கொள்கின்றனர். ஏன் எமது பிள்ளைகளில் சிலர் துஷ்பிரயோகங்கள், கண்மூடித்தனமாக வாகனங்களைச் செலுத்திச் செல்லுதல், சட்டம், ஒழுங்கை மதிக்காமல் மீறிச் செயற்படுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

ஏன் வன்முறைகளில் இறங்குகின்றனர். இக்கேள்விகளுக்கு தகுந்த பதிலை நாங்கள் கண்டு பிடிப்பதாயின் எமது பிள்ளைகளின் முறையான முன்னேற்றத்தில் கரிசனை கொண்ட மூத்தவர்கள், இளையசமூகத்தினரின் தவறான நடவடிக்கைகளைத் தடுத்து  நிறுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகத் தோன்றுகின்றது.  


கடந்த நூற்றாண்டைப் போன்றல்லாமல் தற்போதைய 21 ஆம் நூற்றாண்டில் பல்வேறு சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ளது. அந்தச் சவால்களை எதிர்கொள்வதற்குத் தயாராக, முகம் கொடுக்கக்கூடிய விதத்தில் எமது பிள்ளைகளை நாம் உருவாக்குகிறோமா? அல்லது எவ்வளவு தூரத்திற்கு எமக்கு உதவ முடிகிறது என்பது குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உண்மையில் இளைய சமூகத்தினருக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவுகள் அருகிக் காணப்படுகின்றது. அதிகளவான இளைய சமூகத்தினர் சமூக ஊடகங்களினால் கவர்ந்திழுக்கப்படுவதையும் யதார்த்தமற்ற சிந்தனைகள், வாக்குகள், கருத்துக்களை ஏற்றுக்கொள்வதையும் சரியானதா? தவறானதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் உள்வாங்கிக் கொள்வதையும் அதிகளவில் அவதானிக்க முடிகிறது. 


உண்மையில் பிள்ளைகளின் மனவளர்ச்சியை செழுமைப்படுத்துவதற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பெற்றோரே அதிகளவு பொறுப்பைக் கொண்டவர்கள். ஆனால் அநேகம்பேர் பிரச்சினைகளுக்கான காரணங்களை அறியாதவர்களாகவும் தடுத்த நிறுத்துவதற்கு அல்லது திருத்திச் சீரமைப்பது எவ்வாறு என்பது பற்றி புரிந்து கொள்ள முடியாதவர்களாகவுமே  இருக்கின்றனர்.

அதிகளவு கல்வி கற்றவர்களும் பொது அறிவு அதிகம் கொண்டவர்களுமே சிறந்த பெற்றோராக இருக்கமுடியுமென நாங்கள் பலரும் எண்ணுகிறோம். வாழ்க்கையின் வெற்றிக்கு இவற்றையே முக்கியமானதாக கருதுகிறோம். ஆனால், கல்வி பற்றி குறுகிய எண்ணப்பாட்டையே நாங்கள் தவறான விதத்தில் கொண்டிருக்கிறோம்.

கல்வியில் உயர்ந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டால் மாத்திரம் போதுமானது என்பதே அதிகளவான பெற்றோரின் கருத்தாக காணப்படுகிறது. ஆனால், வாழ்க்கை முழுவதும் உள, உடல் ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி, ஆக்கபூர்வமான செயற்பாடொன்று இருப்பதே உண்மையான வெற்றியாகும். 


பிள்ளைகளின் எதிர்கால மேம்பாட்டுக்கு சிறப்பான கல்வி அவசியம். அதேவேளை பிள்ளைகளுக்கு கல்வியுடன் வாழ்க்கைத் தேர்ச்சியையும் கல்வியுடன் சமாந்தரமாக புகட்டவேண்டும். தெற்கு நாடுகளில் பாடசாலைக்கல்வி மற்றும் உயர்கல்வியுடன் வாழ்க்கைத் தேர்ச்சிப் பயிற்சிநெறிகளும் வழங்கப்படுகின்றன. எமது நாட்டிலும் அதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகளும் பல இடங்களில் முன்னெடுக்கப்படுவதையும் அவதானிக்கமுடியும்.

பாடசாலைக் கல்வியில் வாழ்க்கைத்திறன், சமூக விழுமியங்கள், பெறுமானங்கள் தொடர்பான விடயங்கள் உள்வாங்கப்பட்டாலும் எமது பாடசாலைகளில் அநேகமானவை இந்த அத்தியாவசியமான தேர்ச்சித்திறன் குறித்து தீவிரமான முறையில் கவனம் செலுத்தப்படுவதில்லையென கல்விமான்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமூக மட்டத்தில் வாழ்க்கை தேர்ச்சித்திறனுக்கு முன்னுரிமை கொடுக்காமையும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வின்மையும் ஆசிரியர்கள் மத்தியில் அதிகளவுக்கு ஆர்வம் காட்டப்படாமையும் போதிய பயிற்சியில்லாமையும் இத்துறையில் பின்னடைவு  ஏற்படுவதற்கு காரணமாக அவர்கள் கூறுகின்றனர். ஆயினும் வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் முன்னேற்றமடைந்த பாடசாலைகளில் வாழ்க்கைத் தேர்ச்சித்திறன் குறித்து அதிக கரிசனை காட்டப்படுவதை அறிந்து கொள்ள முடிகிறது. 


பிள்ளைகள் எதிர்காலத்தில் உன்னதமான நற்பிரஜைகளாக விளங்குவதற்கு பெற்றோர் மாத்திரமன்றி ஆசிரியர்களின் வகிபாகமும் முக்கியமானதாகும். தமது மாணவர்களின் தேவைகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு சாதகமான முறையில் ஊக்குவிப்பையும் உற்சாகத்தையும் வழங்குவது ஆசிரியர்களின் கடமையாகும்.

பாடவிதானங்களுக்கு அப்பால் சென்று கூட ஆசிரியர்கள் பல மாணவர்களின் எதிர்கால நலன்களில் அக்கறை செலுத்தி உதவுகின்றனர். ஒவ்வொரு பிள்ளையிடமும் ஏதோவொரு திறமையும் ஆற்றலும் இருப்பதை அடையாளம் கண்டு அத்துறையில் அப்பிள்ளை தேர்ச்சி பெற்று மேம்படுவதற்கு  தூண்டுகோலாகவும் உதவிக்கரமாகவும் பெற்றோரும் ஆசிரியர்களும் விளங்கவேண்டும். இதற்கான பொறுப்பை அவர்கள் கொண்டுள்ளனர்.

TOTAL VIEWS : 2680
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
lol3r
  PLEASE ENTER CAPTA VALUE.