நுகர்வோர் பாதுகாப்பு தார்மிக கடமை
2017-11-08 09:23:16 | General

"எங்கும் கலப்படம்', "எதிலும் கலப்படம்' என்று குடும்பங்களிலுள்ள மூத்தவர்கள் அடிக்கடி சலித்துக்கொள்வதை அவதானிக்க முடியும். கலப்படம் என்றவுடன் பெரும்பாலும் எமது உணவுப் பொருட்களே நினைவுக்குவரும் உண்மையில் உணவுக் கலப்படம் நுகர்வோருக்கு பெரும் அச்சுறுத்தலான விடயமாகும்.

உணவுப்பொருட்களில் கலப்படத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்த சந்தர்ப்பங்களும் உள்ளன. "கலப்படம்' என்ற தார்மீக நெறிப் பிறழ்வான விடயம் உலகின் அநேகமான நாடுகளில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

இதற்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகள், அதாவது அதிகதொகை அபராதம், சிறைவாசம் உட்பட தண்டனைகள் அறிமுகப்படுத்தாதவரை இக்குற்றத்தைப் புரிவோர் அதிகளவுக்கு அலட்சியமனப்பான்மையுடன் செயற்படக்கூடுமெனவும் கருதப்படுகிறது.


உணவுக் கலப்படத்துக்கு எதிரான சட்டங்கள் நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன. அதேசமயம் சர்வதேச சட்டங்களின் தரத்துக்கு அமைவாகவும்இருப்பதாக கருத முடியும். ஆயினும் சந்தைகளிலும் கடைகளிலும் கலப்படம் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்காணிப்பதற்கு அல்லது கண்டுபிடிப்பதற்கான கள நடவடிக்கை மிகக் குறையாகவே காணப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

இந்தவகையில் கலப்படத்துக்கு எதிராக போராடுவது தொடர்பான எமது முறைமையும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது. அதேவேளை கலப்படங்களை கண்டுபிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதிலும் கலப்படக் காரர்களின் செயற்பாடு இவர்களை விட ஓரடி முன்னோக்கி சென்றுவிடுவதாக அமைந்துவிடுவதை அவதானிக்க முடியும். 


கலப்பட மோசடியில் ஈடுபடுபவர்களின் செயற்பாடுகள் காலத்துக்குக் காலம் நவீன மயமானதாக காணப்படுகின்றன. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதன் மூலம் அதிக பணத்தை சம்பாதிப்பதால் அதிநுட்பம் வாய்ந்த துறையாகவும் இது உருவெடுத்திருக்கிறது பாவனைக்கு உதவாத அரிசி மற்றும் தானிய வகைகள் தேடுதலின் போது கண்டுபிடிக்கப்படுவது குறித்து ஊடகங்களில் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. 

சில காலத்துக்கு முன்னர் பிளாஸ்ரிக் அரிசி போன்ற செயற்கை உணவுப் பொருட்களும் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக பரவலாக செய்திகள் வெளியாகியிருந்த போதும் அதனை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்திருந்தது. அதேவேளை, பழவகைகளை பழுக்கவைக்க கல்சியம் கார்பைட் போன்றவை பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் மீன் போன்றவை போமலின் போடப்படுவதால் புதிதாக பிடிக்கப்பட்டவை போன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலப்பட நடவடிக்கைகளால் இறுதியில் பாதிக்கப்படுவது நுகர்வோரேயாவர். அத்துடன் நூற்றுக்கணக்கான உணவுப் பொருட்களின் விலைபற்றியோ அல்லது தரம் குறித்தோ அதிகளவுக்கு தெரிந்துகொள்ளாமலேயே நுகர்வோர் கொள்வனவு செய்கிறார்கள்.

வர்த்தகர்களில் சிறியதொகையினரே தமது தொழிலுக்குரிய நேர்மையுடன் செயற்படுகிறார்கள். பெரும்பாலானவர்கள் இலாபநோக்கத்தை முன்னிறுத்தி நுகர்வோரை சுரண்டுவதிலேயே முனைப்புக் காட்டுகின்றனர்.


உலகமயமாக்கல், திறந்த சந்தைகளின் விளைவாக பல்வேறு வகையான தரமான பொருட்களை நுகர்வோர் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் இப்போது பல்கிப்பெருகி காணப்படுகின்றன. ஆனால் பணத்தின் பெறுமதிக்கு ஏற்றதாக பொருட்கள் நுகர்வோருக்கு கிடைக்கின்றனவா? என்பதே இங்கு பிரதானமான கேள்வியாக அமைகிறது.

பெரும்பாலும் நுகர்வோரிடம் அதிக கட்டணம் அறவிடப்படுவதுடன் பொருட்களின் தரத்தைப் பொறுத்தவரை அதிகளவுக்கு ஏமாற்றப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. இப்போது அதிகளவுக்கு பொதி செய்யப்பட்ட பொருட்களே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் எடை சரியானதா என்பதை நுகர்வோர் நிறுத்துப்பார்த்துக் கொள்வனவு செய்வதில்லை. அதனால் எடை தொடர்பாக ஏமாற்றப்படக் கூடிய சாத்தியப்பாடும் உள்ளது.

அதேவேளை அரசாங்க மற்றும் தனியார்  துறை முகவரமைப்புகள் அல்லது தொழில்சார் நிபுணர்களும் சில சமயத்தில் எந்தவொரு அரச முகவரமைப்பினாலும் பரிசீலிக்கப்படாத சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. அத்துடன் அத்தியாவசிய சேவையை வழங்கவேண்டிய தரப்பினர்களும் சிலவேளைகளில் தமது கடமை அல்ல என்ற மனப்பான்மையுடன் செயற்படுவதுண்டு.


பொதுமக்களின் அன்றாட தேவைகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்காகவும் நிர்வகிப்பதற்காகவுமே அரசாங்கங்களினால் சட்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

கலப்படத்தைக் கண்காணித்து நுகர்வேரை பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் செம்மையான முறையில்  ஏட்டில் இருக்கின்ற போதிலும் அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறினால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களுக்கு நேர்மையான முறையில் பொருட்கள், சேவைகளை வழங்காமல் ஏப்பம் விட்டுவிடுவோரின் பிடிக்குள் அவர்களை தள்ளிவிடுவதாக அமைந்துவிடும்.

இந்தவிடயத்தில் நுகர்வோரை குறிப்பாக பின்தங்கிய கிராமப்பகுதிகளில் வாழ்வோரைப் பற்றி அரசாங்கம் சிந்திப்பது அவசியம்.

TOTAL VIEWS : 1372
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
afr5e
  PLEASE ENTER CAPTA VALUE.