அரசியலில் பெண்களை முன்னிலைப்படுத்தும் முயற்சி
2017-11-15 09:38:04 | General

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கலப்புத் தேர்தல் முறைமையின் பிரகாரம் உள்ளூராட்சி சபைகளுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இச்சபைகளுக்கு தெரிவாகும் உறுப்பினர்களில் ஆகக் குறைந்தது 25 சதவீதமாகவேனும் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல் (திருத்த) சட்டமூலம் வலியுறுத்துகிறது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் கடந்த தடவை இடம்பெற்ற உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 82 பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அச்சபைகள் இப்போது கலைக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் எத்தனை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது தெடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வெளியாகியிருந்தது. 


341 உள்ளூராட்சி சபைகளுக்கும் புதிய முறைமையின் கீழ் 4,486 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அவர்களில் 3,840 பேர் பழைய தொகுதிவாரி முறைமையின் கீழும் ஏனையவர்கள் விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழும் தெரிவாவார்கள். 271 பிரதேச சபைகளும் 41 நகர சபைகளும் 24 மாநகர சபைகளும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகளை கொண்டதாக அமைந்திருக்குமென்பது எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில் உள்ளூராட்சி நிர்வாகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வரவேற்புக்குரியதொன்றாகும். உலகில் முதலாவது பெண்பிரதமரை தெரிவு செய்த நாடெனவும் பெண் ஜனாதிபதியை கொண்டிருந்த தேசமெனவும் பெருமையாக கூறப்படுகின்ற போதிலும் இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. 


ஆயினும் புதிய கலப்புத் தேர்தல் முறைமை உள்ளூராட்சி நிர்வாகங்களுக்கான வாக்களிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட ஏற்பாட்டை உள்ளீர்த்துக்கொண்டிருப்பது முக்கியமான மாற்றமாக தென்படுகிறது. ஏற்கனவே பல தெற்காசிய நாடுகள் தமது சட்டவாக்க சபைகளில் பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் "கோட்டா'க்களை கொண்டிருக்கின்றன.

ஆனால் இதுவரை காலமும் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தில் சகல மட்டங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 5 சதவீதத்துக்கும் குறைவானதாகவே இருந்துவந்தது. இலங்கையை பொறுத்தவரை தேசிய பொருளாதாரத்திற்கு பெண்களின் பங்களிப்பு பாரியதாகும். அத்துடன் அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதிலும் பெண்களின் பங்களிப்பு (மத்திய கிழக்கு) குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

பெருந்தோட்டத்துறை மற்றும் ஆடைத் தொழிற்றுறையிலும் பெருந்தொகையினராக பெண்கள் பணியாற்றுவதுடன் வருமானத்தை ஈட்டிக் கொடுப்பவர்களாக விளங்குகின்றனர். சகல பிரஜைகளும் வாக்களிப்பதற்கான சமவுரிமையை கொண்டிருப்பது மட்டும் சிறப்பான ஜனநாயகமாக அமைந்துவிடாது. நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் அல்லது அரசியல் முறைமையிலும் சமத்துவமான பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். 


மேற்கு நாடுகளைப் போன்றல்லாமல் தெற்காசிய சமூகங்களில் பெண்களுக்கு அதிகளவில் கட்டுப்பாடுகள் பாரபட்சமான முறையில் காணப்படுவதை மறுக்க முடியாது. கடந்த காலங்களை விட தற்போது பால் வேறுபாடு இடைவெளி குறைவடைந்துள்ளபோதும் முற்றாக இல்லாமல் போய்விட்டதாக கருதமுடியாது.

அதிலும் கொள்கைவகுப்பு, தீர்மானம் எடுத்தல் என்பவற்றில் பெண்களின் வகிபாகம் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. சிவில் சேவை, தனியார் துறை, கல்வித் துறைகளில் பெண்கள் உயர்பதவிகளில் இருக்கின்ற போதிலும் அரசியலில் சொற்ப எண்ணிக்கையாகவே அவர்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகிறது. உலக நாடுகளிலும் அரசியல்வாழ்வில் பங்கேற்பதில் பெண்கள் பலதரப்பட்ட தடைகளை எதிர்நோக்குகின்றனர். 


பாரபட்சமான சட்டங்கள் மற்றும் நிறுவனங்களூடாக பெண்கள் பதவி வகிப்பது தொடர்பாக தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையே பல நாடுகளில் இருந்துவருகின்றது. பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பாக 2011 இல் ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதில் "உலகின் ஒவ்வொரு பகுதியிலுமே பெண்கள் தொடர்ந்தும் அரசியல் அரங்கில் அதிகளவுக்கு ஓரம் கட்டப்பட்டவர்களாக இருக்கின்றனர். பாரபட்சமான சட்டங்கள், நடைமுறைகள், போக்குகள், தாழ்ந்த மட்டத்திலான கல்வி, சுகாதாரப் பராமரிப்பின்மை, பெண்கள் மீதான அசாதாரண விதத்திலான வறுமையின் பாதிப்பு என்பனவற்றினூடாகவே பெண்கள் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பலதரப்பட்ட தடைகளைத் தாண்டி முன்னேற்றம் கண்டிருக்கும் பெண்கள் தத்தமது குடும்பங்கள், சமூகங்களுக்கு அதிகளவிற்கு பயன்படுவோராக இருந்து வருகின்றனர். அதேசமயம் அரசியலிலும் ஆண்களுக்கு சமனான விதத்தில் பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் கிட்டும்போது அதனால் அதிகளவுக்கு சமூகங்கள் அனுகூலத்தை அடைய முடியும்.

TOTAL VIEWS : 1790
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0ouvm
  PLEASE ENTER CAPTA VALUE.