மிதவாதத் தலைவர்களை பாதுகாப்பது அவசியம்
2016-10-05 10:05:30 | General

தமிழ் மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் அதிகளவுக்கு பெற்றிருப்பவரும் நாடளாவிய ரீதியில், "நேர்மையான மனிதர்' என்ற   நல்லபிப்பிராயத்தை கொண்டிருப்பவருமான வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தமக்கு உயிராபத்து இருப்பதாக தெரிவித்திருக்கும் கவலை குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. தெற்கிலுள்ள சக்திகள் தன்னைக் கொலை செய்வதற்கு சதி செய்வதாக அண்மையில் வடக்கு முதல்வர் குற்றம்   சாட்டியிருக்கின்றார்.

தன்னைக் கொன்று விட்டு அதற்கான குற்றச்சாட்டை புலிகள் மீது போடுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தனக்கு தொடர்ந்தும் தகவல்கள்  கிடைத்து வருவதாக அண்மையில் அவரின் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு அவர் அனுப்பியிருந்த செய்தியில் குறிப்பிட்டிருந்ததை அவதானிக்க முடிகிறது.


யாழ்ப்பாணத்தில் அண்மையில் அவரின் தலைமையில் இடம்பெற்ற "எழுக தமிழ்' பேரணியின் பின்னரே இவரிடமிருந்து இந்தக் குற்றச்சாட்டு மேலெழுந்திருக்கின்றது. தமிழ் மக்களின் வரலாற்று பூர்வ வாழ்விடமான வட, கிழக்கின் இராணுவ மயமாக்கல், வடக்கின் குடிப்பரம்பலை மாற்றியமைத்தல் உட்பட தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உள் நாட்டிற்கும் உலகத்திற்கும் எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இடம்பெற்றதாகக் கருதப்படும் "எழுக தமிழ்' நிகழ்வில் முதலமைச்சர் ஆற்றிய உரை தென்னிலங்கையிலுள்ள கடும் போக்காளர்கள் மத்தியில் கடும் விசனத்தை தோற்றுவித்துள்ள நிலையில் அவர் தனக்கு உயிராபத்து இருப்பது குறித்து முன் கூட்டியே  எச்சரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 2002  2004 காலப்பகுதிகளில் இடம்பெற்ற "பொங்குதமிழ்' நிகழ்வுக்குப் பின்னர் இப்போதே பெருந்தொகையான தமிழ் மக்கள் கலந்து கொண்ட பேரணியில் வடக்கு முதல்வர் தனது கவலையையும் விசனத்தையும் வெளியிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற "எழுக தமிழ்' பேரணியைத் தொடர்ந்து வடக்கின் வவுனியாவில் பொதுபலசேனா என்ற சிங்கள  பௌத்த அமைப்பொன்று நடத்தியிருந்த நிகழ்வொன்றில் பின்லேடன், பிரபாகரன் இப்போது விக்னேஸ்வரன் என்ற வாசகத்துடனான புகைப்படம் ஒன்று  காண்பிக்கப்பட்டமை சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

இந்த இரு நிகழ்வுகளும் வடக்கிலும் தெற்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் இரு பக்கத்திலும் இனவாதத்தை கிளறிவிட்டு அரசியல் இலாபத்தை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த தரப்புகளுக்கு "பெருந்தீனி' கிடைத்திருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. அத்துடன் பிரதான கட்சிகள் உட்பட அநேகமான கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒரு சாரார் வடக்கு முதல்வரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பதுடன் அவரைக்  கைது செய்யுமாறு வலியுறுத்தல்களையும் விடுத்து வருகின்றனர்.

அதேவேளை புலிகளின் எச்சசொச்சத்தையும் வடக்கு முதல்வர் தோண்டி எடுப்பதாக அரசாங்க ஊடகமொன்று கேலிச்சித்திரம் வரைந்திருப்பதையும் காணமுடிகிறது.
தமிழ் மக்களின் கவலைகள் தொடர்பாக குரல்கொடுக்கும் போது இனவாதி அல்லது தீவிரவாதியென முத்திரை குத்துவதாகவும் சிங்கள மக்கள் மத்தியில் விசனத்தைத் தூண்டி விட்டு மற்றொரு இனக்கலவரத்தை தூண்டத் தாங்கள் முயற்சிப்பதாகவும் விமர்சிப்போர் கூறுகின்றனர் என்று முதலமைச்சர் கவலை வெளியிட்டிருப்பதுடன் இப்போது தனக்கு உயிராபத்து என்பதையும் பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்.

இந்நிலையில் முதலமைச்சரின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலிலிருந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவரும் எம்.பி யுமான மாவை சேனாதிராசா, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


உண்மையில் வடக்கு முதல்வர் வெளியிட்டிருக்கும் அச்சம் தொடர்பாக ஜனாதிபதியும் அரசாங்கமும் துரித நடவடிக்கையை எடுப்பதுடன் நியாயபூர்வமான உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் குரல்கொடுத்துவரும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பையும் வலுவானதாக உறுதிப்படுத்துவது அவசியமானதொன்றாக தென்படுகின்றது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் நியாய பூர்வ உரிமைகள், அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் தீர்வை முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில் அவரின் குரலை மௌனமாக்கும் விதத்திலேயே கடும் போக்குச் சக்திகள் "உயிராபத்தை' ஏற்படுத்த முயற்சிக்கக்கூடும்.

இந்நிலையில் அவரின் குற்றச்சாட்டை "அரசியல் விளையாட்டாக' எடுத்துக் கொள்ளாமல் கடும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதுடன் அவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியதுடன் அவர் போன்ற மிதவாதத் தலைவர்களுடன் தொடர்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும்.

 

TOTAL VIEWS : 2341
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
eb8wx
  PLEASE ENTER CAPTA VALUE.