அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பாவனை
2017-11-06 11:13:31 | General

இலங்கையில் கடந்த 8 மாதங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 63 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அறிக்கை தெரிவித்திருக்கிறது.

அத்துடன் ஹாஷ், புகையிலை போன்ற போதைவஸ்து பாவனையும் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.  நடப்பாண்டில் ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில்  சட்டவிரோத போதைவஸ்து பாவனை அதிகரித்திருப்பதுடன் இக்காலப்பகுதியில் 3200 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அதிகளவில் பரப்புரைகளும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் இடம்பெறுகின்றன. ஆயினும் போதைப்பொருள் பாவனை கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதாக தோன்றுகிறது.


உண்மையில் போதைப்பொருட்கள் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை மோசமாகப் பாதிப்பது மட்டுமன்றி குடும்பங்களையும் சீரழித்துவிடுகின்றன. இதற்கு எதிராக பரந்தளவிலான ஒத்துழைப்பும் ஒருமித்த கருத்தும் அவசியமாகிறது.

காலநிலை மாற்றத்தால் பூமிக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டுமென்ற கனதியான அழைப்பும் விடுக்கப்படுகிறது. நாடுகளுக்கிடையில் சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தல், வர்த்தகம் அதிகரித்துச் செல்வதே மோசமான விளைவை நாட்டுக்கு ஏற்படுத்திவிடும்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி துரேர்டி போன்ற உலகத் தலைவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிராக வீதிப்போரை ஆரம்பித்திருக்கிறார்கள்.

போதைப்பொருள் வர்த்தகர்களென சந்தேகிக்கப்படுவோர் பாவனையாளர்களுக்கு எதிராக மனித உரிமைகள் குறித்து பொருட்படுத்தாமலும் நீதித்துறையின் வகிபாகம் தொடர்பாக கவனத்திற்கெடுக்காமலும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எடுத்து வரும் நடவடிக்கைகள் சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பாளர்களின் கடும் கண்டனங்களுக்கு இலக்காகியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 


அந்நாட்டில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.  போதைப்பொருட்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா. அலுவலகம் (யு.என்.ஓ.டி.சி.) அதன் 2017 உலக போதைப்பொருள் தொடர்பான அறிக்கையில் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

உலகளாவிய ரீதியில் 100 கோடி மக்களில் கால்வாசித் தொகையினர் போதைப்பொருட்களை பாவனைப்படுத்துகின்றனர். 2 கோடியே 95 இலட்சம் பேர் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பிரச்சினைகளால் துன்பப்படுகின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

2016 இல் உலகில் ஓபியம் உற்பத்தியும் கொக்கா செய்கையும் 30% அதிகரித்திருப்பதுடன் ஆப்கானிஸ்தானும் கொலம்பியாவும் இவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கியமானவையாக விளங்குகின்றன.


அதேவேளை விஞ்ஞான சஞ்சிகையான "த லான்செற்' வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரையொன்றில் சட்டவிரோதப் போதைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 2 1/2 இலட்சம் பேர் மரணிக்கிறார்களெனவும் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே இறப்புகளின் தொகை அதிகமெனவும் அதிலும் அமெரிக்காவிலேயே போதைப்பொருட்களை அதிகளவுக்கு உபயோகிப்பதால் இறப்பவர்களின் தொகை 27சதவீதமெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

2015 இல் போதைப்பொருள் பாவனையால் 52,400 பிரஜைகளை அமெரிக்கா இழந்துள்ளது.  போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் கொடிய வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகள், உயிரிழப்புகளை தடுத்து நிறுத்துவதற்கு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறன் வாய்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென திரும்பத் திரும்ப கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்ற  போதிலும் போதைப்பொருள் உற்பத்தி, வியாபாரம், பாவனையைக் கட்டுப்படுத்துவதும்  இல்லாதொழிப்பதும் பாரிய சவாலாகவே இருந்து வருகிறது.


எமது நாட்டில் வட மாகாணத்தில் யுத்தம் முடிவுக்கு வந்த பின் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பது குறித்தும் கேரளக் கஞ்சா போன்றவை அதிகளவுக்கு கடத்திவரப்படுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன.

இந்தச் சட்டவிரோத போதைவஸ்துகளின் கிடைப்பனவை இல்லாமல் செய்வதற்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினர் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலிருந்தும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கடல், தரை, ஆகாய மார்க்கப் போக்குவரத்துகளில் தீவிரமான கண்காணிப்பை நவீன உபகரணங்களின் உதவியுடன் மேற்கொண்டு நாடு கடந்த போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கவும் இச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தவும் முடியும்.

பாடசாலைப் பிள்ளைகள் மத்தியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர், கடத்தி வருவோருக்கு ஆயுள்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. கொலைகாரர்களாகவே அவர்கள் நோக்கப்படுகின்றனர்.


அதேவேளை போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் புனர் வாழ்வு நடவடிக்கைகள் பரிவிறக்கத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும். இத்தீய பழக்கத்திலிருந்து மீண்டு வருவோருக்கு தங்குமிடம், தொழில் வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க முன்வர வேண்டும். 

யாவற்றுக்கும் மேலாக எந்தவிதமான போதையூட்டும் பொருளும் ஆபத்தானதென்பது குறித்து சிறுவயது தொடக்கம் பிள்ளைகளுக்கு அறிவூட்ட வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர்களின் வகிபாகம் மிகவும் முக்கியமானதாகும். 

TOTAL VIEWS : 1472
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
y6jvz
  PLEASE ENTER CAPTA VALUE.