அக்டோபர் புரட்சிக்கு வயது 100
2017-11-10 10:34:42 | General

ரஷ்யப் புரட்சிக்கு இப்போது வயது 100. இதனையும் உலகில் முதலாவது சோசலிச தேசத்தின் உருவாக்கத்தையும் நினைவுகூர்ந்து ரஷ்யாவின் நேசநாடுகள் பலவற்றில் பல்வேறு நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன.

அக்டோபர் புரட்சியென அறியப்பட்ட இந்தப் புரட்சியின் நூற்றாண்டுப் பூர்த்தியை முன்னிட்டு பல நூல்கள் பிரசுரிக்கப்பட்டிருப்பதுடன், கருத்துக்கள், விமர்சனங்கள் என்பன அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்படுவதையும் அவதானிக்க முடியும். லெனின் தலைமையிலான முதலாவது சோசலிசப் புரட்சியானது வெற்றிகரமான முறையில் நாம் வாழும் உலகத்தை வடிவமைக்க எவ்வாறு உதவியது என்பது பற்றியும் அல்லது மீண்டும் எதிர்வரும் காலங்களில் அத்தகைய பாரிய புரட்சி ஏற்படுமா ? என்பது குறித்தும் வாதப் பிரதிவாதங்கள் மேலெழுந்து கொண்டிருப்பதையும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.


 தலைநகர் கொழும்பில் தாமரைத்தடாக அரங்கில் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர்  இரா. சம்பந்தன் மற்றும் அமைச்சர்கள் , எம்.பி.க்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றியிருந்த ஜனாதிபதி சிறிசேன பொது மக்களின் போராட்ட உணர்வு பற்றிய பெறுமதியான பாடத்தை மாபெரும் அக்டோபர் புரட்சி வழங்குகின்றது என்று குறிப்பிட்டதுடன், ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான புரட்சிக்காக பொதுமக்கள் இன்றும் தயாராக இருக்கின்றார்களென்றும் ஆனால், அதற்குத் தலைமை தாங்குவதற்கான ஆட்களுக்கே தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

போல்ஷ்விக், விளாடிமிர் லெனின் ஆகியோர்  தலைமை தாங்கிய புரட்சியே பின்னர் பாரிய ரஷ்யப் புரட்சி ஏற்படுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது.
சோசலிச மற்றும் கம்யூனிஸ சிந்தனைகளின் வரலாற்றை உலகிற்கு வழங்கியிருந்த இந்தப் புரட்சியானது சுமார் 7 தசாப்த காலத்தில் அஸ்தமனத்தை தழுவியது.

சோசலிசம் பயனளிக்காதெனவும் ரஷ்யாவில் முயற்சியளிக்கப்பட்ட போதும் அது தோல்வியைத் தழுவிட்டதாகவும் எம் மத்தியிலுள்ளோர் பலர் கூறுவதை கேட்க முடியும். ஆனால், உண்மையிலேயே வரலாற்றின் அங்கமாக இடம்பிடித்திருக்கும்  இந்த அக்டோபர் புரட்சி கடந்த 20 ஆம் நூற்றாண்டை வடிவமைத்திருப்பதாக கூறப்படுவதை எவரும் முழுமையாக நிராகரித்துவிட முடியாது.

கடந்த 20 ஆம் நூற்றாண்டில் உலகில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகள் யாவுமே சோசலிசத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலான போராட்டம் சம்பந்தப்பட்டதொன்றாகும். அதேவேளை, சமூகப் புரட்சி அச்சுறுத்தலுக்கான ஆளும் வர்க்கத்தின் பதிலே பாசிசத்தின் தோற்றப்பாடு என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, கடந்த நூற்றாண்டின் இறுதியில் "கெடுபிடி' யுத்தம்  தொடர்பாகவே அதிகளவுக்கு செய்திகள் மேலேழுந்திருந்தன.

ஜனநாயக மேற்குலகிற்கும் கம்யூனிஸ, சோசலிச கொள்கைகளைப் பின்பற்றும் நாடுகளுக்கும் இடையிலான போராட்டமாகவே கெடுபிடி யுத்தம்  சித்திரிக்கப்பட்டது. அதேவேளை, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் காலனித்துவத்திற்கு எதிரான உணர்வையே அதிகளவுக்கு கொண்டிருந்தன.

மேலும் சோவியத் ஒன்றியம் தலைமையிலான சோசலிச அணியானது உலகளாவிய ரீதியில் காலனித்துவத்திற்கு எதிரான இயக்கங்களுக்கு ஆதரவானதாக விளங்கியது. ஐ.நா.வில் இராஜதந்திர ரீதியான ஆதரவையும் தேவைப்படும் போது பணம் மற்றும் ஆயுத உதவியும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


சுதந்திரமான உலகம் என்று அழைக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்தை உள்ளீர்த்துக் கொண்ட நாடுகளின் மேலாதிக்கம் மற்றும் சுரண்டல்களுக்கு எதிரான நேச அணியாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன், அமெரிக்க நாடுகள் பலவற்றுக்கு சோவியத்  ஒன்றியம் விளங்கியது. ஆனால், சோவியத் ஒன்றியம் சின்னா பின்னமாகி கூட்டுச் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் பலர் தனித்தனி சுதந்திரமான தேசங்களாக இப்போது மிளிர்ந்து கொண்டிருக்கும்.

தற்போதைய கால கட்டத்தில் ரஷ்யா, சீனா உட்பட  பல நாடுகளில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது தாராளவாதிகள் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவதையும் அவதானிக்க முடிகிறது. ஆனால், கோடிக் கணக்கான மக்களை வறுமையின்  கோரப்பிடியிலிருந்து மீட்பதற்கும் கல்வியறிவை மக்கள் மத்தியில் அதிகளவுக்கு கொண்டு செல்வதற்கும் நவீன சுகாதார வசதிகள், இலவச மருத்துவ சேவை என்பனவற்றினூடாக பொது மக்களின் ஆயுள் காலத்தை நீடிக்கச் செய்வதற்கும்  1917இல் இடம்பெற்ற மாபெரும் புரட்சியே அத்திபாரமிட்டது என்று நேர்மையான பார்வை கொண்ட வரலாற்றியலாளர்கள் பலர் கூறுகின்றனர்.

அத்துடன், ஐ.நா.வின் உருவாக்கம், மனித உரிமைகளை வரையறுத்து வடிவமைத்தல், புகலிடம், உணவு என்பனவற்றுக்கான உரிமைகளை சர்வதேச உரிமைகளாக அங்கீகரிப்பதற்கு முன்தள்ளிவிடுதல் என்பனவும் இந்தப் புரட்சியினால் ஏற்பட்ட "தாக்கம்' என்பதை நிராகரித்துவிட முடியாது. 


 1989  1991 காலப் பகுதியில் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு  ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் முடிவுக்கு வந்ததுடன், மீண்டும் முதலாளித்துவ முறைமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆயினும் பாரிய ஊழல், மோசடிகள், பொருளாதார சமத்துவமின்மை, இடைவெளி அதிகரிப்பு போன்று உலகின் பல பாகங்களில் அதிருப்தி மேலோங்கி வருவதையும் அவதானிக்க முடியும்.

இந்நிலையில் முதலாளித்துவத்திற்கு எதிராக மீண்டும் சவால்கள் மேலெழவும் கூடும்  அதேவேளை, புரட்சிகள் வெறுமனே உடனடியான அறிவுறுத்தல்களால் வெடிப்பதில்லை என்பதையும் எவ்வாறாயினும் உலகின் முதலாவது சோசலிச நாடு பெற்றிருக்கும் அனுபவங்கள் பாரியவையாகவும் தொடர்ந்தும் பொருத்தப்பாட்டையும் கொண்டிருக்கின்றனவென்றே தோன்றுகிறது.

TOTAL VIEWS : 10918
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3hlpk
  PLEASE ENTER CAPTA VALUE.