வீதி விபத்துகளை தவிர்க்கும் உபாயம்
2017-08-04 09:40:30 | General

வீதி விபத்துக்களால்  ஒவ்வொரு 3 1/2 மணிநேர இடைவெளியில் இலங்கையர் ஒருவர் மரணமடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதிப்போக்குவரத்து தொடர்பாக காலத்துக்குக் காலம் பல்வேறு சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளுக்கும் வாகனமோட்டுவோருக்கும் விழிப்புணர்வூட்டும்  நடவடிக்கைகள் கிரமமாக முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் வீதி விபத்துக்கள் அதிகரித்துவருவதுடன், உயிரிழப்புகளும் காயமடைவோரின் தொகையும் மோசமானதாகக் காணப்படுகின்றன.

நவீன உலகில் வாகனப்போக்குவரத்து அத்தியாவசியமான சேவையாக காணப்படுகிறது. வீதிக்கட்டமைப்புகள் சமூகங்கள் மத்தியில் பிணைப்புகளை  ஏற்படுத்துவதுடன் உள்ளூர் போக்குவரத்து முறைமைகள்  வாழ்க்கை முறைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.


அத்துடன் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும் உதவுகின்றன. அதேவேளை பொது மக்கள்  இலகுவான முறையில் பிரயாணம் மேற்கொள்வதற்கும் அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ளவும் நவீன வாகன வசதிகள் உதவியாக இருக்கின்றபோதிலும் துன்பத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. வீதி விபத்துக்களால் மரணம் சம்பவிப்பதுடன் காயமடைவதும் உடல் ஊனமடைவதும் கடந்த வருடங்களைவிட இப்போது அதிகரித்திருக்கிறது.

வீதி விபத்துச் சம்பவங்களினால் ஏற்படும் மரணங்களில் இளைஞர்களின் எண்ணிக்கையே அதிகமானதாகும். அத்துடன் இவற்றால் அதிகளவு செலவும் அரசாங்கத்துக்கு ஏற்படுகிறது. உலகின் 46 சதவீதமான மோட்டார் வாகனங்களை வளர்ச்சியடைந்த நாடுகள் கொண்டிருக்கின்றபோதிலும், உலகில் ஆண்டுதோறும் ஏற்படும் வீதி விபத்துக்களில் 10 சதவீதமானவையே இந்த நாடுகளில் இடம்பெறுவதை பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.

வீதித்தடைகள், சமிக்ஞைகளைப் பொருத்துதல்  உட்பட வீதிப் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்க்க முடியுமெனக் கூறப்படுகிறது. ஆனால்  வீதிப் பாவனையாளர்களின் மனநிலை, செயற்பாடு மற்றும் வீதிப் போக்குவரத்துத் தொடர்பாக சிறப்பான கொள்கையை நடைமுறைப்படுத்தாமை என்பனவே இப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணமாக தோன்றுகிறது. உண்மையில் பாதுகாப்பான  வீதிப் போக்குவரத்து தொடர்பாக சிறப்பான கொள்கையை வகுத்து அதனை செம்மையாக அமுல்படுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களால் ஏற்படும் அவல மரணங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.


2020 இல் வீதிப் போக்குவரத்து விபத்துகளால் உலகில் ஏற்படும் மரணங்கள்,  காயங்களைக் குறைத்துக்கொள்வது ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்காகும். நான்கு முக்கியமான விடயங்கள் இந்த இலக்கை வென்றெடுப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். இதில் முதலாவது விடயம் வீதிப் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பான விதத்தில் தரவு விபரங்களைக் கொண்டிருப்பதாகும்.

இதன்மூலம் வீதி விபத்துகளுக்கான  காரணிகள் எவையென்பது குறித்து நன்கு ஆராய்ந்து, புரிந்துகொண்டு அதற்கமைய செயற்பட முடியும். அடுத்த விடயம்  வீதிகளைப் பயன்படுத்துவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் உள்சார் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது காணப்படுகிறது.

பாதசாரிகள், மோட்டார்சைக்கிள் செலுத்துவோர் ஆகியோர் வீதி விபத்துக்களில் அதிகளவில் மரணமடைகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவதற்காக சைக்கிள் போக்குவரத்துக்கு வீதியில் தனியான பாதை அமைத்தல், பாதசாரிகள் வீதிகளை கடந்து செல்வதற்கு மேம்பாலம் அல்லது  நிலத்துக்கு கீழ் பாதைகளை அமைத்தல்,  தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்துதல் போன்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  மூன்றாவதாக அதிகளவு உயர்மட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை இறக்குமதி செய்து பாவனைக்கு விடுவதற்கு அனுமதித்தல் முக்கியமான விடயமாக காணப்படுகிறது. 


சர்வதேச வாகனப் பாதுகாப்புத்தரத்தைக் கொண்டிருப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆசனப்பட்டி அணிதல், இலத்திரனியல் ரீதியாக உறுதிக்கட்டுப்பாட்டை கொண்டிருத்தல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை இப்போது   பல நாடுகள் பின்பற்ற ஆரம்பித்திருப்பதையும் அவதானிக்க முடியும்.

இந்த விடயத்தில் நவீன, முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களுக்கு ஊக்குவிப்பு அளிக்கப்பட வேண்டும். சர்வதேச தரத்துக்கு அமைவாக தேசிய ஒழுங்கு விதிகளை ஏற்படுத்த அரசாங்கம்  குறிப்பாக போக்குவரத்து அமைச்சு  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நான்காவது முக்கியமான விடயம், விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றால் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகளை அதிகரித்துக்கொள்வதாகும். ஒவ்வொரு செக்கனுக்கும் நாடளாவிய ரீதியில் அவசர தொலைபேசி அழைப்பைப் பயன்படுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும்.

அத்துடன் சகல மருத்துவமனைகளும், விபத்தில் சிக்கி கொண்டுவரப்படுவோருக்கு உடனடியாக தேவைப்படும் சிகிச்சையை வழங்குவதற்கு வேண்டிய வளங்களைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் வீதி விபத்துக்களில்  பாதிக்கப்படுவோர் அதாவது நீண்டகாலத்துக்கு இயங்க முடியாமலிருப்போருக்கு உதவி வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஏற்பாடுகளும் இன்றியமையாதவையாகும்.


யாவற்றுக்கும் மேலாக வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு போக்குவரத்தை மேற்கொள்ளும் பொது மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். வீதிப் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை கவனமாகக் கடைப்பிடிப்பதுடன் மதுபோதையில்  வாகனம்  செலுத்துதல், தொலைபேசியில் உரையாடியவாறு வாகனமோட்டுதல், அதிவேகமாக வாகனத்தைச் செலுத்துதல்,  தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்துதல் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்வதன் மூலம்   வீதி விபத்துக்களைக் குறைக்க முடியும்.

TOTAL VIEWS : 2410
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
clv2e
  PLEASE ENTER CAPTA VALUE.