வடக்கு தொடர்பான கொழும்பின் நிலைப்பாடு ஆரோக்கியமானதல்ல
2017-08-03 11:29:17 | General

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அதனால் அங்கிருந்து இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடெனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருப்பதுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் அங்கிருப்பதாகவும் அவர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

அதேவேளை யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் வாழும் தமிழ் மக்களை சதாகாலமும் அச்சமான சூழ்நிலையில் வைத்திருப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் விசனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளதைக் காண முடிகிறது.


2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்த போதிலும் 2015 ஜனவரியில் ஆட்சிமாற்றம் ஏற்படும் வரை முன்னைய ராஜபக்ஷ நிர்வாகத்தில் வடபகுதி மக்கள் பெரும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார்கள். யுத்தகாலத்தில் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டிருந்த தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படாமல், பொதுமக்கள் பலர் தொடர்ந்து இடைத்தங்கல் நிலையங்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்க வேண்டியிருந்தது.

அத்துடன் அவர்களின் விவசாயச் செய்கைக்கான வளமான நிலத்தில் படையினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டதுடன் வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதால் தமது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டிருப்பதாக தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் கவலை தெரிவித்துவந்தனர்.

2013 இல் வடமாகாண சபைக்கு முதன்முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டு அரசியல் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டதையடுத்து இராணுவ முகாம்களை அகற்றிடுமாறும் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு பாதுகாப்புக்கு பொலிஸாரை ஈடுபடுத்துமாறும் முதலமைச்ர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட வடமாகாண நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றது.

அத்துடன் உள் நாட்டில் மட்டுமன்றி ஐ.நா. உட்பட சர்வதேச மட்டத்திலும் வடக்கில் அளவுக்கு அதிகமான இராணுவ பிரசன்னத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்வுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புத் தொடர்பாக முதலமைச்சரும் தமிழ் கூட்டமைப்பின் இதர தலைவர்களும் எடுத்துரைத்து வருகின்றனர். 


2015 ஜனவரி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், தாமதமாகவேனும் தனியார் காணிகளை விடுவித்தல் , இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கி வைத்தல் போன்றவற்றை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டதால் திறந்த வெளிச் சிறையில் வாழ்வது போன்ற அவல நிலைக்குள்ளிருந்த மக்களின் வாழ்வில் 
சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

ஆயினும் அமைதியான சூழ்நிலையை குழப்பும் செயற்பாடுகள் அவ்வப்போது தலைதூக்க ஆரம்பித்ததுடன் சமூக விரோதச் செயற்பாடுகளும் அதிகரித்தன. போதைப் பொருள் பாவனை, வாள்வெட்டு, கொள்ளை, தெருச் சண்டித்தனம் உட்பட அடாவடித்தனங்கள் இளைய சமூகத்தினர் மத்தியில் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால் இந்தச் செயற்பாடுகள் வடக்கில் அமைதியின்மை நீடித்திருக்கின்றதென காண்பிப்பதற்கும் சதாகாலமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் வட, கிழக்கை வைத்திருப்பதற்குமான மறைமுக நோக்கத்தை கொண்டவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்துவதையும் காணமுடிகிறது.

அண்மையில் மேல் நீதிமன்ற, நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுடப்பட்டு இறந்தமை, அதனைத் தொடர்ந்து பொலிஸார் மீதான வாள்வெட்டு சம்பவங்களால் வடக்கிலிருந்து படை முகாம்களை அகற்ற முடியாதிருக்கின்றதென்பதை மேற்குலகு புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் "கிரீஸ் பூதம்' பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பான பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. அதனால் மக்கள் பெரும் பீதி, கவலையுடன் இருந்துவந்தனர்.

ஆயினும் ஆட்சி மாற்றத்தினால் கடந்த இரு வருடங்களாக வடக்கு மக்கள் அனுபவித்த சிறிதளவுக்கேனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் சூழ்நிலை தொடருமா என்பதற்கான வலுவான சந்தேகம் தற்போது மேலெழுந்திருப்பதாக தோன்றுகிறது. வடக்கில் எப்போதுமே அச்சுறுத்தலான நிலைமை நீடித்திருக்கின்றதென்று தெற்கிலுள்ள மக்கள் மத்தியில் தவறான பிரதிமையை ஏற்படுத்தி அதன் மூலம் அனுகூலம் பெற்று வரும் கடும் போக்கு சக்திகளின் பிரசாரத்திற்கு அரசாங்கம் இடமளியாத விதத்தில் வடக்கில் பொலிஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்தி, சமூகவிரோதக் கும்பல்களை அடையாள கண்டு அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக முன்னைய ராஜபக்ஷ நிர்வாகத்தின் கடும் போக்கான கொள்கையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த முயற்சித்தால் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்காது. மாறாக விரிசலே அதிகரிக்கும்.

TOTAL VIEWS : 1195
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
sh0oa
  PLEASE ENTER CAPTA VALUE.