அகவை 20 இல் ஒரு ஒப்புதல் வாக்குமூலம்
2017-04-06 11:14:54 | General

"தினக்குரல்' இன்று 21 ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறது. ஞாபகங்கள் வலுவானவை. மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இன்றைய தினம் கடந்த இரு தசாப்தங்களை நாங்கள் திரும்பிப்பார்ப்பதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது.

தமிழ் பேசும் மக்களின் குரலாக "தினக்குரல்' தனது கடமையை, பொறுப்பை நிறைவேற்றியுள்ளதா? இலக்கை எட்டும் பயணத்தில் தடம்புரளாமல் முன்னோக்கிச் செல்கின்றதா? என்பது பற்றி மீளாய்வு செய்வதற்கும் எதிர்கால "செல்திசை' பற்றிய திட்டங்களை வகுத்துக்கொள்வதற்கும் தற்போது எட்டியிருக்கும் "கட்டிளம் பருவம்' அதிகளவுக்குப் பொருத்தப்பாட்டைக் கொண்டிருக்கும் என்பது எமது நம்பிக்கை.

இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள், குறிப்பாக வட, கிழக்கைத் தமது வரலாற்றுப்பூர்வ வாழ்விடமாகக் கொண்டவர்கள்; மலையகம், மேலகம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் வாழ்பவர்களின் குரலாக நாங்கள் ஒலித்துக்கொண்டிருக்கிறோமா? இந்தக் கேள்விக்குரிய ஆக்கபூர்வமான, நேர்மையான பதிலை வழங்குபவர்கள் நிச்சயமாக எமது வாசகப் பெருமக்களே என்பதில் சந்தேகம் இல்லை. சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றில் மிகவும் இக்கட்டான, துயர்நிறைந்த காலகட்டத்தில் "தினக்குரல்' "ஓசை'யை எழுப்ப ஆரம்பித்தது.


தமிழ் பேசும் மக்களில் பெரும்பாலானவர்களின் இயல்பு வாழ்வு மறுக்கப்பட்டு, சொந்த மண்ணிலும் உலக நாடுகளிலும் ஏதிலிகளாக துன்பப்பட்டுக்கொண்டிருந்த, துயர் நிறைந்த காலகட்டத்தில், சமூகத்தின் அவலங்களை எடுத்துரைக்கும் குரலாக, ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் குரலாக, நியாயத்தைத் தட்டிக்கேட்கும் குரலாக, நீதி, நேர்மையுடன் சிந்திப்போரின் கவனத்தை ஈர்த்துக்கொள்ளும் குரலாக, சர்வதேசத்தின் பார்வையைத் திருப்பும் குரலாக "தினக்குரல்' தமிழ் பேசும் வாசகர்களின் கரங்களில் தவழத் தொடங்கிய நாள் முதல், தனது கடமையை பத்திரிகைத் தர்மத்தின் வரம்புக்குள் நின்றவாறு முன்னெடுத்துச் செல்கின்றதென்று நம்புகிறோம்.


நாங்கள் இதுவரை காலமும் கடந்துவந்த பயணப் பாதையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டிருந்தோம். ஆயினும் இந்த 20 ஆண்டுகளில் ஒருபோதும் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், இலட்சியங்கள், பண்பாடு, கலாசாரம், மத நம்பிக்கைகள், அன்றாட அவசரத் தேவைகள், அடிப்படை உரிமைகள் போன்றவற்றுக்கு இடையூறாக முட்டுக்கட்டை போடக்கூடிய சக்திகளின் "பிரசார வாகனமாக' செயற்படாமலிருப்பதை தினக்குரல் தனது சக்திக்குட்பட்டவரை உறுதிப்படுத்தியவாறு தனது கடமையைத் தொடர்கின்றது என்பது எமது தரப்பின் நம்பிக்கை.


உள்நாட்டிலும் உலகத்திலும் அன்றாடம் இடம்பெறும் சம்பவங்கள், அரசியல் மாற்றங்கள், இயற்கை அனர்த்தங்கள், சுகாதாரப் பிரச்சினைகள், சமூகங்கள் மத்தியிலான முரண்பாடுகளும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டுகொள்வதற்குமான பரிந்துரைகள், மருத்துவம், விஞ்ஞான, தொழில்நுட்பத்தில் உலகம் எட்டியிருக்கும் அபார முன்னேற்றம் குறித்த விபரங்கள், சட்டம், ஒழுங்கு மீறப்படும் தருணங்களில் அவை பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்தைத் திருப்புவதற்கான முயற்சிகள், யாவற்றுக்கும் மேலாக கல்வித்துறையில் சமூக மேம்பாட்டுக்கான அறிவூட்டலும் வழிகாட்டலும், பொருளாதார முன்னேற்றத்திற்கான விளக்கங்கள் உட்பட சகல துறைகள் சார்ந்த விடயங்களும் தேவைப்பாடுகளும் செய்திகள், செய்தி ஆய்வுகள், கட்டுரைகள், கருத்துருவாக்கங்கள் மூலம் சமூகங்களை சென்றடைவதற்கு காத்திரமான தளத்திலிருந்தவாறு தினக்குரல் தனது பணியை முன்னெடுத்துச் செல்கின்றதென்பது எமது உறுதியான நிலைப்பாடு. 


உக்கிரமான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் எமது பயணத்தை ஆரம்பித்தோம். இப்போது அந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும் யுத்தத்தின் உயிர், உடைமை இழப்புகள், அவலங்களைச் சுமந்தவாறு மன ரணங்களுடன் தமிழ் பேசும் மக்களின் கணிசமான தொகையினர் இருந்து வருகின்றனர். அவர்களின் உடனடித் தேவைகள், அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளைத் தூண்டுவதற்கும் அதிகாரத்திலுள்ளவர்களைத் தட்டிக் கேட்பதற்கும் "ஊடக சுதந்திரத்தை' உரிய முறையில் பயன்படுத்த தினக்குரல் ஒருபோதும் தயங்கியதில்லை.

யாவற்றுக்கும் மேலாக, தமிழ் பேசும் மக்களின் கடந்த 20 வருட வாழ்வுக்கான பிரதான சாட்சியமாக நாங்கள் இருந்தோம், இருக்கின்றோம், இருப்போம் என்ற "செய்தி' யை இத்தருணத்தில் வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
வாசகப் பெருமக்களே! இதுகாலவரை நீங்கள் எமக்களித்துவரும் பற்றுறுதியுடன் கூடிய ஆதரவும் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் எமக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருவதோடு, எம்மைப் புடம்போட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்காலத்திலும் அந்த ஊக்குவிப்பு அதிகளவுக்குத் தொடருமென எதிர்பார்க்கிறோம்.

 தேசியப் பத்திரிகையாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து பிராந்தியப் பத்திரிகையாகவும் வெளிவந்துகொண்டிருக்கும் தினக்குரலின் இரு தசாப்தகால "ஒப்புதல் வாக்குமூலமாக' அமையக் கூடியதை தங்கள் கண்ணோட்டத்திற்காக சமர்ப்பித்திருக்கிறோம். நீதிபதிகளாக "சமன் செய்து சீர்தூக்கும் கோலாக' வாசகப் பெருமக்கள் முன் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை சமர்ப்பிக்கிறோம்.

TOTAL VIEWS : 1359
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
com4w
  PLEASE ENTER CAPTA VALUE.