அதிகரித்துவரும் சைபர் குற்றங்கள்
2016-09-01 10:05:14 | General

கணினிகளில் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் சைபர் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கடந்த திங்கட்கிழமை 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மறுதினம் செவ்வாய்க்கிழமை மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான ஆள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை கைதான மாணவர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியதாகவும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கோரும் செய்தியொன்றை அதில் வெளியிட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 மொரட்டுவ பகுதியில் கைதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கணினிக் குற்றச்சட்டத்தின் பிரகாரமே அவர் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு சந்தேக நபர்களும் குற்றவாளிகளாக காணப்பட்டால் அவர்கள் 3 இலட்சம் ரூபா அபராதத்தையும் 3 வருட
 சிறைத் தண்டனையையும் எதிர்கொள்ள நேரிடும்.

இலங்கை இணையத்தளங்கள் கடந்த காலத்திலும் ஊடுருவித் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தன. 2013-2014 காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

அக்காலகட்டத்தில் 22 அரசாங்க இணையத்தளங்கள் உட்பட 129 இணையத்தளங்கள் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தன. ஆயினும் 2007 ஆம் ஆண்டு கணினிகள் சட்டமூலத்தின் பிரகாரம் இளம் பராயத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையெனத் தோன்றுகிறது.


இந்த ஊடுருவல் தாக்குதல் தொடர்பான விபர ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் இந்த நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த பின்னர்  எவ்வாறு ஊடுருவித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதென்பது குறித்து கணினி அவசர கால பதிலளிக்கும் குழுவினரால் (சி.ஈ.ஆர்.ரி.) விபரமாகத் தெரிவிக்க முடியுமென்றும் இந்தக் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்தா ஊடகமொன்றுக்கு தெரிவித்திருப்பதைக் காண முடிகிறது.

சைபர் குற்றங்கள் இலங்கையில் மாத்திரமன்றி ஏனைய நாடுகளிலும் அதிகரித்து வருவதை காண முடிகிறது. இந்தியா, அமெரிக்கா, துருக்கி, சீனா, பிரேசில், பாகிஸ்தான், அல்ஜீரியா, ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளும் இந்த  சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.


உண்மையில் இந்தச் சைபர் குற்றங்கள் நாடுகள் சிலவற்றுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பலின் நிலைகள் குறித்த செய்திகள் கசிந்திருந்ததாக இந்திய ஊடகங்கள் கவலையையும் விசனத்தையும்  வெளியிட்டிருந்தன. இரகசியங்களைத் திருடுவதற்கான தந்திரோபாயத்தின் அங்கமாக இந்த சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாமெனவும் கூறப்படுகிறது.

இந்த விடயத்தில் முன்னொருபோதுமில்லாத விதத்தில் சர்வதேச சமூகம் அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சைபர் தாக்குதல்கள் இடம்பெறும் போது அவற்றைத் தடுத்து நிறுத்துவது தொடர்பான எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பது குறித்து தெளிவற்ற நிலையும் காணப்படுகிறது.


ஜனாதிபதியினதும் அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றினதும் இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் உத்தியோகபூர்வ இரகசியங்கள், கொள்கைத் திட்டங்கள், பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படுவது குறித்து மத்திய மாகாண அரசாங்கங்கள் செயற்பாட்டுத் திறனுடன் முயற்சிக்க வேண்டும்.

கணினி முறைமைகள் சில நலிவான தன்மையைக் கொண்டிருப்பதால் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய கடப்பாடு தேவைப்படுகிறது. போக்குவரத்து, மருத்துவ நிலையங்கள் போன்றவற்றின் முறைமைகளில் தாக்குதல்கள் இடம்பெற்றால், பல்வேறு இடையூறுகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள நேரிடும்.


கணினிகளில் ஊடுருவித் தாக்குதல்களை மேற்கொள்ளும் "சைபர் குற்றங்கள்' எதிர்காலத்தில் இடம்பெறாமலிருப்பதற்கான தீர்வை கணினித் துறை நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் கண்டறிந்து கொள்ள வேண்டும். அதேவேளை இத்தகைய குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடிய சட்ட ஏற்பாடுகளை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய சேவைகள் உட்பட சகல தேவைகளையும் கணினி ஊடாக மேற்கொள்வது நடைமுறையில் அதிகரித்துவரும் நிலையில் ஊடுருவல் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு செயற்பாட்டுத் திறனுடனான ஏற்பாடுகள் அவசியம். 

TOTAL VIEWS : 2514
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
cuk9q
  PLEASE ENTER CAPTA VALUE.