நல்லாட்சி அரசாங்கம் தப்பிப் பிழைக்குமா?
2017-07-19 12:21:33 | General

நல்லாட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்து கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்ட நிலையில், இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதால் நல்லாட்சி அரசு கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும்  செப்டெம்பர் மாதத்துடன்,  இரண்டு ஆண்டுகால புரிந்துணர்வு உடன்பாடு முடிவுக்கு வந்ததும், தாம் கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக ,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையிலேயே ஆட்சிக் கவிழ்ப்புக்கான பேரப் பேச்சுக்கள், மந்திராலோசனைகள்,  சதித்திட்டங்கள், கட்சித் தாவலுக்கான அழைப்புகள், சவால்கள் என மகிந்த அணி  களத்தில் இறங்கியுள்ளதால் இலங்கையின் அரசியலில் எந்த வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.  

கடும் நெருக்கடிகளை எதிர் கொண்டாலும் தேசிய அரசு எப்படியும் தொடரும்  என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ள அதேவேளை, நல்லாட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து கூட்டு  ஆட்சியை தக்க வைப்பதில் அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவு விலக்கப்பட்டால் கூட, பாராளுமன்றத்தில் 107 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 6 ஆசனங்கள் மாத்திரமே தேவைப்படும். ஆகையினால் சில வேளைகளில்  மகிந்த அணியின் சதித்திட்டங்களினால்  தேசிய அரசு கவிழும் நிலை ஏற்பட்டால் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவற்றின் ஆதரவைப் பெற்று தேசிய அரசை தொடர்ந்து முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

 
புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே அதனைக் கொண்டுவராது தடுக்கும் வகையில் தேசிய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு இச் சந்தர்ப்பத்தை மகிந்த ஆதரவு அணி, பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. புதிய அரசியலமைப்பு திருத்தத்தால் பௌத்த மதத்திற்கு ஆபத்து என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ள மகிந்த அணி  அதற்காக மகாநாயக்க தேரர்களையும் தமது பக்கம் திருப்பிவிட்டது.  அது மட்டுமன்றி தேசிய அரசுக்கு எதிராக தினமும் ஏதோவொரு போராட்டம் என்ற வகையில் முன்னெடுத்து  அரசு மீதான வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியும் விட்டுள்ளது.

இதனால் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் தேசிய அரசு தொடர்பில் நல்லபிப்பிராயம் கிடையாது.  இது ஒரு புறம் என்றால் தேசிய அரசு தமிழ் மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான மதவாத ரீதியான தாக்குதல்கள் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் இந்த அரசு மீது தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் நம்பிக்கையில்லை. 


ஒட்டுமொத்தமாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களினதும் கட்சிகளினதும் நம்பிக்கையை இழந்துள்ளதுடன் எதிர்ப்பையும் சந்தித்துள்ள இந்த அரசு, எவ்வாறு இந்த அரசியல் நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பிழைக்கப் போகின்றது என்பது ஒருபுறமிருக்க, இந்த அரசியல் சூழலிலிருந்து அரசைக் காப்பாற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமாகவிருந்தால் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியேற்படுமென்பது கூட்டமைப்பு தலைமைக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் நன்கு தெரிந்த விடயம்.  

எனவே இவ்விடயத்தில் கூட்டமைப்பு தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது.  ஏனெனில் இந்த நல்லாட்சி அரசு அவ்வாறு கூட்டமைப்பு ஆதரவளிக்கும் வகையில் இதுவரை தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழியிலேயே பயணிக்கும் இந்த அரசை பாதுகாக்க வேண்டிய எந்த முகாந்திரமும் தமிழ் மக்களுக்கோ அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கோ கிடையாது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிக்கு கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை மைத்திரிரணில் அரசுக்கு தாராளமாகவே உண்டு.

 

TOTAL VIEWS : 1610
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7pijn
  PLEASE ENTER CAPTA VALUE.