ஐ.நா. நிபுணரின் எச்சரிக்கை
2017-10-25 10:06:14 | General

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நீண்டகாலமாக முடங்கிக் கிடப்பதாகவும் அதனைத் துரிதப்படுத்துவது அவசியமென்றும் இல்லாவிடில் சர்வதேச சமூகம் நடவடிக்கையெடுக்கும் அபாயம் இருப்பதாகவும் இலங்கைக்கு வருகை தந்திருந்த நீதி மற்றும் இழப்பீடு வழங்கலை மேம்படுத்தும் விவகாரத்திற்குப் பொறுப்பான ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பப்லோ கொழும்புக்கு அழுத்தி உரைத்திருப்பதை காண முடிகிறது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்ற போதிலும் நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு அளிக்கப்பட்டிருந்த உறுதிமொழிகளை கொழும்பு நடைமுறைப்படுத்தவில்லையென தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனமும் அதிருப்தியும் மேலெழுந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பாரிய பங்களிப்பை தாங்கள் வழங்கியுள்ள நிலையில் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தாங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற கவலையையும் விசனத்தையும் தமிழ் மக்கள் குறிப்பாக வட, கிழக்குப் பகுதியில் வாழ்வோர் கொண்டிருக்கின்றனர். 


யுத்தகால அட்டூழியங்களுக்கு நீதி வழங்கப்படுமென சர்வதேச சமூகத்துக்கு உறுதியளித்திருந்த நிலையில் அதனை நிறைவேற்றுவதில் மெத்தனப் போக்கை காண்பிப்பதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பப்லோ இடித்துரைத்திருப்பதாக தென்படுகிறது. "சாட்சிகளற்ற யுத்தம்' என்று வர்ணிக்கப்பட்ட உக்கிர மோதல் காலத்திலும் அதன் பின்னரும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டதாக தொடர்ந்து பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், 40 ஆயிரம் பொது மக்கள் வரை இறுதிக் கட்ட போரில் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டிருந்தது. ஆயினும் அச்சமயம் ஆட்சியிலிருந்த ராஜபக்ஷ நிர்வாகம் பொது மக்கள் எவருமே பலியாகவில்லையென திட்டவட்டமாக கூறிவந்ததுடன் ஐ.நா.வின் அனுசரணையுடனான சர்வதேச விசாரணையையும் உறுதியாக நிராகரித்திருந்தது.

ஆயினும் 2015 ஜனவரியில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதாக உறுதிமொழி அளித்ததுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. 


போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை உட்பட நிலைமாற்று நீதிக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் இணங்கியிருந்த போதும் அவற்றுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் தொடர்ந்தும் தாமதம் காணப்படுவதாக பரவலாக விசனமும் கவலையும் மேலெழுந்திருக்கும் தருணத்தில் ஐ.நா. விசேட அறிக்கையாளர் பப்லோவின் விஜயமும் அமைந்திருக்கிறது.

தங்களின் (ஐ.நா. விசேட அறிக்கையாளர்களின்) பரிந்துரைகள் இலங்கையை சட்டரீதியாக கட்டுப்படுத்தாதென அவர் கூறியிருக்கின்ற போதிலும் நிலைமாற்று நீதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் அசட்டையீனமாக இருந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி அவர் சுட்டிக்காட்டியிருப்பதையும் பார்க்க முடிகிறது. ராஜபக்ஷ நிர்வாகத்தைப் போன்றே தற்போதைய நிர்வாகமும் சர்வதேச சக்திகளிடமிருந்து போர்க் கதாநாயகர்களைப் பாதுகாக்கப் போவதாக சூளுரைத்துள்ள நிலையில் "மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவருமே "கதாநாயகன்' என்று அழைக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள் அல்ல என்று ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர் பப்லோ கூறியிருக்கிறார். 


அத்துடன் நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் "சூனிய வேட்டை' அல்ல எனவும் இவற்றை பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானவையென பொதுப்படையாக கூறிக் கொள்வதனூடாக தவறான முறையில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றனவென்றும் பப்லோ சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அத்துடன், நிலைமாற்று நீதியின் அனுகூலங்களை இலங்கையே இல்லாமல் செய்துவிடுகின்றதென்றும் தனது 14 நாள் விஜயத்தின் போது கண்டு கேட்டு உய்த்துணர்ந்ததன் பிரகாரம் அபிப்பிராயத்தை அவர் வெளியிட்டிருப்பதாக தோன்றுகிறது. இந்தப் பயணத்தில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் அவர் சென்றிருந்ததுடன் இன நெருக்கடியில் பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்திருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும் வர்த்தக நடவடிக்கைகளில் இராணுவத்தின் வகிபாகத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறும் வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்குமாறும் இவற்றின் மூலம் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியுமென்பது அவரின் முக்கியமான பரிந்துரைகளாகும். ஆனால், இந்த யோசனைகள் ஆரோக்கியமான முறையில் செவிமடுக்கப்பட்டாலும் அவற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கான அரசியல் விருப்பம் வெளிப்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியே. 

TOTAL VIEWS : 1785
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
mxuh7
  PLEASE ENTER CAPTA VALUE.