நழுவிச் செல்லும் நல்லிணக்கம்
2017-10-26 10:43:01 | General

தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வட, கிழக்கை வரலாற்று பூர்வ வாழ்விடமாக கொண்டவர்கள் நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்றை உள்ளடக்கிய நீதியானதும் நிலையானதுமான  சமாதானத்தை தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கு "நல்லிணக்கம்' தொடர்பான காத்திரமான நடவடிக்கைகள் மிகவும் அத்தியாவசியமானவையாக காணப்படுகின்றன. 

ஆனால் யுத்தம்  முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தசாப்த காலத்தை நாடு அண்மித்துள்ள போதிலும்  முன்னாள் யுத்த பிரதேசங்களில் நல்லிணக்கத்துக்கு சவால் விடுக்கும் நடவடிக்கைகளே தொடர்ந்து இடம்பெறுகின்றன.

சொந்த நிலங்களை  மீள  ஒப்படைக்குமாறு தொடர்ந்து இடம்பெறும்  போராட்டங்களுடன் காணாமல் போனோரின் உறவினர்களின்  போராட்டங்களும் தொடர்கின்றன.  இந்தப் பிரச்சினைகளுக்கு துரிதமாகத் தீர்வைக் காணாதுவிடின்  அரசியல் தீர்வொன்றை காத்திரமான முறையில் பெற்றுக் கொள்ள இயலாது.  அத்துடன் நல்லிணக்கத்தினூடாகவே  நீதியான தீர்வொன்றை வென்றெடுக்க முடியுமென்பதற்கு அதிக சாத்தியம் காணப்படுகிறது.


சூழிசைவு சார்ந்த யதார்த்தம், மனித உணர்வுகள், தார்மிக ரீதியான வாதம்,  எதிர்கால அரசியலுடனான  கடந்த கால அதிகாரம் என்பனவற்றுடன் தொடர்புபட்டதாகவே  நல்லிணக்கம் ஏற்படுகிறது. அதுவொரு நிகழ்வு அல்ல என்பதையும் மனித உறவுகள்,  அதிகார இயக்கவியல் என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறிமுறையாகவும் உள்ளதென்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

அதேவேளை  நல்லிணக்கம் என்பது  சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக சுட்டிக்காட்டப்படும் விடயமாக காணப்படுகிறது.  யுத்தம்  முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நீண்ட காலமாக இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்துடன் கூடிய சமாதான சக வாழ்வை கட்டியெழுப்புதல் என்பது தொடர்ந்தும் நழுவிச் செல்லும் ஒன்றாகவே காணப்படுகிறது.

2015 ஜனவரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து  தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் அறிகுறிகள் தென்பட்டபோதிலும் இருவருடங்கள் கடந்த நிலையில் பாரிய "திருப்பங்கள்' எவையும் இடம்பெறவில்லை. சமூக, பொருளாதார,  கலாசார, அரசியல் ரீதியான பரிமாணங்களைக் கொண்டதே நல்லிணக்கமாகும். 


மேலாதிக்க சிந்தனை, வேறுபாடுகள்,  வன்முறை என்பன இல்லாமல் நீதி, சமாதானம் என்பனவற்றினூடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதேசமயம்  நல்லிணக்கத்தை எட்டுவதற்கு சகல விடயங்களிலும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமென்பதில்லை. ஒருவரையொருவர் பரஸ்பரம் கௌரவமாக நடத்துவதை உறுதிப்படுத்துவதுடன் சாத்வீக வழியில்  வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பது நல்லிணக்கத்திற்கு மிகவும் முக்கியமானதொன்று.

சகல தரப்பினர் மத்தியிலும் பரஸ்பரம் புரிந்துணர்வு இருக்குமானால் பொது நலன்கருதிய விவகாரங்களிலும் இணக்கப்பாட்டை எட்டிக்கொள்ள முடியும். நல்லிணக்க நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களை  ஆற்றுப்படுத்தி அவர்களுக்காக நியாயபூர்வமான நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்கிறோமென  நம்பிக்கையூட்டினாலேயே பாரிய விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.


யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழ் மக்கள் மோசமான அழிவை எதிர்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நிலைமாற்று நீதியை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள் ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆயினும்  இதுவரை காலம் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அரசியலமைப்பு சீர்திருத்தம், நிலைமாற்று நீதி, ஆட்சி தொடர்பாக அரசாங்கம் அளித்திருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றியிருந்தால் "நல்லிணக்கம்' நழுவிச் செல்ல இடமளிக்க வேண்டிய தேவை மேலெழாதென சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 

கடந்த பல வருடங்களாக அரசியல் தீர்வொன்றை முன்வைத்து இனங்கள் மத்தியில்  நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் சாதகமான பெறுபேறு எதனையும்  கொடுத்திருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வட, கிழக்கில் அசாதாரணமான விதத்தில் இராணுவத்தினரைக் கொண்டிருத்தல், ஊழல், குடும்பச் செல்வாக்கு உட்பட  எதேச்சாதிகாரப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டதாக எதிரணிகள் விமர்சிக்கின்றன. 

அத்துடன் இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய  நிர்வாகத்தில் இத்தகைய கெடுபிடிகள் இல்லாத போதிலும் "நல்லிணக்கம்' என்பது தொடர்ந்தும் நழுவிச் செல்வதாகவே அமைத்திருக்கிறது. 

TOTAL VIEWS : 1388
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
s1tte
  PLEASE ENTER CAPTA VALUE.