அபிவிருத்திக்கு தொழில் சிறப்புத் தேர்ச்சி தேவை
2017-11-01 10:01:29 | General

உள்நாட்டில் வேலை வாய்ப்பின்றி ஆட்கள் இருக்கும் நிலையில் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை வரவழைப்பது தொடர்பாக  அண்மைக்காலமாக அதிகளவு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுவதையும் கடும் எதிர்ப்புகள் மேலெந்திருப்பதையும் காண முடிகிறது.

குறிப்பாக கட்டிட நிர்மாணத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு வெளியாரை தருவிக்க வேண்டிய தேவைப்பாடு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. 

தொழில் நிபுணத்துவ சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் தேவைப்படும் தொகைக்கு ஏற்புடையதாக இல்லை என்பதும்  அதனாலேயே வெளியிலிருந்து அவர்களை வரவழைக்க வேண்டிய தேவைப்பாடு மேலெழுந்திருப்பதையும் அனுமானித்துக் கொள்ள முடியும். 

எந்த நாட்டினராலும் அந்நாட்டு மக்களின்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார வளர்ச்சி மற்றும்  அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான  அவசியத் தேவைப்பாடு காணப்படுகிறது.

ஆனால் நாடொன்றின் உண்மையான சமூக, பொருளாதார அபிவிருத்தியானது அந்நாட்டு மக்களின் தொழில் சிறப்புத் தேர்ச்சியுடன் தொடர்புபட்டதொன்றாகும். குறிப்பாக தொழில்புரியும் மக்களின் தொழில் சிறப்புத் தேர்ச்சியுடன்  தொடர்புபட்டதொன்றாகும்.

தளராத கடும் உழைப்பு,  அர்ப்பணிப்பு உணர்வு, பொருத்தமான கல்வியறிவு என்பனவற்றுடன் சிறப்பான விதத்தில் தொழில் தேர்ச்சியை கொண்டிருத்தலே அபிவிருத்திக்கு  அவசியமாகத் தேவைப்படுகிறது. 


இலங்கையைப் பொறுத்தவரை நிர்மாணத்துறைக்கு தொழிலாளர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் வெளிநாடுகளிலிருந்து  ஆட்களை தருவிக்க வேண்டியிருப்பதாக இத் தொழில்துறை  சார்ந்த நிறுவனங்கள் கூறுகின்றன. 

 அதேவேளை  ஆர்வமுடைய மனித வலு வளமும் போதாமலிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.  உள்நாட்டிலும்  பார்க்க வெளிநாட்டில் தொழில் புரிவதால் சமூக மட்டத்தில் அதிக கௌரவம் கிடைக்குமென்ற மனப்பாங்கு,  உள்நாட்டில் கல்வி, தொழில் தேர்ச்சிக்கு அமைவாக ஊதியம் கிடைக்காமை போன்ற காரணங்களால் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக தொகையானோர் சென்றிருப்பதும் உள்நாட்டில் தொழில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணங்களிலொன்றாகும்.

இந்த விடயத்தில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்காவிடின் வெளிநாடுகளிலிருந்து நிர்மாணத்துறை உட்பட பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமையே  ஏற்படும்.

இது பொதுமக்களின் சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கு  இடையூறாக அமைந்துவிடும். நீடித்ததும் நிலையானதுமான பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் தேர்ச்சி விருத்தியும் போதியளவுக்கு பயிற்சி பெற்றிருக்கும் மனித வளமுமே முக்கியமானதாகும். அத்துடன் ஊழல், மோசடியற்ற தன்மையும் எதிர்கால வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் அவசியம். 


தொழில் சந்தை நிலைவரம் மாறுதலடைந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரியாக   பொருத்தமானதும் போதியளவிலானதுமான பயிற்சி பெற்ற  தொழிலாளர்களும்  ஊழியர்களும் முக்கியமானதாகும். ஏற்றுமதித்துறையில் போட்டித் தன்மையை கொண்டிருப்பதற்கும் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இது தேவைப்படுகிறது. 

உயர் இரண்டாம் நிலைக் கல்வித் தகைமை, அல்லது அதற்கு  மேலான கல்வித் தகைமை கொண்டவர்கள் அல்லது தொழில் சிறப்புத் தேர்ச்சி கொண்டவர்களில் அநேகமானவர்கள் வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆதலால்  விவசாயம், கால்நடை வளர்ப்பு, சேவைத்துறை, தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம், கட்டிட நிர்மாணம் என்பவற்றுக்கே தொழிலாளர்களுக்கு அதிக தட்டுப்பாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 

கட்டிட நிர்மாணத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கே  பணியாளர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.  அதேவேளை  கிராமப் புறங்களில் தொழில் வாய்ப்பின்றி  இளைஞர், யுவதிகள் அதிகளவில் காணப்படுகின்றனர்.

சிறப்பான பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்றிருந்தாலும் கூட  தொழில் தேர்ச்சி இல்லாததால்  அவர்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு பொருத்தமான பயிற்சி முறைகளும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டால் உற்பத்தி துறையில்  சாதகமான பெறுபேறுகளை காண முடியும்.

மத்திய அரசாங்கமும் மாகாண நிர்வாகங்களும் பொருத்தமான  தொழில் நிபுணத்துவ சிறப்பு பயிற்சிகளை பொதுமக்களுக்கு குறிப்பாக மாகாண மட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட வேண்டும்.

TOTAL VIEWS : 970
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
4wtox
  PLEASE ENTER CAPTA VALUE.