வடக்கு நிலைவரம் ஆரோக்கியமான அறிகுறியல்ல
2017-08-09 11:45:58 | General

நீண்டகால யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் கோர அழிவுகள், இழப்புகளிலிருந்தும்  முழு அளவில் மீண்டெழ முடியாமல்  வட, கிழக்கு மக்களில் பெரும்பாலானவர்கள் இப்போதும் துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில், கடந்த  ஒரு மாதமாக வடக்கில் குறிப்பாக யாழ். குடாநாட்டில் எழுந்திருக்கும் சூழ்நிலை பொதுமக்கள் மத்தியில் அச்சவுணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

போர்  ஏற்படுத்திய  அனர்த்தத்தை நேரடியாக அனுபவித்தவர்கள் ஒருபோதுமே அந்தத் துன்பத்தை மறந்திருக்கமாட்டார்கள்.  குடும்பங்களையும் சமூகங்களையும் அழித்து நாசமாக்கிய போர்க்கால சூழலுக்கு  மக்கள் மீண்டும்  கொண்டு  செல்லப்படுகின்றனரா? என்ற  பேரச்சமும்  சந்தேகமும் குடாநாட்டு மக்கள்  மத்தியில் மீண்டும் தற்போது மேலெந்திருக்கின்றன. நாட்டின் ஏனைய பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் பணவீக்கம், ஊழல், மோசடி, கடும் வரட்சியால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் பல்வேறு குற்றச் செயல்களினால் பாதிப்படைந்துள்ள நிலையில், வடக்கில்  யாழ்.குடாநாட்டு மக்களோ அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களால் பீதியடைந்திருக்கின்றனர். 


பொலிஸார்  மீதான வாள் வெட்டுச் சம்பவத்தையடுத்து குடாநாட்டில் தேடுதல்கள்,  சோதனைகள் பரவலாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும்  சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, குறிப்பாக குடாநாட்டு இளைஞர் குழுக்களினால் மேற்கொள்ளப்படுவதாக  கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக, பலத்த சந்தேகங்களை அந்த மக்களின் அரசியல்  பிரதிநிதிகள் வெளியிட்டு வருகின்றனர்.

வடமராட்சி, வலிகாமம் மற்றும் யாழ்நகரை அண்மித்த பகுதியிலும்  அதிரடிப்படையினரினதும் பொலிஸாரினதும் தேடுதல்கள் தீவிரமடைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும்  பதகளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
குடாநாட்டு வன்முறைச் சம்பவங்களின் பின்னணி தொடர்பாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரன் உட்படப் பலர் கடும்  எதிர்ப்புகளையும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தியிருப்பதுடன், எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை  அவசரமாக சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சூழ்நிலை இன்னமும் குடாநாட்டில் ஏற்பட்டிருக்கவில்லையென்று பாதுகாப்பு உயர் வட்டாரம் தெரிவித்து வருகின்ற போதிலும்  வாள் வெட்டுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் முன்னாள் போராளிகளுக்கு சம்பந்தம் இருப்பதாக கூறுவதற்கு எத்தனிப்பது இராணுவப் பிரசன்னத்தை தொடர்வதற்கு தூண்டுதலளிக்கும் செயற்பாடாக இருக்கக்கூடுமென்ற சந்தேகமும் விசனமும் வெளிப்படுத்தப்படுகின்றன.


 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் குடாநாட்டில் பல்வேறு சமூக விரோதச் யெற்பாடுகளிலும் வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டிருந்த "ஆவா' குழுவினர் என்று அழைக்கப்பட்ட  கும்பலை சேர்ந்த உறுப்பினர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அண்மையில்   இடம்பெற்றிருந்த பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களென சந்தேகிக்கப்படுவோரே தலைநகரில் கைதாகியுள்ளனர்.

சட்டம், ஒழுங்குக்கு சவால் விடுக்கும் சமூக விரோதக் கும்பல்களை இல்லாதொழிப்பதற்கு தற்போது  பொலிஸார் நடவடிக்கையெடுத்து வருவதைக் காண முடிகிறது. தொடர்ச்சியான தேடுதல், சோதனைகளில் 50 க்கும் மேற்பட்டோர் கைது  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வடக்கில் தீவிரமடைந்திருக்கும் இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணி குறித்து  முறையான விசாரணை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.

அத்துடன்  தற்போது மேலெழுந்திருக்கும் அச்ச சூழ்நிலையை இல்லாமல் செய்வதற்கு  அரசாங்கம்  துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யுத்தம்  முடிவுக்கு வந்து சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு 8 வருடங்கள் முடிவடைந்திருக்கும்  நிலையில், வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கியிருப்பதும் மக்கள் மத்தியில் பீதியுணர்வு ஏற்பட்டிருப்பதும் ஆரோக்கியமான அறிகுறியல்ல. 

TOTAL VIEWS : 1576
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
h3cpa
  PLEASE ENTER CAPTA VALUE.