கறுப்பு ஜூலை
2016-07-26 15:15:29 | General

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட "ஜூலை கலவரம்' இடம்பெற்று 33 வருடங்கள் கடந்துவிட்டன. 1983 ஜூலை 24 இல் தலைநகர் கொழும்பில் ஆரம்பமான கலவரம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்தது.

சுமார் 7 நாட்கள் தமிழ் மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் காடையர் குழுக்களினால் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடான இந்தியாவுக்கும் உள்நாட்டில் வட பகுதிக்கும் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.

இதனைவிட மேற்கு நாடுகளுக்கு பல்லாயிரக்கணக்கானோர்அகதிகளாக புகலிடம் தேடிச் சென்றனர்.இந்தக் கறுப்பு ஜூலை தமிழ்ப் போராளிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் முழு அளவில் ஆரம்பமாவதற்கான தூண்டுதலாக அமைந்ததாக பார்க்கப்பட்டது.  

27 வருடங்களாக தொடர்ந்த யுத்தம் 2009 மேயில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சுமார் மூன்று தசாப்தகாலமாக நீடித்த யுத்தத்திற்கான அடிப்படைக் காரணங்களை விளங்கிக் கொண்டு பேச்சுவார்த்தை  மூலம் இணக்கபூர்வமான தீர்வைக் கண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. 


1948 இல் இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் அரச இயந்திரம் பெரும்பான்மைச் சமூகத்தின் கரங்களுக்கு சென்றதையடுத்து இனங்களுக்கிடையிலான பிளவுகள் விரிசலடைந்தன.

ஆட்சிக்கு வந்த இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த அரசாங்கங்களும் அவற்றின் தலைமைத்துவமும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்குரிய உபாயங்களுக்கு குறிப்பாக வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமை இனப் பிளவு மேலும் விரிவடைய தூபமிட்டது.

1956 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தினால் நாட்டின் சனத்தொகையில் 25% மாக இருந்த தமிழ் பேசும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக வட, கிழக்கை வரலாற்றுப் பூர்வமான வாழ்விடமாக கொண்டும் அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையினராகவும் விளங்கும் தமிழ் மக்களின் அரசாங்க நிறுவனங்களில் முழுமையாக ஒருங்கிணைந்து கொள்வதற்கான உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டன. 1960 களில் தமிழுக்கு சமவுரிமை கோரி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எதிர்ப்பு போராட்டங்களை அகிம்சாவழியில் மேற்கொண்டனர். 


1972 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் கொள்கையால் தமிழ் மாணவர்கள் அதிகளவுக்கு பாதிக்கப்பட்டதுடன், இனங்களுக்கிடையிலான உறவுகள் மேலும் விரிசல் கண்டன.  1958, 1977 காலப்பகுதியில் இனக் கலவரங்கள் வெடித்தன.

பின்னர் 1981 இல் தமிழ் மக்கள் தமது அரிய பொக்கிஷமாக கருதிய யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. பின்னர் 1983 இல் இடம்பெற்ற இனக் கலவரமும் அதனைத் தொடர்ந்து சுமார் மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தமும் தமிழ் மக்களுக்கு சொல்லொணா உயிர், உடமை இழப்புகளை ஏற்படுத்தியதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

இந்த இனக் கலவரம் தொடர்பாகவும் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், அட்டூழியங்கள் குறித்தும் அச்சமயம் ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் தலைமைத்துவம் கவலையையோ கண்டனத்தையோ வெளியிட்டிருக்கவில்லை.

பின்னர் 1990 களின் நடுப்பகுதியில் ஆட்சிக்கு வந்த திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே முதற்தடவையாக ஆடிக் கலவரம் தொடர்பாக பகிரங்கமாக கவலையையும் மன்னிப்பையும் கோரியிருந்தார். ஆயினும் இன நெருக்கடிக்கு இணக்கபூர்வமான தீர்வு இன்னமும் காணப்படவில்லை. 


நீண்டகால இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்படுமென 2015 ஜனவரியில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன உறுதியளித்திருந்தார். இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப்படுவார்களெனவும் இழந்த காணிகள் உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படுமெனவும் புதிய தேசிய அரசாங்கம் உறுதிமொழி அளித்ததுடன் அதற்கான முன்னகர்வுகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் "நிலைமாற்று நீதி' தாமதமடைந்து வருவதாக தமிழ்த் தரப்பு அதிருப்தியை வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

கூட்டணி அரசாங்கம் நிலைமாற்று நீதித் திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. போர்க்கால துஷ்பிரயோகங்கள் தொடர்பாக உண்மை ஆணைக்குழு, நீதித்துறை பொறிமுறை பற்றிய திட்டத்தை இது உள்ளடக்கியுள்ளது. இத்திட்டம் முழுமையாகவும் துரிதமாகவும் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் உத்தேச அரசிலமைப்பினூடாக தமது அபிலாஷைகளுக்கு நியாயபூர்வமான தீர்வு கிட்ட வேண்டுமென்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்காக சர்வதேசத்தின்  ஆதரவையும் உதவியையும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவங்கள் நாடி நிற்கின்றன. "83' ஜூலைக் கலவரத்தின் கோர விளைவுகளும் தொடர்ந்து இடம்பெற்ற கோர யுத்தமும் தமிழ் மக்களின் இயல்பு வாழ்வை வேருடன் சாய்த்து விட்ட நிலையில் சர்வதேசத்தின் உதவியுடன் தமது வாழ்வை சிறிது சிறிதாக கட்டியெழுப்பி வரும் அம்மக்கள் ஏனைய சமூகங்களுடன் சமத்துவமாக சகவாழ்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக அமையும். 

TOTAL VIEWS : 2006
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
o8kao
  PLEASE ENTER CAPTA VALUE.