'பொதுமறை' தந்தவருக்கு சிலை நிறுவுதல்
2016-07-27 10:34:57 | General

உலகப் பொது மறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் 16 சிலைகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவப்படவுள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையை தளமாகக் கொண்ட வி.ஜி. பன்னீர்தாஸ் அன்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளரும் உலகத் தமிழ் சங்கத்தின் தலைவருமான டாக்டர் வி.ஜி. சந்தோசம் 8 அடி உயரம் கொண்ட 16 சிலைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளமை காலத்தின் தேவை கருதியதும் தொலைநோக்குடையதுமான பணியாக கருத முடியும்.

"ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனில் அன்றென்ப ஆறு சமயத்தார் நன்றென எப்பாலரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி'யென கல்லாடர் விதந்துரைத்த பொய்யாமொழிப் புலவர் வள்ளுவருக்கு இலங்கையில் சிலைகளை நிறுவும் பணியானது வெறுமனே கலை நுட்பம் வாய்ந்த சிலையை ஸ்தாபித்து பெயரைப் பொறித்துக் கொள்வதல்ல.

எந்தவொரு இனத்தையோ மதத்தையோ சாராததும் மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை கடைப்பிடிக்க வேண்டிய அறக் கருத்துகளை, வாழ்வியல் நடைமுறைகளை, யதார்த்தத்தை எடுத்துரைப்பதுமான திருக்குறளை ஆக்கிய திருவள்ளுவர் பற்றியும் வெவ்வேறான சமூகங்களை ஒன்றிணைக்கக் கூடிய நூலான "திருக்குறள்' பற்றி தமிழ் மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய சமூகங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரின் அறிவுத் தேடலுக்கு தூண்டக்கூடிய செயற்பாடாகவும் இச்சிலைகளை நிறுவுவது அமையும். 


மறவன் புலவைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் கல்விமான் கே.சச்சிதானந்தன் இந்தச் சிலைகளை இலங்கையில் நிறுவும் யோசனையை முதலில் தெரிவித்திருந்ததாக அறிய வருகிறது. தமிழ் மக்களின் வரலாற்று பூர்வ வாழ்விடமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நான்கு சிலைகளை அமைப்பதற்கான யோசனை முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் சந்தோசம் 16 சிலைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இச்சிலைகள் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, சாவகச்சேரி, புத்தளம், கொழும்பு, மாத்தளை, அட்டன், நாவலப்பிட்டி, இறக்குவானை, கட்டைப்பறிச்சான், மட்டக்களப்பு, தம்பிலுவில் போன்ற இடங்களில் 13 பாடசாலைகளிலும் மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் நிறுவப்படவுள்ளன.

தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட இச்சிலைகள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனிடம் கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருக்கின்றன.

இச்சிலைகளை நாட்டுக்குள் தருவிப்பதற்கு சகல திணைக்களங்களும் அதிகாரிகளும் அயராது பாடுபட்டதாகவும் குறிப்பாக கல்வியமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரண இந்த விடயத்தில் தீவிரமாக செயற்பட்டதாகவும் அமைச்சர் இராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.


இதேவேளை இலங்கை மக்களால் தமிழ் நாட்டுக்கு புத்தர் சிலையொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டிருப்பதுடன் உலகத் தமிழ்ச் சங்கம் பெற்றுக் கொண்டு அதனை திருநெல்வேலியில் நிறுவுவதற்கு நிலத்தையும் வழங்கியிருந்தது.

இதனை இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களும் பாராட்டியிருப்பதுடன் சந்தோசத்திற்கு "தேச அபிமான்ய' விருதையும் மல்வத்தை, அஸ்கிரிய பீட மகாநாயக்கர்கள் இணைந்து வழங்கியிருந்தனர். அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவும் போது இலங்கைக்கு 50 உறுப்பினர்கள் கொண்ட தூதுக்குழுவுடன் வருகைதர விருப்பதாகவும் வெள்ளியால் வடிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வழங்கவுள்ளதாகவும் வி.ஜி. சந்தோசம் தெரிவித்திருக்கிறார்.


இன, மத ரீதியான வேறுபாடுகள், தப்பபிப்பிராயங்களால் விரிசல்கள், அடிக்கடி மேலெழுந்து வரும் தருணத்தில் வெவ்வேறான இன, மதக் குழுக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் மனிதகுலம் ஒன்றே என்ற ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பவும் இந்தச் சிலைகளை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வுகள் உதவும்.

"கடுகைத்  துளைத்து  ஏழ் கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள்' எனப் போற்றப்படுவதும் ஈரடியில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் மக்களுக்கு எடுத்தியம்புவதுமான திருக்குறள் எனும் உன்னத படைப்பின் கர்த்தாவான திருவள்ளுவருக்கு கன்யாகுமரியில் 30 அடி உயரமான பாறையில் 133 அடி உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அத்துடன்  சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் 1330 குறள்களும் பொறிக்கப்பட்டுள்ளன. லண்டனிலும் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இப்போது 16 சிலைகளை நிறுவும் இந்த நடவடிக்கையானது எக்காலத்திலும் மனிதர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும்.

திருக்குறளை தந்த திருவள்ளுவரை எதிர்கால சமுதாயம் நினைவு கூருவதுடன் அவர் காண்பிக்கும் பாதையில் வாழ்க்கைப் பயணத்தை கொண்டு செல்வதற்கான ஊக்குவிப்பையும் எக்காலத்திற்கும் வழங்குமென்பது நம்பிக்கை. 

TOTAL VIEWS : 1847
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
4btxe
  PLEASE ENTER CAPTA VALUE.