அரியாலைப் படுகொலை
2017-11-06 11:10:58 | General

அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் யாழ். நீதிமன்ற நீதவான் முன்பாக ஆஜர் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

கொலை இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னரே சந்தேக நபர்கள் கைதாகியிருந்தாலும் கூட, இவ்விடயத்தில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாகச் செயற்பட்டிருக்கின்றார்கள் என்றே தெரிகின்றது.

அதேவேளையில், இச்சம்பவத்தின் பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டுவரும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். 

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் மர்மக்கொலைகளும், வாள்வெட்டுக்களும் மலிந்த ஒரு பூமியாகப் பார்க்கப்படும் நிலை உள்ளது. போரின் முடிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்குக் காரணம்.

இளைஞர் குழுக்களும் முன்னாள் போராளிகளும்தான் இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தரப்பினர் சொல்லிக்கொள்ளும் நிலைமைதான் பொதுவாக இருக்கின்றது. அல்லது "இனந்தெரியாத இளைஞர்குழு' எனப் பழியைப் போட்டுவிடும் நிலை தொடர்கிறது.

ஆனால், அரியாலையில் டொன் பொஸ்கோ ரக்மன் என்ற 24 வயது இளைஞன் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட போது, இதன் பின்னணியில் படைத் தரப்போ அல்லது பொலிஸாரோ இருக்கலாம் என்ற சந்தேகம் பரலவலாக முன்வைக்கப்பட்டிருந்தது. 

பொலிஸ் பேச்சாளரும் எடுத்தவுடன் முன்னாள் போராளிகள்தான் இதனைச் செய்திருக்கலாம் என வழமைபோலச் சொல்ல முன்வரவில்லை. இதன்பின்னணியில் பொலிஸார் இருந்திருக்கலாமா என ஊடகவியலாளர்கள் கேட்டபோது, தெளிவில்லாத பதிலே பொலிஸ் பேச்சாளரிடமிருந்து வந்திருந்தது.

பொலிஸார் மீது சந்தேகம் திரும்பியிருப்பதை இந்தப் பதில் உறுதிப்படுத்தியது. அதன்பின்னர் மண்டைதீவிலுள்ள கடற்படை முகாம், பண்ணைப் பகுதியிலுள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாம் என்பன சோதனைக்குள்ளாகின.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சி.சி.ரி.வி. கமரா மூலம் அடையாளம் காணப்பட்டிருந்த முச்சக்கர வாகனமும், மோட்டார் சைக்கிளும் பண்ணை அதிரடிப்படை முகாமில் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

அத்துடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் துப்பாக்கியும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டது. இதனையடுத்தே அதிரடிப்படையினர் இருவர் கைதாகியுள்ளனர். 

இந்தக் கைதுடன் பிரச்சினை முடிவடைந்துவிடவில்லை. இப்போதுதான் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன. இக்கொலை தற்செயலாக இடம்பெற்ற ஒன்றல்ல. நன்கு திட்டமிட்ட ஒன்று என்பது தெரிகின்றது.

கொலையுண்ட இளைஞனைத் தொடர்ந்து கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற அதேவேளையில், முச்சக்கர வண்டி ஒன்றும் சென்றுள்ளது. பாதுகாப்புக்காக அல்லது ஆதாரங்களை அழிப்பதற்காக அது சென்றிருக்கலாம். ஆக, இந்த திட்டமிட்ட கொலை எதற்காகச் செய்யப்பட்டது என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

கொலை இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னரே சந்தேக நபர்கள் கைதாகியிருக்கின்றார்கள். இந்தத் தாமதம் ஏன்? விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுப்பதில் அழுத்தங்கள் இருந்துள்ளனவா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

புதிய அரசியலமைப்பு

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக வழிநடத்தல் குழுவால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மீதான விவாதம் அரசியலமைப்புச் சபையில் நான்கு நாட்களாக நடைபெற்றிருக்கின்றது. வரும் வாரத்திலும் இரண்டு நாட்களுக்கு இது நடைபெறும் எனத் தெரிகின்றது.

இனநெருக்கடிக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கல் திட்டமும், அரசின் தன்மை குறித்த விளக்கமும், பௌத்த மதத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்தஸ்த்தும் கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.

மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணி கடும் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்க அரசாங்கத் தரப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்காப்பு நிலையில் உரையாற்றிக்கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. 

இங்கு இடம்பெறும் வாதப் பிரதிவாதங்களைப் பார்க்கும்போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. ஜனவரி இறுதிப்பகுதியில் நடைபெறப்போகும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இலக்காக வைத்து இடைக்கால அறிக்கை மீதான தாக்குதலை ராஜபக்ஷ அணியினர் தீவிரமாக முன்னெடுக்கின்றார்கள்.

அதனைச் சமாளிக்க அரச தரப்பு தடுமாறுகின்றது. சிங்களக் கடும்போக்காளர்கள் இறுக்கமாகவுள்ள விடயங்களில் எந்தத் தளர்வையும் தாம் செய்யப்போவதில்லை என்பதுதான் அரச தரப்பால் சொல்லப்படும் விடயமாகவுள்ளது.

அதற்குமேலாக சிறுபான்மையினருக்கு எதனையும் தருவாகச் சொல்லி தமது வாக்கு வங்கிகளில் பாதிப்பை ஏற்படுத்த அரச தரப்பு தயாராகவில்லை. இடைக்கால அறிக்கை இறுதி அறிக்கையாக ஏப்ரல் செல்லும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். மகிந்த தரப்பையும் சமாளித்துக்கொண்டு மார்ச் மாத ஜெனீவா நெருக்கடியைத் தாண்டிவிட வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் பிரச்சினை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் வழிநடத்தல் குழுவில் அக்கறையுடன் அதன் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்கள். "70 வருட இனநெருக்கடிக்கு தீர்வை எட்டும் தருணத்தை எட்டிவிட்டோம்' என சுமந்திரன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் 
சொல்லியிருக்கின்றார்.

சம்பந்தனோ, "தீர்வு கிடைக்காவிட்டால் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்காது' என்ற வகையில் அரசியலமைப்பு சபையில் பேசியிருக்கின்றார். தீர்வு ஒன்றுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான்.

அதற்காக சிங்களக் கடும்போக்காளர்களையும், ராஜபக்ஷாக்களையும், வீரவன்சக்களையும் திருப்திப்படுத்தும் தீர்வுக்கு தமிழர்கள் ஏன் ஒத்துழைக்க வேண்டும் என்பதை கூட்டமைப்பின் தலைமை தமிழர்களுக்குச் சொல்வது அவசியம்!

TOTAL VIEWS : 1699
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kg9cw
  PLEASE ENTER CAPTA VALUE.