பிணை முறி மோசடி; துரித சட்ட நடவடிக்கை அவசியம்
2018-01-08 11:59:34 | General

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற  பாரிய  நிதிமோசடியாக  கருதப்பட்ட மத்திய வங்கி  பிணைமுறி  விவகாரம் தொடர்பாக  விசாரணை நடத்திய  ஜனாதிபதி ஆணைக்குழு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குமாறு  பரிந்துரைத்திருக்கிறது.

அரசாங்க நிறுவனங்களுக்கு 11,145 மில்லியன்  ரூபா நட்டம் ஏற்படுவதற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  அர்ஜுன் மகேந்திரன் பொறுப்பாளியாக இருந்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  தெரிவித்திருக்கிறது.  முக்கியமானதும் உணர்வுபூர்வமானதுமான  தகவலைக் கசிய விட்டதற்கு மகேந்திரன் காரணமாக இருப்பதுடன், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதை காண முடிகிறது. 

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக  புதன்கிழமை  தொலைக்காட்சியூடாக  விசேட  அறிக்கையொன்றை விடுத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மோசடியில்  சம்பந்தப்பட்ட சகலருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மத்திய வங்கியின்  ஆளுநராக அர்ஜுனா மகேந்திரன் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ச்சியாக  இடம்பெற்றிருந்த முறைகேடான பிணை முறி ஏல விற்பனைகள்  தொடர்பாக விசாரணை நடத்தியிருந்த ஆணைக்குழு குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக  கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென பரிந்துரைத்திருக்கிறது.

அர்ஜுனா மகேந்திரனின் மருமகனின் கம்பனி பேப்பெச்சுவல் ட்ரெசரீஸ் பிணை முறிகளை குறைந்த விலைக்கு பெற்றிருந்தமை கண்டறியப்பட்டிருப்பதாக  ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.  அர்ஜுனா மகேந்திரன்  வங்கி அதிகாரிகள் மற்றும் சில வெளியாட்கள் சம்பந்தப்பட்டிருப்பதுடன்  சட்ட விரோதமான முறையில் பேப்பெச்சுவல் ட்ரெசரீஸ் லிமிட்டெட்  இலாபம் ஈட்டியிருப்பதாக அறிக்கை கூறுவதாக ஜனாதிபதி  சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை  அர்ஜுனா மகேந்திரன் தவறாக செயற்பட்டமைக்கு எதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லையெனவும் ஆணைக்குழு குறிப்பிட்டிருப்பதையும் காண முடிகிறது.  அத்துடன்  ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின்  முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதி, வெளிவிவகார அமைச்சுப் பதவிகளை வகித்தவருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஊழல்  மற்றும் தவறான சாட்சியத்தை வழங்கியமை  தொடர்பாக  சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

2017 ஆகஸ்டில்  ரவி கருணாநாயக்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். எதிரணியினரும் சிவில் சமூகமும் கடும் அழுத்தத்தை கொடுத்திருந்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகியிருந்தார். பிணை முறி வர்த்தகரும் அர்ஜுனா மகேந்திரனின் மருமகனுமான  அர்ஜுன்  அலோசியஸுடன் நிதித் தொடர்புகளை  ரவி கருணாநாயக்க கொண்டிருந்ததாக  குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 இல் சர்ச்சைக்குரிய  பிணை ஏல விற்பனையில் 50 % க்கும் அதிகமானவற்றை அர்ஜுன் அலோசியஸின் பேப்பெச்சுவல் ட்ரெசரீஸ்  நிறுவனமே  கொள்வனவு செய்திருந்தது. 

அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ஷவின் நிர்வாகத்தில் ஊழல், மோசடி, குடும்ப செல்வாக்கு  தலை விரித்தாடியதாகவும்  அந்த நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் "நல்லாட்சி' யை  ஏற்படுத்தப் போவதாகவும் உறுதிமொழி அளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக 2015 ஜனவரியில் இடம்பெற்ற  ஜனாதிபதித் தேர்தலில் அச்சமயம் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க  தலைமையிலான  ஐ.தே.க., முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளென்பன  நிறுத்தியிருந்தன.

அதனைத் தொடர்ந்து  கடந்த மூன்றாண்டுகளாக இரு பிரதான கட்சிகளையும்  பங்காளிகளாக கொண்ட தேசிய  ஒருமைப்பாட்டு அரசாங்கம் ஆட்சி செய்து வரும் நிலையில், முன்னொருபோதுமில்லாத வகையில்  பாரிய நிதி மோசடி அம்பலமாகியிருக்கிறது.  அதிலும் அரசின்  பிரதான பங்காளியான பிரதமர் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க.விற்கே மத்திய வங்கியின் பிணை மோசடி விவகாரம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தென்படுகிறது. 

 பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு 2016 அக்டோபரில்  பிணை முறி விற்பனை  ஒழுங்கீனங்களில்  அர்ஜுனா மகேந்திரன் நேரடியான பொறுப்பை கொண்டிருப்பதாக  தெரிவித்திருந்தது.  இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவுக்கு  ஆதரவளிக்கும் கூட்டு எதிரணி, ஜே.வி.பி. மற்றும் 
சிவில் சமூக அமைப்புகள் கடும் அழுத்தம் கொடுத்ததையடுத்து கடந்த வருடம் (2017)  ஜனவரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரணை ஆணைக்குழுவொன்றை  நியமித்திருந்தார். ஆணைக்குழு விசாரணைகளின் போது முறைகேடுகள் தொடர்பான  விடயங்கள் ஊடகங்களில் கசிந்த போது அரசாங்கத்தின்  இரு பிரதான பங்காளிகளும் பிரிந்துவிடும் அறிகுறிகளும் தென்பட்டன. 

இப்போது  ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்திருக்கின்ற போதிலும் அந்த அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன வெளியிட்டிருக்கும் கருத்துகளும் பரிந்துரைகளும் சட்ட ரீதியான நடவடிக்கைகளே தொடருமென்பதையும்  இரு பிரதான கட்சிகளினதும் “அரசியல் கூட்டணி“க்கு  உடனடி  ஆபத்து இல்லையென்பதையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

எவ்வாறாயினும் பெப்ரவரியில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் “மாற்றமொன்றை“  ஏற்படுத்தக் கூடுமென்பதை நிராகரிக்க முடியாது. எவ்வாறாயினும் "பொது நிதி'யுடன் தொடர்புபட்ட பாரிய ஊழல் மோசடியை ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழு அம்பலமாக்கியிருக்கும் நிலையில்,   தவறிழைத்தோருக்கு எதிராக துரிதமான சட்ட  நடவடிக்கை எடுப்பதன் மூலமே எதிர்காலத்தில் "தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமை' யின் கீழ் இத்தகைய குற்றச் செயல்கள் இடம்பெறாமல் தடுக்க முடியும். 

TOTAL VIEWS : 1197
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
f3dav
  PLEASE ENTER CAPTA VALUE.