ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் எஸ்.பி.பி.யின் இசை நிகழ்ச்சி
2016-10-28 17:29:37 | General

பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி 'கின்னஸ்' புத்தகத்தில் இடம்பிடித்துள்ள 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரணியம் ரஷ்ய ஜனாதிபதி கிரெம்ளின் மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


 ரஷ்ய தலைநகரான மொஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் சார்பில் தீபாவளி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.


இந்த விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரணியம் பங்கேற்று பாடும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் "படவா' கோபி மற்றும் அவரது நண்பரான விஜயகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். எஸ்.பி.பி சரண், எஸ்.பி.ஷைலஜா, மாளவிகா ஆகியோரும் இந்த இசைப்பயணத்தில் இணைகின்றனர்.


ரஷ்யாவில் இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்துவந்தாலும், தமிழர்களின் எண்ணிக்கை சற்றுக் குறைவாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ், இந்தி உள்ளிட்ட பாடல்கள் கலவையாக இடம்பெறும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ள எஸ்.பி.பி., சில ரஷ்ய மொழிப் பாடல்களையும் பாடி அந்நாட்டு மக்களை 4 மணிநேரம் மகிழ்விக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஒத்திகையில் அவர் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்.


வழக்கமாக ஏதாவது ஒரு இசைக்குழுவைச் சேர்ந்த இசைக்கலைஞர்களுடன் கச்சேரிகளை நடத்தும் எஸ்.பி.பாலசுப்பிரணியம், கிரெம்ளின் நிகழ்ச்சிகாக சென்னை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மிகச்சிறந்த இசைக் கலைஞர்களை தேர்வு செய்து, உடன் அழைத்து செல்கிறார்.


"படவா' கோபி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.,யின் தமிழ் பாடல்களுக்கு நடனமாட ரஷ்யாவைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.


மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையாருக்குப் பின்னர் மொஸ்கோவில் உள்ள ரஷ்ய ஜனாதிபதி  மாளிகையில் இசைநிகழ்ச்சி நடத்தும் இந்தியாவின் இரண்டாவது இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரணியம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 2592
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ssm8d
  PLEASE ENTER CAPTA VALUE.