ஓவியாவை சிரிக்க வைச்சது சந்தோஷமாக இருக்கு; வையாபுரி மனைவி

2017-08-08 12:04:43 | General

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போறத்துக்கு முன்னாடி இருந்ததைவிட, இப்போ என் கணவர் ரொம்பவே மாறியிருக்காரு. எங்க மேல கோபத்தையே அதிகமா வெளிப்படுத்தினவரு, இப்போ எங்களுக்காக அடிக்கடி ஃபீல் பண்ணி பேசுறார். அதைப் பார்க்கிறப்ப என்னை அறியாமல் அழுதுடுறேன்" நெகிழ்ச்சியாகப் பேசத் தொடங்குகிறார் நடிகர் வையாபுரியின் மனைவி ஆனந்தி.

"பொதுவாகவே அவர் மத்தவங்ககிட்ட அதிகமா பேசமாட்டாரு. ரொம்ப ரிசர்வ்டு டைப். வீட்டுலயும் அதிக நேரம் அவரோட ரூம்ல தனிமையிலதான் இருப்பாரு. என் மேலயும், பையன் ஷ்ரவன் மற்றும் பொண்ணு ஷிவானி மேலயும் அடிக்கடி கோபப்பட்டுப் பேசுவாரு. அதனால, கொஞ்ச நாளைக்கு புது உலகத்துல இருந்துட்டு, அன்பு நிறைந்த புது மனிதரா வரட்டும்னுதான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு அவரை அனுப்பிவெச்சேன்.

'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள போன முதல் வாரத்துல இருந்து, 'நான் வீட்டுக்குப் போறேன்'னுதான் அவர் சொல்லிகிட்டு இருக்காரு. ஆரம்பத்துல அந்த வீட்டுல இருக்க முடியாம அவர் கஷ்டப்படுறதைப் பார்த்து நான் பதறினாலும், 'உள்ளுக்குள்ள இன்னும் கொஞ்ச நாள் இருக்கணும்.

சக மனிதர்களோடு நல்லாப் பழகணும்'னு நினைச்சேன். போகப் போக அவர் எல்லோர்கிட்டயும் நல்லாப் பழகி, மற்றவரோட மனம் புண்படாத மாதிரி காமெடிக்காகச் சில கிண்டல்களைப் பண்ணி, சிரிச்சுப்பேசி சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்து நானும் பயமில்லாம இருக்கிறேன்.

அவர் எங்ககிட்டதான் ரொம்பக் கடுப்பா நடந்துப்பாரே தவிர, வீட்டுக்கு வருபவர்களோட சகஜமாப் பேசி அவங்களைக் கலகலப்பாக்குவாரு. ஒரு பிரச்னைனா, நடுநிலையோடுதான் பேசுவாரு. யாரைப் பத்தியும், புரணிப் பேசறது பிடிக்காது. 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள மத்தவங்கப் புரணிப் பேசினாலும், அவர் அமைதியாவே இருந்தாரு. அதோடு, ஓவியா மனசு சரியில்லாமல் பிரச்னையில இருந்தப்போ டைமிங் காமெடி செஞ்சு, அவங்கள சிரிக்க வெச்சாரு.

அந்த நேரத்துக்கான பெரிய மருந்து அதுதானே. மேலும், எந்த ஒருசாராருக்கும் சப்போர்ட் பண்ணாம பொதுவான கருத்தைப் பேசினாரு. அதனாலதான் அவரை ரசிகர்களுக்குப் பிடிக்குது. அதன் வெளிப்பாடுதான், அவரை ரசிகர்கள் சேவ் பண்ணிட்டே இருக்காங்க" என்று சிரிப்பவரிடம், 'ஆனா, அவர் வெளிய போகணும்; கல்யாணத்துக்குப் போகணும்னு சொல்லிட்டே இருக்காரே' என்றதும், ஆனந்தியிடமிருந்து உடனே பதில்வருகிறது.

'பிக் பாஸ்' வையாபுரி

"கூட்டமான இடங்களுக்குப் போறதையே அவர் விரும்பமாட்டார். தனிமையும், அமைதியும்தான் அவருக்குப் பிடிக்கும். எங்க கல்யாணத்துலயே, 'மந்திரத்தைக் குறைச்சு சொல்லுங்க'னு ஐயர்கிட்டச் சொன்னாரு. அப்போ பக்கத்துல இருந்த நடிகர் வினு சக்ரவர்த்தி சார், 'அப்படியெல்லாம் சொல்லக்கூடாது'னு அதட்டினார். அதேமாதிரி அவர் எந்தக் கல்யாணத்துல கலந்துகிட்டாலும், மண்டபத்துக்குள்ள போனதும் உடனே கிஃப்ட் கொடுத்துட்டு போட்டோ எடுத்த அடுத்த நிமிஷமே கிளம்பிடுவாரு. ரொம்ப வேண்டிய சொந்தங்கள் கல்யாணத்துலயும் அப்படித்தான். 'அதெல்லாம் ரொம்பத் தப்பு; கொஞ்ச நேரம் கல்யாண வீட்டுல இருக்கணும்.

சொந்த பந்தங்களோடு பழகணும்'னு அவர்கிட்டச் சொல்லிட்டே இருப்பேன். அதன்படி, இப்போதான் என் பேச்சைக் கொஞ்சம் கொஞ்சமா கேட்டுகிட்டு வர்றாரு. என்னோட அக்கா பொண்ணு காயத்ரியை, சின்ன வயசுலேருந்து ரொம்பப் பாசம் காட்டி வளர்த்தியிருக்காரு. அதனால, 'அடுத்த மாசம் நடக்கவிருக்கிற காயத்ரி கல்யாணத்துல, முன்ன நின்னு எல்லா வேலைகளையும் செஞ்சு, கல்யாணத்தைச் சிறப்பா நடத்தணும்'னு எங்கிட்ட சொல்லிட்டே இருந்தாரு. இந்நிலையில திடீர்னு 'பிக் பாஸ்' நிகழ்ச்சி வாய்ப்பு வந்ததால, 'கொஞ்ச நாள்லயே திரும்பி வந்திடுவேன்'னு சொல்லிட்டுதான் போனாரு. 

குறிப்பா, 'பிக் பாஸ்' வீட்டுக்குப் போன முதல் வாரத்தில் இருந்தே எங்க அன்பைப் புரிஞ்சு, உருகிப் பேசிகிட்டுதான் இருக்காரு. அதுலயும், ரெண்டு வாரத்துக்கு முன்பு எனக்காக அவர் கவிதை சொன்னப்போ, 'அப்பாகிட்ட இப்படி ஒரு மாற்றம் வரும்னு நாங்க கொஞ்சம்கூட நினைக்கலம்மா'னு பிள்ளைங்க கிண்டல் பண்ணினாங்க. எனக்கு அவர் 'ஐ லவ் யூ' சொன்னப்போ கண்கலங்கின அதே வேளையில வயிறு வலிக்கச் சிரிச்சேன். 'ஏன்னா, இந்த அன்பு கலந்த அந்நியோன்யமான பேச்சுக்காக நான் காத்திருந்த காலங்கள், பதினைஞ்சு வருஷத்துக்கும் மேல. இப்போ, தினமும் காலையில கோலம் போடுறப்போ தொடங்கி, வெளியில கடைக்குப் போயிட்டு வர்ற வரைக்கும் என் கணவரைப் பத்தி பெருமையாப் பேசுறவங்க அதிகம். அதையெல்லாம் கேட்கிறப்போ, சொல்ல முடியாத சந்தோஷமா இருக்கும்" என்பவரிடம், 'கணவர் வீட்டுக்கு வரும் தருணத்தில் உங்க மனநிலை?" என்றதும் சிறிய மெளனத்தைத் தொடர்ந்து, மெல்லிய குரலில் பேசத் தொடங்குகிறார்.

'பிக் பாஸ்' வையாபுரி

"எங்க கல்யாணமான நாள்லயிருந்து அவரைப் பெயர் சொல்லித்தான் கூப்பிடுறேன். அதைத்தான் அவரும் விரும்புவார். அவர், எங்கிட்ட அன்பா நடந்துக்க, பேச மாட்டேங்கிறார்னு ரொம்பவே வருத்தப்படுவேன். ஆனா, என் போன்ல, செல்லமா 'வைய்யா'னு அவர் பெயரை சேவ் பண்ணிவெச்சிருக்கேன். போன ஞாயிற்றுக்கிழமை என்னோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப்போயிருந்தேன்.

அப்போ, கணவர் போன்ல இருந்து பொண்ணு எனக்குக் போன் பண்ணினா. 'வையா'ங்கிற பெயரைப் பார்த்ததும், 'சொல்லுங்க'னு என்னை அறியாம சொல்லப்போய், எதிர்முனையில பேசின பொண்ணுக்கிட்ட எப்படியோ சமாளிச்சுப் பேசிட்டேன். இப்படித் தினமும் சென்டிமென்ட்டா அவரை நினைச்சுக்கிட்டே இருக்கேன். அன்பை வெளிப்படையாகக் காட்டமாட்டார் அதுதான் அவர்கிட்ட நாங்க நினைக்கிற ஒரே குறை.

அந்தக் குறையும் பிக் பாஸ்ல அவர் எங்களை நினைச்சுப் பேசுற உண்மையான அன்பு வார்த்தைகளால இப்போ போயிடுச்சு. அதனால, வீட்டுக்கு வந்ததும், இனி எங்களோடு க்ளோஸா, அன்பா நடந்துக்குவார்னு நம்புறேன். அதனால, இப்போ அவர் வருகையை நினைச்சுக் காத்துக்கிட்டு இருக்கிறோம்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலேருந்து அவர் எப்போ வீட்டுக்கு வந்தாலும் சரி. அவரைக் கட்டிப்பிடிச்சு, அழுதுடுவேன். அடுத்து அவருக்குப் பிடிச்ச சாப்பாடு செஞ்சுக் கொடுத்து, பிறகு நாங்க நாலு பேரும் சந்ஷோஷமா அவுட்டிங் போயிட்டு வருவோம்.

TOTAL VIEWS : 979
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
mifo2
  PLEASE ENTER CAPTA VALUE.