இலங்கை பொருளாதார இலக்கை அடைய உலக வங்கி தொடர்ந்தும் உதவும்
2016-07-22 13:37:48 | General

இலங்கைக்கு தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு நல்குவதற்கு தயார் என்று உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளரான கலாநிதி ஐடா ஸ்வராய் ரிட்டிஹவ்  புதன்கிழமை காலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்த போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பு நிதியமைச்சில் நடைபெற்றது. இங்கு ரிட்டிஹவ் மேலும் குறிப்பிட்டதாவது;


இலங்கை பொருளாதார சவால்களை வெற்றி கொண்டு முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை தொடர்பில் உலக வங்கி கொண்டுள்ள நம்பிக்கை இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பெரும் சக்தியாக அமையும் எனவும் அவர் மேலும் கூறினார்.


1995 ஆம் ஆண்டில் உலக வங்கிக் குழுவில் இணைந்த அவர் சிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண்மணியாவார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் மற்றும் மரபணு விஞ்ஞானம் தொடர்பாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ள இவர் சிறிது காலம் உலக வங்கியின் ஆசியப் பிராந்திய செயற்பாட்டுப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். ரிட்டிஹவ் ஆகஸ்ட் மாதம் முதல் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.


நிதியமைச்சருடனான இச்சந்திப்பின் போது இலங்கைக்கான தற்போதைய உலக வங்கிப் பணிப்பாளர் பிரங்கோசிஸ் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்கவும் கலந்து கொண்டனர்.


இதேவேளை இலங்கையின் நகர திட்டமிடல் அபிவிருத்தித் திட்டத்திற்காக உலக வங்கி மேலும் 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்கியது. இது தொடர்பான உடன்படிக்கையில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எஸ்.எச்.சமரதுங்கவும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பிரங்கோசிஸ் க்ளோவிஸும் நிதியமைச்சில் வைத்து கையெழுத்திட்டனர்.

தற்போது மூலோபாய அபிவிருத்தி நகரத் திட்டத்தின் கீழ் கண்டி மற்றும் காலி நகரங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய உடன்படிக்கையின் கீழ் வழங்கப்படுகின்ற கடன் உதவியில் யாழ்ப்பாணமும் மூலோபாய நகரத் திட்டமிடல் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.

இதன்படி இலங்கையின் மூலோபாய நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக உலக வங்கி வழங்கியுள்ள மொத்த கடனுதவி 202 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
அதேநேரம் கண்டி மற்றும் காலி நகர அபிவிருத்திக்காக 147 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. மிகவும் குறைந்த வட்டி வீதத்தின் கீழ் இக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை நீண்டகால அடிப்படையில் திருப்பிச் செலுத்தவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


உலக வங்கி 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 155 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. எதிர்வரும் சில வருடங்களுக்காக மேலும் 233 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. 

TOTAL VIEWS : 1166
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
lv3hf
  PLEASE ENTER CAPTA VALUE.