கடும் வரட்சியுடனான காலநிலை மாற்றம் நகரப்புறங்களுக்கு விவசாயிகளை தள்ளுகிறது
2017-11-03 10:01:57 | General

இலங்கை பூராகவும் உள்ள இளம் ஆட்களிடம் கொழும்புப் பல்கலைக்கழத்தின் சமூகவியல் பேராசிரியரான ஸ்ரீஹெட்டிகே மதிப்பீடொன்றை மேற்கொண்ட போது, முக்கியமான கேள்வியொன்றை கேட்பதற்கு அவர் ஒருபோதுமே தவறுவதில்லை.

எவராவது விவசாயியாக வர விரும்புகிறீர்களா? என்பதே அந்தக் கேள்வியாகும்.
இல்லை என்ற பதிலே அதிகளவிற்கு வெளிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் விவசாயிகள் பலர் மத்தியில் வறுமை அதிகரித்திருப்பதற்கான குறிகாட்டிகளில் ஒன்றாக இந்த விடயம் விளங்குகிறது. வருடாந்தம் கிராமப் புறங்களிலிருந்தும் புலம் பெயர்வு அதிகரிப்பதற்கு அது கொண்டு செல்கின்றது.


விவசாயிகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் விவசாயத்திற்கு தேவையான போதிய பணம் அங்கு இல்லை என்று விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.டபிள்யூ.வீரக்கோன் தெரிவித்திருக்கிறார்.


2.6 ஏக்கர் காணியில் வருடாந்தம் இரு தடவை நெல் விவசாயி ஒருவர் வெற்றிகரமான முறையில் அறுவடை செய்ய வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. அதாவது மாதாந்தம் 4 பேர் கொண்ட குடும்பத்தை பராமரிக்க 17,760 ரூபா ஒருவர் சம்பாதிக்க வேண்டியுள்ளது. நாட்டின் வறுமைக் கோட்டிற்கு மேலாக இருப்பதற்கு மாதாந்தம் ஒருவர் இந்தத் தொகையை சம்பாதித்தாலேயே அவரது குடும்பத்தை பராமரிக்கலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.


சோளம் செய்கையில் ஈடுபடும் விவசாயி ஒருவருக்கு மேலும் அதிக காணி தேவைப்படுகிறது. சுமார் 3.7 ஏக்கர்கள் தேவையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நெல் விவசாயிகளில் அநேகமானோர் ஒரு ஏக்கருக்கும் குறைவான காணியையே கொண்டுள்ளார்கள். அறுவடை பிழைத்தால் அவர்கள் அதிகளவு இழப்பை எதிர்கொள்கின்றனர் என்று வீரக்கோன் கூறியுள்ளார்.
இந்த அழுத்தங்களினால் புலம் பெயர்வு அதிகரிப்பதற்கு காரணமாகின்றது. அதிகளவுக்கு நகரப்புறங்களுக்கு ஆட்கள் செல்கின்றனர் என்று ஹெட்டிகேயும் வீரக்கோனும் ஏனையவர்களும் கூறுகின்றனர்.


காலநிலை முறைமையானது அதிகளவு மழையை அல்லது குறைவான மழையை கொண்டு வருகின்றது. குடும்ப உறுப்பினர் ஒருவர் நகரத்திலிருந்தால் அத்தகைய நெருக்கடிகள் குறைவாக காணப்படுகின்றன என்று கொள்கை கற்கைகளுக்கான ஆய்வுக்கான நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான பிலேஸா வீரரட்ண என்பவர் கூறியுள்ளார்.


கொழும்பைத் தளமாகக் கொண்ட கொள்கை முகவரைப்பே இந்த நிறுவனமாகும். காலநிலை நெருக்கடியால் அதிக எண்ணிக்கையானோர் நகர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். 


ஐந்தில் ஒருவர் புலம்பெயர்வு


சுமார் 40 இலட்சம் இலங்கையர்கள் அதாவது இலங்கையின் சனத்தொகையில் 20% ஆனோர் இப்போது உள்நாட்டில் புலம்பெயர்ந்திருப்பதை அரசாங்க தகவல்கள் காண்பிக்கின்றன. ஆனால் இந்த நகர்வு எப்போதுமே நிரந்தரமானதல்ல. அவர்களில் 35% ஆனோர் 5 வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் தமது புதிய மாவட்டங்களில் தொடர்ந்திருக்கின்றனர் என்பதை தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களத் தகவல்கள் காண்பிக்கின்றன.


போதிய மழை பெய்தால் விவசாயிகளில் பலர் சொந்தக் காணியிருக்குமானால் திரும்பிச் செல்கின்றனர். அல்லது அறுவடை செய்வதற்கு தேவையான ஏனைய சூழல்கள் அமைந்திருந்தால் அவர்கள் திரும்பிச் செல்வதாக வீரக்கோன் கூறியுள்ளார். ஆனால் புலம்பெயர்ந்தவர்களில் சிலர் குறிப்பாக இளைஞர்கள் சொந்தக் காணியில்லாத நிலையில் திரும்பிச் செல்வதற்கு தயங்குகிறார்கள்.

அநேகமான புலம்பெயர்வோர் நகரபகுதிகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுக்கு அதாவது மேல்மாகாண நகரப்புறங்களுக்கு செல்கின்றனர். அவர்களில் அநேகமானோர் நாட்டின் விவசாயப் பகுதியான மத்தி, தெற்கு, வடமேற்கு, வடமத்திய மாகாணங்களை சேர்ந்தவர்கள் என இலங்கையின் தொகைமதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. 


கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் வசிப்பவர்களில் நால்வருக்கு ஒருவர் புலம்பெயர்ந்தவராக இருக்கின்றார். அநேகமான புலம்பெயர்ந்தவர்கள் நகரப்புறங்களில் தொழிலாளர்களாகவே பணிபுரிகின்றனர். நிர்மாணத்துறை பணியாளர்களாக அல்லது அலுவலக உதவியாளர்களாக தொழில் செய்கின்றனர். அத்துடன், ஆட்டோ சாரதிகளாக தொழில்புரிவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 


தொழில் தேடிக்கொள்வது கடினமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். வேலை தேடிக் கொள்வது மிகவும் கடினமாகவுள்ளது. அநேகமானோர் ஏற்கனவே தொழில்வாய்ப்புகளை பெற்றுள்ளனர். என்னைப் போன்ற சிலருக்கு கிடைக்கக் கூடிய வேலை நிர்மாண துறையாகும். அதற்கே அதிகளவுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர் என்று மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கீத் (22 வயது) என்பவர் தெரிவித்திருக்கிறார். கடந்த வருடம் அவர் தனது கிராமத்தை விட்டு வெளியேறியிருந்தார். அவரின் குடும்ப வருமானம் வாழைத் தோட்டத்தில் தங்கியிருந்தது. இப்போது கொழும்பில் அவர் நிர்மாணப் பணியாளராக வேலை செய்கின்றார். 


தொழில் தேடுதல்


40 வருடங்களுக்குப் பின்னர் மோசமான வரட்சியை இலங்கை இந்த வருடம் எதிர்கொண்டிருந்ததாக ஐ.நா. அதிகாரிகள் விபரித்திருந்தனர். இந்த வரட்சியே புலம்பெயர்வை அதிகரிக்கச் செய்திருந்தது. இந்தவருடம் நெற்செய்கையில் 50% க்கும் அதிகமான தொகை வீழ்ச்சி கண்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 


நாட்டின் மோசமான அறுவடை தசாப்த காலம் இந்த வருடமேயாகும். வடமேல் மாகாண பிராந்தியமான புத்தளத்தில் புகையிலை மற்றும் சிறுதானியப் பயிர்கள் கட்டிட நிர்மாண தளங்கள் என்பனவற்றில் அதிக எண்ணிக்கையானோர் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து தொழிலுக்காக வருகை தந்திருப்பதை பார்க்க முடிகின்றது.


அன்றாட கூலி வேலை தேடி அவர்கள் வருகின்றனர். கிராமங்களில் வேலையில்லாததால் அதிகமானோர் இங்கு வருகின்றனர். ஆண்களுக்கு 800 ரூபாவும் பெண்களுக்கு 600 ரூபாவும் நாங்கள் கொடுக்கின்றோம் என்று சிறிய புகையிலைத் தோட்டத்தை வைத்திருக்கும் சமிந்த என்பவர் கூறியுள்ளார்.


வறட்சி தங்களுக்கு நன்மையைத் தருவதாகவும் மலிவாக தொழிலாளர்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
விவசாயத்தின் பங்களிப்பு வீழ்ச்சி கண்டு வருகின்ற போதிலும் இலங்கையின் பொருளாதாரத்தில் 27% இத்துறை காணப்படுகின்றது. 22 இலட்சம் மக்கள் விவசாய தொழிலில் தங்கியிருக்கின்றனர். மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் இதனைக் காண்பிக்கின்றன.


புலம்பெயர்வு எதிர்மறையானதாக இருக்கத் தேவையில்லையென நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், மாற்றமடைந்துவரும் நிபந்தனைகளுக்கமைய வினைத்திறன் கூடிய மூலோபாயமாக இது அமைய முடியுமெனவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால், நகரப்புறங்களுக்கு வருவோரில் பலர் குறைந்த ஊதியத்துடனான தொழிலைப் புரியவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. 


விவசாயம் இப்போது கொள்வனவு செய்வோரின் சந்தையாக இருக்கின்றது. ஏனெனில் இப்போது மூலப்பொருள் உற்பத்தி விநியோகிக்கப்படுகின்றது. விவசாயிகள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுடன் காணப்படுகின்றனர். வருங்காலத்திற்கு அப்பால், வேறு வகையான பயிர்ச் செய்கைகளில் ஈடுபட வேண்டிய தேவைப்பாடும் காணப்படுகின்றது என்று வீரக்கோன் தெரிவித்திருக்கிறார்.


இத்தகைய வசதிகளுக்காக நிதி வழங்குவதற்கு ஒரு மூலவளமாக புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணம் காணப்படுவதாக கொள்கை நிறுவனத்தைச் சேர்ந்த வீரரட்ண கூறுகின்றார். ஆனால் இப்போது, சிறியளவு தொகையே வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றது. கிராமப்பகுதிகளில் அல்லது விவசாயத்துறையை மேலும் அதிக உற்பத்தியை கொண்டதாக உருவாக்குவதற்கான தொழில் வசதிகளை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்வதற்கு குறைந்தளவு பணமே அனுப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தாங்கள் அனுப்பும் பணத்தை முகாமைத்துவப்படுத்துவது தொடர்பாக புலம்பெயர்ந்தவர்கள் சிறிய ஆலோசனையையே பெற்றுக் கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 


அரசாங்கம் இப்போது வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவியளிப்பதில் கவனம் செலுத்துகின்றது. இந்தப் பருவகாலத்தில் அரசின் வழமையான விலையிலும் பார்க்க அரை விலைக்கு விதை நெல்லை அரசாங்கம் வழங்குகின்றது. 8 இலட்சம் ஏக்கர் காணியில் நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்படுவதை எதிர்பார்த்து அரசாங்கம் இந் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

கடந்த வரட்சிக் காலத்தில் 540,000 ஏக்கர் காணியிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த அறுவடைக் காலத்தில் 2 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் வரட்சியால் இழப்பீடு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. 


ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை

TOTAL VIEWS : 665
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1jovf
  PLEASE ENTER CAPTA VALUE.