காணாமல்போனோர் அலுவலகத்தின் தாபிதம் நல்லிணக்கம், நிலைமாற்றுகால நீதி பற்றிய அரசியல்
2016-09-01 10:10:29 | General

குசல் பெரேரா 
            
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட 11 ஆம் திகதி   பாராளுமன்றத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகம் சட்டமூலம் நிறைவேறியது. மிகவும் முக்கியம் வாய்ந்த இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது பாராளுமன்றத்தில் சிலர்  அநாகரிகமான, அருவருக்கத்தக்க நடத்தையை  வெளிப்படுத்தினர். மிகவும் முக்கியம் வாய்ந்த இச்சட்ட மூலத்தினை நிறைவேற்றியபோது இத்தகைய நடத்தை விரும்பத்தகாத ஒன்றாகும். 


"காணாமல்'  போனோர் குறித்து விசாரணை செய்வதற்காக நிறுவப்படவுள்ள இவ்வலுவலகம் ஒரு நிரந்தரமான பொறிமுறையாக அமையவுள்ளது. "காணாமல் போனோர்'என்பதன் வரைவிலக்கணத்தில் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களையும் உள்ளடக்குவதாக இச்சட்டமூலம்  உள்ளது. காணாமல் போனோர் என்பதைக் குறித்த கால எல்லை மூலம் இச்சட்டம் மட்டுப்படுத்தவும் இல்லை.

இச்சட்ட மூலத்தைக் கண்ணுற்றதும் மக்கள் விடுதலை முன்னணியின்  இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 வருடம் கடந்த பின்னர் விழிப்புற்றவர்களாய் இச்சட்ட மூலத்தைப் பார்த்ததைக் காணமுடிந்தது. விஜயவீர, கமநாயக்க போன்ற அவர்களின்  தலைவர்களின் இறப்பு (அல்லது கொலை) என்பனவும் வேறுபலரது காணாமல் போதல்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படக் கூடியவை என்பது உணரப்பட்டது.

ஆயினும் இந்தச் சட்டமூலம் போருக்குப் பிந்திய  இலங்கையில் முக்கியம் பெறுவது இக்காரணத்தால் மட்டுமல்ல என்பதைக் குறிப்பிடல் வேண்டும்.
உண்மையைக் கண்டறிதல், நல்லிணக்கம் என்ற விடயங்களில் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கை காணாமல் போனோர் அலுவலகச் சட்டமூலத்தை நிறைவேற்றியதன் மூலம் முக்கியமான நகர்வை மேற்கொண்டுள்ளது.' என்று ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் குறிப்பிட்டார்.

இவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டமூலம் நிறைவேறிய சில மணிநேரத்திற்குள் நிஷா பிஸ்வால், அரசாங்கத்தைப் பாராட்டி செய்தியை வெளியிட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். இலங்கையின்  அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் இவ்விதமே தமது டுவிட்டர் செய்தி மூலம் உடனடியாகவே பாராட்டை வெளியிட்டார்.

ஆயினும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகமோ அல்லது புது டில்லியின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சோ பாராட்டுரை எதனையும் கூற முன்வரவில்லை.
இவை ஒரு புறம் இருக்க, காணாமல் போனோர் அலுவலகச் சட்டமூலம் இலங்கையின் களநிலைமையில் நல்லிணக்கம் தொடர்பாக முன்னேற்றம் காண்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துமா என்பதே முக்கியமான விடயம்.

ஐ.நா.வின் 30 ஆவது கூட்டத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டவற்றை இங்கு நினைவிற்கொள்ளுதல் பொருத்தமானது.


2009 மே மாதம் முதல் போருக்குப்பிந்திய சமாதான நல்லிணக்க முயற்சிகளில்  எமக்கு வெற்றி கிட்டவில்லை. போர் முடிவுற்றதும் நாம் வெற்றி வாதத்தையும் குறுகிய கொள்கைகளையும் கடைப்பிடித்தோம். எமது தேசிய ஐக்கிய அரசாங்கம் நல்லிணக்கத்தை புதிய நோக்கில் பார்க்கிறது. அதனை அவசரமான முதன்மையான பிரச்சினையாகவும் நோக்குகிறது.'  

இவ்வாறு கூறிய சமரவீர, இக்காரணத்தால் இன்றைய அரசாங்கம் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய பொதுவிடையங்களான உண்மையைக் கண்டறிதல், நிதி இழப்புக்களுக்கு நிவாராணம் வழங்கல், மீண்டும் அநீதியான செயற்பாடுகள் நிகழாதிருத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார்.


பாராளுமன்றத்தில்  இச்சட்டமூலத்தைச் சமர்ப்பித்ததன் மூலம் ஒரு திறந்த செயல்முறையை அரசாங்கம் தொடங்கி வைத்துள்ளதா, நம்பிக்கையைக் கட்டிவளர்த்தல், புரிந்துணர்வை வளர்த்தல் என்பன மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதை மிக அவசரமான முதன்மைப் பிரச்சினையாக அரசு கருதிச்செயற்பட்டதா ? என்ற கேள்விகளை நாம்கேட்க வேண்டியவர்களாக உள்ளோம். இதற்கான விடை "இல்லை' "இல்லை' என்பதே. ஏனெனில் அரசாங்கத் தலைவர்கள் இவ்விடயத்தை மூடிய கதவுகளுக்குள் நடத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட செயல்முறையாகவே நடத்தினார்கள்.


நல்லிணக்கம் என்பதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மேற்குறிப்பிட்ட நான்கு பொறிமுறைகளில் முதன்மையானதாக அமைவது காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்தல் எனலாம். வேறுபட்ட நம்பிக்கைகள், கருத்துக்கள், முரண்பாடான நிலைகள் கொண்டவர்களாய் பிரிந்து நிற்கும் இருவேறு பிரிவினர் தமது வேறுபாடுகளை மறந்து எதிர்காலத்தில் ஒற்றுமை, சமாதானம், உறுதிநிலை என்பன ஏற்படவேண்டுமென்பதற்காக ஒன்றுபடுதலே நல்லிணக்கம் ஆகும்.

எமது இன்றைய சமூகம் போன்ற முரண்பாடுகள் நிறைந்த பிளவுபட்ட சமூகத்தில் போருக்குப் பிந்திய சூழலில், நல்லிணக்கம் என்பது நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதேயாகும்.  அதற்காக சமூக, பண்பாட்டு  சுதந்திரமும் அரசியல் அதிகாரத்தில் உண்மையான பங்கேற்பும் அவசியமானதாகும்.


ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத்தில் இடம் பெற்ற பொது விவாதத்தின்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமைகள் தீர்மானம் 30/1 தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதி பற்றியே குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டோரும், சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்து தேசிய மட்டத்திலான ஆலோசனைச் செயல்முறையை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்றும், அது மிக அவசியமான முன்தேவை என்றும் அவர் அங்கு கூறினார். கடந்த ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி அரசாங்கம் தேர்வு செய்த சிவில் சமூகப்பிரதிநிதிகள் குழுவின் மத்தியில் உரையாற்றும் போது இருவாரக்காலத்திற்குள் பொது மக்கள் ஆலோசனைச் செயல்முறையைத் தொடங்கி வைப்பதற்கான செயல்திட்டவரைவைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவ்விதம் கூறிய பின்னர் எதுவுமே நடைபெறவில்லை.


2016 ஜனவரி மாதம், மூன்று மாத இடைவெளியின் பின்னர், தேசியமட்டத்தில் நிலைமாற்றகால நீதி, நல்லிணக்கம் என்பனவற்றுக்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனைச் செயலணி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. இதனை நம்பத்தகுந்த செயலணி என்று கூற முடியாதிருந்ததோடு, ஜனவரி மாதம் முதல் என்ன நடைபெற்றது என்பது பொதுமக்களுக்குத் தெரியாமல் இருந்தது.

வெளிவிவகார அமைச்சர் சமரவீர சிவில் சமூகத் தலைவர்கள் சிலர் மத்தியில் ஓர் வரைவை மே மாதத்தின் முற்பகுதியில் சமாப்பித்தார். இவ்வரைவையே வர்த்தமானியில் காணாமல் போனோர் அலுவலகம் சட் மூலம் என்ற பெயருடன் பிரசுரமானது.


அரசாங்கம் மேற்குறித்த விதமாக நடந்து கொண்டமை, பொது மக்களுக்க காணாமல் போனோர் அலுவலகம்  பற்றி அறிவுட்டுவதில் அது அக்கறை கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டியது. அரசாங்கம் இச்சட்ட மூலம் பற்றிய  அறிவுட்டலை செய்வதையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் கைநழுவ விட்டது.

இதனை விட வெவ்வேறு இனக்குழுமங்கள், சமயப்பிரிவினர், தொழிற்சங்கங்கள், தொழில்வாண்மைக்குழுக்கள், கலைஞர்கள், மாகாண சபைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து முழுச் சமூகத்திற்கும் அறிவுட்டல் மூலம் நம்பிக்கையை வளர்த்திருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை. அரசாங்கத்தில் உள்ளவர்களும் கொழும்பின் சிவில் சமூக உறுப்பினர்களும் மட்டும் கூடி சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை திருப்திப்படுத்தக் கூடிய பதில்களைப் பின்கதவால் நுழைக்க விரும்பினார்களே அல்லாமல், திறந்த வெளிப்படையான பொதுமக்கள் கலந்துரையாடலை நடத்துவதற்குத் தயக்கம் காட்டினார்கள் இக்காரணத்தால் சிங்களவர், தமிழர் என்ற இருபக்கத்திலும் இனவாதத் தீவிரவாத விளக்கங்கள் பரப்பப்படுவதற்கான வெளி உருவாக்கப்பட்டது.

அத்தோடு, தேவையற்ற பயம், சந்தேகம், என்பன வலுப்பெறவும் இடமளிக்கப்பட்டது. காணாமல்போனோர் அலுவலகச் சட்ட மூலம் உட்பட 04 பொறி முறைகளை ஏற்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டோரும் சிவில் சமூகத்தினரும் பரந்த அளவில் தேசிய மட்ட ஆலோசனையில் ஈடுபடும் செயல்முறையைத் தொடக்கி வைப்பதற்கும் இந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. அவ்வாக்குறுதி நடைமுறையில் பொய்யாகிவிட்டது. தேசிய மட்டத்திலான விரிந்த அளவிலான விவாதத்திற்கான போதிய கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்திற்கு இருக்கவில்லை.

ஆகஸ்ட் 11ஆம் திகதி அவசரப் படுத்தி நிறைவேற்றியதை விடுத்து இச்சட்ட மூலத்தை இருவாரம் கழித்து ஆகஸ்ட்  பிற்பகுதியில்  ஏன் நிறைவேற்றியிருக்கக் கூடாது ? அதனால் அரசாங்கம் இழந்திருக்கப்போவது என்ன ? அரசாங்கம் தேவையற்ற, காரணமற்ற அவசரத்தைக் காட்டியது. 02 மணித்தியால கால அவகாசத்தில் கூச்சல், குழப்பம் மத்தியில் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் பகிரங்க விவாதம் நடைபெறுவதற்கு அரசாங்கம் இடம் கொடுக்கவில்லை.

இவ்வாறு கூறுவதன் மூலம் இப் பாராளுமன்றம் சிறந்த விவாதத்திற்கு தகுதியுடையது என்று நாம் கூறமுன்வரவில்லை. அப்படியான தகுதி தமக்கு இருப்பதாக இச்சபையினர் ஒருபோதும் நிருபித்தது கிடையாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட பாராளுமன்றத்தில் அடிக்கடி தரமற்றதும் சுவையற்றதுமான பகடிகளிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களை வீசுவதிலும் இறங்கியதைக் காணலாம்.

 இருந்தபோதும் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தால் எழுப்பப்பட்டிருக்கக்கூடிய கேள்விகளுக்கு அரசாங்கத் தலைவர்கள் தகுந்த விளக்கத்தையும் பதிலையும் கொடுத்திருக்கலாம். பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தியிருக்கலாம். ஊடகங்களிலும் சமூகமட்டத்திலும் தீவிரவாதிகள் பரப்பிய தவறான விளக்கங்களுக்கு உரிய பதில் கொடுத்திருக்கலாம்.

காணாமல் போனோர் அலுவலகம் நிரந்தரமாக அமைக்கப்படவேண்டியதன் தேவையைப் பொதுமக்களுக்கு உணர்த்தியிருக்கலாம். காணாமல் போதல் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியிருப்பதைத் தெளிவுபடுத்தியிருக்கலாம். அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டணியும் விவாதம் தேவையில்லை என்று கருதியிருக்கலாம். ஆனால் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் தேவை பொதுமக்களுக்கு அவசியமானது.


காணாமல் போனோர் அலுவலகம் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் முறையில் அல்லாது சிங்கள தீவிரவாதிகளின் கருத்தியலுக்கு ஏற்ற முறையில் இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடிய அபாயம் இப்போது எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ராஜபக்ஷ பிரிவினரும் இப்போது சிங்கள மேலாதிக்கவாத கோஷங்களை உபயோகித்து காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்வர். 


அரசாங்கம் இவற்றை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிரான இதுபோன்ற பிரசாரங்கள் ஆயுதப்படையினர் "தேசியபாதுகாப்பு' என்ற வாதத்தை முன்னெடுப்பதற்கும் 
சிங்கள இனவாத தீவிரவாதிகள் “ போர் வெற்றி வீரர்'களுக்கு பூரண குற்ற விலக்களிப்பு வழங்குவதை அறிவிப்பதற்கும், ஜனாதிபதி சிறிசேனவை இதற்கு இணங்க வைப்பதற்கும் வழியேற்படுத்திக் கொடுக்கும். "போர் வெற்றிவீரர்' விடயத்தில் ராஜபக்ஷ அரசுக்கும் இந்த அரசுக்கும் ஒரு போதும் வேறுபாடுகள் இருந்ததில்லை.

ஐக்கிய அரசாங்கம் ராஜபக்ஷ அரசாங்கம் போன்றே சிங்கள மைய அரசாகவே இருந்து வருகிறது. “சிங்கள சமூகத்தின் நியாயமற்ற வேண்டுதல்களை ஏற்றுத் திருப்திப்படுத்துவதில்' சிறிசேனவுடன் ரணில் விக்கிரம
சிங்க எப்போதும் இணங்கிப் போகின்றவராக இருக்கின்றார். அவர் ஒரு போதும் தனது பிரதமர் பதவியை பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனையைத் துடைப்பதற்காகப் பணயம் வைக்கப்போவதில்øலை.


வாக்குறுதிகள், வாய்ச்சொற்கள், எழுத்தில் வரையப்படாத விட்டுக்கொடுப்புகள் சிறிசேன  விக்கிரமசிங்க தலைமைத்துவத்தால் வழங்கப்பட்டிருந்தாலும் சிங்கள தேசியவாத அழுத்தத்திற்குக் காணாமல்போனோர் அலுவலகம் தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகமே. முன்னைய விசாரணை ஆணைக்குழுக்களின் நிலைதான் வழமைப்படி இதற்கும் ஏற்படும் என்றே கூறலாம்.

25 ஆண்டுகள் கடந்த பின் தனது தலைவர்களின் இறப்புகள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறிய மக்கள் விடுதலை முன்னணியையும் இச்சட்டம் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிட்டது. மக்கள் விடுதலை முன்னணி போர்க்குற்ற விசாரணையில் இருந்து ஷபோர் வெற்றி "வீரர்களுக்கு' விலக்கு அளிப்பதை ஒருபோதும் எதிர்த்து அறைகூவல் விடுக்கப்போவதில்øலை என்பது திண்ணம்.


வடக்கு, கிழக்கு மாகாணத்தவர்கள் இச்சட்டம் வழங்கும் வாய்ப்பைத் தவறவிடுதல் இயலாது. பயனுறுதி வாய்ந்ததும் தெளிவான நோக்குடையதுமான விசாரணைகளை நடத்தும்படி அவர்கள் கோரிக்கை விடுப்பதற்கும் இதன் பிரயோசனத்தைப் பரீட்சிப்பதற்கும் இது நல்ல சந்தர்ப்பமாகும். இச் சட்டத்தில் உள்ள முரண்பாடுகள் சிலவற்றை நீக்கவும், இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துவும் அவர்கள்' விரும்பலாம். தகவல் அறியும் உரிமையை (கீகூஐ) சட்டம் விலக்களித்திருப்பது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏன் இத்திருத்தம் செய்யப்பட்டது என விளக்கம் பெறவிரும்புவர். தமது முறைப்பாடுகள் குறித்து விசாரணை எந்தளவுக்கு முன்னெடுக்கப்பட்டது, இதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் யாது என்பதை அறிவதற்கான தகவல் அறியும் உரிமை இருப்பதை அவர்கள் விரும்புவர்.

இதனைவிடத் தகவல் அறியும் சட்டப்படி தேசிய பாதுகாப்புக்குப் பங்கமில்லாத வேறு பல தகவல்களையும் மூன்றாம் தரப்பின் தகவல்களையும் அறிந்துகொள்ள அவர்கள் விருப்பம்கொள்வர். தெற்கில் உள்ளவர்களும் இச்சட்டத்தின் மூலம் தகவல் அறியும் சட்டம் அளிக்கும் வாய்ப்புக்களையும் பயன்படுத்துதல் தொடர்பாக ஒரு முன் உதாரணத்தை உருவாக்கலாம். அதன் மூலம் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் சட்டங்களில் உரிய ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் தகவல் அறியும் சட்டத்தை அர்த்தம் உடையதாக்கலாம்.


வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டோரையும் 
சாட்சிகளையும் பாதுகாத்தல் தொடர்பாக பிரச்சினைகளை எதிர்நோக்குவர். இதற்கான பாதுகாப்பு முறைமை எந்தளவுக்கு செயற்திறன் உடையதாக இருக்கும் என்ற கேள்வி உள்ளது. குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாத்தலும் உதவுதலும் சட்டத்தின்  (4 ஆம் இலக்கம் 2015) படி தேசிய அதிகார சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இச்சபையில் நம்பிக்கை வைக்க முடியாதுள்ளது. தேசிய அதிகாரசபையில் பதவிநிலை காரணமாக உறுப்பினர்களாக உள்ளோர் சிலர் வெளிப்படையாகவே தாம் சாட்சிகளுக்கு எதிரானவர்கள் என்பதைத் தம் செய்கைகள் மூலம் நிரூபித்து வருகின்றனர். பத்தரமுல்லவின் டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள உடலகம ஆணைக்குழுவின் முன்னால் சென்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் வெளி உலகிற்குத் தெரியாது.

மேலும் தேசிய அதிகார சபையை வெளி மாகாணங்களில் உள்ளவர்கள் இலகுவில் அணுக முடியாதுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் சாட்சிகள் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த காலத்தில் இச்சாட்சிகள் ஆணைக்குழு விசாரணைகளில் பங்குபற்றியபோது அச்சுறுத்தலுக்கும் இம்சைகளுக்கும் ஆளாயினர். இந்தப் பொறிமுறைகளில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஏற்ற வகையில் காணாமல் போனோர் அலுவலக சட்டத்தை வரைந்தபோது சில ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். சட்டத்தை வரைந்தபோது இந்த ஏற்பாட்டைச் செய்யும் பொறுப்பை அரசாங்கம் வழங்கவில்லை.


பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்மறை விளைவுகளை எதிர்நோக்கியபடி உள்ளனர். இக் கொடுமையான சட்டம் சாட்சிகளை அச்சுறுத்தி மௌனமாக்க உதவுகிறது. இச்சட்டத்தின் துணையுடன் பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் வழங்கக்கூடிய பாதுகாப்புகளை தடுக்கமுடியும். ஆகவே காணாமல் போனோர் அலுவலகத்தைத் தாபிக்க முன்னர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கியிருத்தல் வேண்டும்.


தமிழ்த் தேசியக் கூட்டணி விரும்பியிருந்தால் பாராளுமன்றத்திலாவது ஒரு விவாதத்தை நன்முறையில் நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். அவ்விதம் ஒரு விவாதம் இடம்பெற்றிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப் பிரச்சினைகளை விவாதித்துக் குறைகளை நிவர்த்திப்பதற்கான சட்டதிருத்தங்களைப் பிரேரித்திருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத் தலைவர்கள் போன்றே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் பொறுப்புணர்வு பற்றித் தெளிவாகச் சிந்திக்கவில்லை என்றே தோன்றுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மைத் தெரிவுசெய்த தமிழ் மக்களின் பக்கத்தில் நிற்கவேண்டியது முதன்மையான பொறுப்பாகக் கொள்ள வேண்டும். இதனை விடுத்து அரசாங்கத்தைப் பாதுகாப்பதை அது முதன்மைப் பொறுப்பாகக் கொள்கிறது.

இக்காரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதில் அக்கறையுடைய பிறரும் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து மக்களுக்கு நன்மைதரும் வகையில் திருத்தங்கள் ஏற்படுத்த நிர்ப்பந்திக்க வேண்டும்.

TOTAL VIEWS : 1318
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
itr6s
  PLEASE ENTER CAPTA VALUE.