அவர்களும் மனிதர்களே...
2016-09-01 10:14:19 | General

எஸ். ஸ்ரீதுரை


உலக வரலாற்றில் உயிர்த்தியாகம் புரிந்த நிகழ்வுகள் ஏராளமாக இருக்கின்றன. தத்தமது இனம், மொழி, மண், சுயாட்சி உரிமை ஆகிய எத்தனையோ உயர்ந்த நோக்கங்களுக்காக உயிர்ப்பலிகள் அரங்கேறியதை நாமெல்லாரும் அறிவோம்.


ஆனால், திரையில் வேடமணிந்து நடிக்கின்ற கதாநாயகர்களுக்காக இரண்டு ரசிகர் கோஷ்டியினர் சண்டையிட்டு, அதில் ஒரு தரப்பு ரசிகர் வேறொரு தரப்பு ரசிகர்களால் கொல்லப்பட்ட அநியாயத்தை என்னவென்று சொல்வது.


கலைரசனை என்பது வெறியாகி அது கொலைபாதகம் புரியவைக்கும் முட்டாள்தனமாகப் பரிணமித்த விந்தை நமது அண்டைய நாடான இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதென்பது நம் அனைவரையும் ஒரு கணம் அதிரவைக்கிறது.


இது மட்டுமல்ல, கொலை செய்யப்பட்ட தன்னுடைய ரசிகனுடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்குச் சென்ற அக்கதாநாயகரைச் சூழ்ந்து கொண்டு (அந்தச் சோகமயமான சூழ்நிலையிலும்) ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டத்தின் செயல் அந்த நடிகரையே வெட்கத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.


நடிப்பு என்ற கலை, நாடக வடிவில் மட்டும் இருந்த சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ரசிகர்கள் ரசிகர்களாகவே இருந்ததாகத்தான் கேள்விப்படுகிறோம்.
திரைப்படம் என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமான பின்னர் நடிகர்கள் தேவர்கள்   தேவதைகளாகவும்  ரசிகர்கள் பக்தர்களாகவும் புதிய பரிணாமம் எடுத்துக்கொண்டார்கள்.


சிறிது காலம் கழித்து, திரைப்படக் கதாநாயகர்களில் சிலருக்கு அரசியல் ஈடுபாடு தோன்றவும்  அத்தகையவர்களை அரசியல் கட்சிகள் தங்களின் ஓட்டு வேட்டைக்குப் பயன்படுத்திக் கொள்ள, நடிகர்கள் தலைவராகவும்  ரசிகர்கள் தொண்டர்களாகவும் அவதாரமெடுத்தார்கள்.

தென்னிந்திய மாநிலங்களில் இந்தப்போக்கு அளவுக்கு மிஞ்சிச் சென்றது. ஆந்திராவில் என்.டி. ராமாராவ் இவ்வுலகைக் காக்க அவதரித்த இரட்சகராகவே போற்றப்பட்டார்.


அரசியலுக்கு வந்த நடிகர்களைப் போலவே அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர்களின் தோள்களிலும் புகழ்மாலைகள் வலிந்து சூட்டப்பட்டன.


இது மட்டுமன்றி, அந்தந்தக் காலங்களில் சம அளவில் புகழ் பெற்று விளங்கும் இருவேறு நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் ஒப்பீடுகள் ஒரு யுத்தம் போலவே நிகழ்த்தப்படுகின்றன.


எம்.ஜி.ஆர்.  சிவாஜி, கமல்ஹாஸன்  ரஜினிகாந்த், அஜித்  விஜய் என்று வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த இரண்டிரண்டு நாயகர்களின் ரசிகர்கள் இரண்டு தரப்பாகப் பிரிந்து மோதிக்கொள்வது காலம் காலமாக நடந்துவருகிறது.


பிடிக்காத கதாநாயகனின் சினிமா விளம்பர சுவரொட்டி மீது சேறும், சாணியும் அடிப்பதில் தொடங்கிய ரசிகத்தொண்டு, இப்போது முகநூல் போன்றவற்றில் எதிர்த்தரப்பைத் தூற்றி வம்புக்கிழுப்பது வரையில் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது.


என் தலைவனுக்குத்தான் நடிக்கத் தெரியும், எங்க ஆள் நல்லவர், தருமத்துக்கு வாரிக்கொடுப்பவர், தாய்க்குலத்தை மதிப்பவர் என்றெல்லாம் ஒரு தரப்பு ரசிகர்கள் கூறிக்கொள்வதில் பெரிய தவறு ஏதும் இல்லை. ஆனால், எதிர்த்தரப்புக் கதாநாயகனை மட்டம் தட்டும் போதுதான் அது தகராறாக மாறுகிறது.


ஆந்திராவில் இதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களுக்கும், பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் (யார் சிறந்த நடிகர் என்ற வாக்குவாதத்தால்) நிகழ்ந்த தகராறு, பவன் கல்யாண் ரசிகர் ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமாகியது.


இருவேறு கதாநாயகர்களின் ரசிகர்கள் எதிரிநாட்டுப் போர் வீரர்கள்போல சண்டையிட்டுக் கொள்வதும் அதில் வாழவேண்டிய இளைஞர் ஒருவர் உயிர் இழப்பதும் யாராலும் நியாயப்படுத்த முடியாத கொடுமை ஆகும். ஸ்ரீ இராமர் வேடம் புனைந்து நடிப்பவர், திரையில்தான் ஸ்ரீ இராமரே தவிர, மற்றபடி நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர்தான் என்பதைப் புரிந்து கொண்டால் இந்த விபரீதங்களுக்கு வழியிருக்காது.


கதாநாயக வழிபாடு (Hero worship) என்பது நமது நாட்டில் எப்போதும் உள்ளதுதான்.
சினிமாத்துறை மட்டுமன்றி, கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், அபூர்வமாக சில இசைக் கலைஞர்கள் போன்றவர்களை மிகை மயக்கத்துடன் பார்ப்பதும்  அவர்களை மனிதப்பிறவிக்கும் மேற்பட்ட தெய்வப்பிறவிகளாகக் கருதுவதும், அவர்களைப் போற்றுவதற்காக நமது விலைமதிப்பற்ற நேரம், மனிதசக்தி போன்றவற்றை வீணடிப்பதும் ஒரு தவமாகவே இங்கு செய்யப்படுகிறது.


நம்மில் பலரும், தெரிந்த தொழிலைச் செய்து பணம் ஈட்டி, நமது குடும்பத்தினரைக் காப்பாற்றுகிறோம். அதேபோலத்தான், சினிமா கதாநாயகர்களும்  கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்குத் தெரிந்த நடிப்பு, விளையாட்டுத் திறமையின் மூலம் பொருள் சம்பாதித்துத் தங்களைச் சேர்ந்தவர்களை நன்றாகப் போஷித்து வருகின்றார்கள்.

இவ்வளவுதான் வித்தியாசம். தத்தமது குடும்பத்தைக் காப்பாற்ற உண்மையாக உழைப்பவர்கள் அனைவரும் நாயக  நாயகிகளே என்பதைப் புரிந்து கொண்டால் போதும். ரசனை என்பது ரசனையாகவே இருக்கும். வெறியாக ஒருபோதும் மாறாது இருக்க வேண்டும்.


தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்கள், மகான்கள், இசைமேதைகள் என்று நாம் போற்றிக் கொண்டாட வேண்டியவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். மற்றவர்கள் தங்களைத் தெய்வமாக உயர்த்தி வழிபடுவதை அந்த மேன்மக்களே ஒருபோதும் விரும்பியதில்லை. தங்களது மகத்தான சேவையின் மூலம் மனித இனம் அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுபட்டு மகிழ்வதையே அவர்கள் விரும்பினார்கள்.


மனிதவளம் மிகுந்த தேசம் நமது இந்திய தேசம். நியாயமற்ற காரணங்களுக்காக நமது மனித ஆற்றல் வீணடிக்கப்படுவதும், மனித உயிர்கள் பரிதாபமாக பலியாவதும் எப்பாடுபட்டாவது தடுக்கப்பட வேண்டும். இதுவே நமது தேசத்தின் உடனடித் தேவை.

TOTAL VIEWS : 1707
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
mlk1l
  PLEASE ENTER CAPTA VALUE.