அரசாங்கம் கோதாவை கைது செய்யவும் மகிந்தவை பாதுகாக்கவும் முனைகிறதா?
2017-12-11 13:43:00 | General

கடந்த எட்டாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டதும் கடைசியாக 21 நாட்கள் கால எல்லை நீடிக்கப்பட்டதுமான முறி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவருவதற்கு மேலும் 23 நாட்கள் கால அவகாசம் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.

ஏறக்குறைய ஒரு வருட காலத்தை தனதாக்கிக் கொண்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையிலிருந்து அரசாங்கத்தின் திருடர்களையும் மகாதிருடர்களையும் கூட அடையாளப்படுத்திவிடலாம் என பேசப்படுகின்ற தருணத்தில் முன்னைய ஆட்சிக் காலத்தின் திருடர்களையும் மகாதிருடர்களையும் ஊழல் பேர்வழிகளையும் வெளிக் கொணர்வதில் நல்லாட்சி அரசாங்கம் தட்டுத்தடுமாறுவதாக கூறப்படுகிறது.

12 காலாண்டுகளாக

தேடி வலைவிரித்தும் சல்லடை போட்டுத் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போன ஒரு குற்றவாளியின் கதைபோன்றதே அரசாங்கத்துக்கு கோதாபய ராஜபக்ஷவின் கதை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இராஜாங்கம் தடுமாறுகிறது. வலை விரிக்கப்படுகிறது. ஆனால் கோதா வீழ்வதாகத் தெரியவில்லை.

அக்கறையுள்ள தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். ஆயினும் அரசால் முடியாமல் போய்விடுகிறது. முதல் காலாண்டில் நடந்தேறியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட கோதாவுக்கு எதிரான நடவடிக்கை பன்னிரெண்டு காலாண்டுகள் நிறைவுறும் தருணத்திலும் எடுக்கப்பட முடியாத நிலையை எண்ணி இராஜாங்கத்தார் கவலையடையக்கூடும்.

குறைந்தபட்சம் இன்னுமொரு ஆறு காலாண்டுப் பகுதிக்கு தனது முன் பிணையான தற்பாதுகாப்பை அவ்வப்போதைய நிலைமைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அமைவாக தேடிக் கொண்டோமேயானால் தனக்கு சார்பான அரசும் வந்துவிடும், நிம்மதியாக நடமாடலாம், தூங்கலாம் என கோதா நினைக்கக்கூடும்.

தற்காலிகமாகவேனும் கூட்டுக்குள் அடைக்கவும் முடியவில்லை. கூண்டேற்றவும் முடியவில்லை. இராஜாங்கத்தின் முயற்சிக்கு எதிராக சூட்சுமமான முறையில் தான் கைது செய்யப்படாமலிருப்பதற்கான தடையுத்தரவை பெறுவதில் கோதா கெட்டிக்காரனாகவேயுள்ளார். 

தந்திரோபாயம் நிரந்தரமாகுமா? நீடிக்குமா?

மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோதாபய ராஜபக்ஷ ஒரு கால கட்டத்தில் பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக மாத்திரமன்றி அதிகாரம் மிக்க ஜனாதிபதியின் சாயலில் பணி புரிந்தார். ஆணையிடுவதில் உச்சத்தில் இருந்தவராக பேசப்பட்ட அவர் கரங்களாலும் துஷ்பிரயோகங்கள் அதிகாரப் பிரயோக போர்வையில் இடம்பெற்றிருக்கக்கூடும்.

ராஜபக்ஷக்களான பசில், நாமல், யோஷித போன்றோரை கூட்டுக்குள் போட்டெடுத்த குற்றவியல் நீதி நிர்வாகத்தால் கோதாபயவை திடீரென கைது செய்து தடுப்புக் காவல் கைதியாக சிறையில் போட முடியாதவாறு தந்திரோபாயமாக அவர் செயல்பட்டுவிடுகிறார்.

அநேக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு கைது செய்து தடுத்துவைக்கப்படாதுள்ள இரு ராஜபக்ஷக்களாக மகிந்தவும் கோதாவும் காணப்படுகின்றமை தெரிந்ததே. மகிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி, அரசியல்வாதி என்றடிப்படையில் பார்க்கப்படினும் கோதா ஒரு அரச அதிகாரியாக இருந்து செயற்பட்ட அதிகார துஷ்பிரயோகக்காரர் என்றே இலங்கையின் குற்றவியல் நீதி நிர்வாகம் அவரை நோக்குகிறது.

ஆரம்பத்தில் கைது செய்யப்படலாம் என்ற ஊகம் தெரிவிக்கப்பட்ட போது அடிப்படை மனித உரிமையூடாக உயர் நீதிமன்றம் சென்று கைது செய்யப்படாதிருக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை பெற்றுக் கொண்டார். அந்தவகையில் 100 நாள் அரசும் அதற்குப் பின்னருமாக ஏறக்குறைய மூன்று வருடங்கள் தற்பாதுகாப்பைத் தேடிக்கொண்டார்.

சமகாலத்தில் இரண்டாவது தடவையாகவும் பிறிதொரு தலைப்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலமாக தடையுத்தரவை பிறப்பிக்கச் செய்துள்ளார். பூர்வாங்க கட்டமாக கடந்த 6 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற தற்காப்பு கவசம் அடுத்த கட்டமாக எதிர்வரும் 15 ஆம் திகதிவரை கால நீடிப்புக் கண்டுள்ளது. இலங்கை குற்றவியல் நீதி நிர்வாகத்தின் ஒரு பிரிவாக செயற்படக்கூடிய நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மூலமாக தனக்கு எதிராக எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்பதற்கு சமகால கட்டளைக்கே காலாவதி எதிர்வரும் 15 ஆம் திகதி, அது இன்னும் நீடிக்குமா? நிரந்தரமாகுமா?

பழிவாங்கலா? பழிதீர்த்தலா?

இவ்வாறு இலங்கையின் குற்றவியல் நீதி நிர்வாகத்தைக் கொண்டு இலங்கை அரசாங்கத்தையே ஏய்க்காட்டிக் கொண்டிருக்கும் கோதா காலத்தில் குற்றவியல் நீதி நிர்வாகத்தின் வலிமை குன்றியிருந்த பார்வையை அன்றைய ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்திருந்த வேட்பாளரான சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட விதம், கையாளப்பட்ட விதம் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் எடுத்துக் காட்டியிருந்தன. அன்று அரசியல் பழிவாங்கல், பழி தீர்த்தல் எனப் பேசிய தென்னிலங்கை இன்று ராஜபக்ஷக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் பழிவாங்கல்  பழிதீர்த்தல் என்றே கூறுகிறது. இதுவே இந்த நாட்டில் காணப்படக்கூடிய சாதாரண பிரஜைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான பேதமையாகும்.

தடைக் கட்டளையா? விசாரணையா?

கோதாவுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படக்கூடாது என்ற தடைக் கட்டளையை நீதிமன்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடித்துள்ளபோதிலும் ஒருதலைப்பட்சமான கட்டளைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை வெளியிட்டார். முக்கியமான தகவல்களை திரிபுபடுத்திவிட்டதாக அவர் கோதாவை பிழை பிடித்தார்.

சம்பவத்தின் நிகழ்வுகளையும் தகவல்களையும் பிழையான முறையில் எடுத்துக் கூறியே இடைக்காலக் கட்டளையை பெற்றார் என்று வாதிடப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் வாதிடப்பட்டதும் முன்வைக்கப்பட்டதுமான சம்பந்தப்பட்ட முறையற்ற தகவல்களை, தாங்களும் அறிந்து கொள்ளும் வகையில் குறித்த சமாச்சாரத்தை விசாரிக்க வேண்டுமென கோதாவுக்காக ஆஜரான வக்கீல் கோரியதற்கிணங்க எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரிக்க நாள் நிர்ணயித்த அதேவேளை, தடையுத்தரவையும் அதே திகதிவரை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டன என்ற தர்க்கம் சவாலுக்குள்ளாகின்றது எனில், இங்கும் அரசாங்கத்துக்கு கோதா சவால் விடுக்கிறார் என்றே பொருளாகும். ஏனெனில் அரசின் முகவரான சட்டமா அதிபர் இராஜாங்கத்தின் சார்பிலேயே வாதிடுகிறார் என்கிற அடிப்படையிலாகும். இவ்வாறு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனை தாக்கல், தடையுத்தரவு நீடிப்புக்கு கிளப்பப்பட்ட, ஆட்சேபனைக்கேற்பவும் விசாரணைக்கான திகதி கோரப்பட்டுள்ளது.

குற்றமும் வாதாட்டமும்

ஒன்பது கோடி ரூபா அரச நிதியைப் பயன்படுத்தி மெதமுலானவில் தனது தகப்பன் பெயரில் டி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை மற்றும் ஞாபகார்த்த மண்டபம் நிர்மாணித்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடாகும். பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் முறைப்பாடு அமைந்திருந்தது. பொதுச் சொத்து சட்டத்துக்கு எதிரான குற்றங்களின் பிரிவு 8 (1) இன் கீழ் வழங்கப்பட்ட அத்தாட்சிப்பத்திரம் அவரது சட்டபூர்வ எதிர்பார்ப்புகளை மீறக்கூடியது அல்லது எல்லைக்கு அப்பாற்பட்டது என்ற ராஜபக்ஷவின் கருத்தை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

குறித்து சட்டப் பிரிவின் ஏற்பாடுகளின் கீழாக தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தை நம்பி அல்லது வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலிருந்து பிரதிவாதிகளை தடுக்கும் வகையிலான ஒரு கட்டளையையும் கோதா எதிர்பார்க்கிறார். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேக்கர, எப்.சி.ஐ.டி. பணிப்பாளர் ரவி வைத்தியலங்கார, சட்டமா அதிபர் போன்றோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களுக்கு இணங்க பொதுச் சொத்து சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பானதும் அதன் கீழானதுமான குற்றம் முதற் தோற்றத்திலேயே காணப்படவில்லை என்பது மனுதாரரின் வாதமாகவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் எந்த வகையிலும் குற்றம் கிடையாது என்ற நிலைப்பாட்டிலுமுள்ளார்.

எழுத்து மூலமான எத்தகைய ஒப்பந்தமும் அற்றதான ஒரு உடன்பாடு வீரகெட்டிய மெதமுலானவில், ஒரு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்காக இலங்கை காணி மீட்டல் திணைக்களத்துக்கும் ஒரு சட்டபூர்வ நியதிச் சபையான டி.ஏ. ராஜபக்ஷ மன்றத்துக்குமிடையே காணப்படுவதாகவும் வாதிடப்பட்டது. உண்மையில் எழுத்து மூலமான உடன்படிக்கை எதுவுமின்றி அரச நிதியை தனிப்பட்ட தகப்பன் பெயரிலான நிறுவனம் தொடர்பில் முதலீடு செய்யலாமா எனும் கேள்வியும் எழுப்பப்படுகிறது.

உண்மையில் டீல்தானா? அனுதாபமா?

கோதாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கியதும் தென்னிலங்கை தேசிய இன, மதவாதிகள் தங்களது ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில் எங்களுடைய கோதா, சேனாதிபதி யுத்தத்தை வெற்றி கொண்டவர் என்றெல்லாம் பணம் கொடுத்தும் பத்திரிகைகளில் வெளிக்காட்டினர்.

ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பதுபோல ராஜபக்ஷக்களை கைது செய்தல் என்பது பழங்கதையாகி சுமாரான அனுதாபத்தையும் தொட்டிருக்கும் எனக் கூறமுடியும். கோதாவை கைது செய்து கூட்டில் அடைத்துப் பார்க்க முனையும் அரசாங்கம், சகோதரர் மகிந்த ராஜபக்ஷவை பாதுகாத்து அழகு பார்க்க முனைகிறதா? என்கிற மிகப் பிந்திய கேள்வியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தங்கள் வெற்றிபெறும் களம் உதயமாகிறது. மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அவரைப் பாதுகாப்பது எங்களது கடமை, அதன் மூலம் அரசுக்கு நன்மையுண்டு. அவரைக் கைவிட மாட்டோம் என்றெல்லாம் ரணில் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை விடவும் இரட்டிப்பான பாதுகாப்பு மகிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. உண்மையில் வழக்கமான நகைச்சுவைப் பாணியில் மகிந்தவின் பாதுகாப்பு ஸ்திரம் பற்றி பிரதமர் ரணில் பிரஸ்தாபித்திருப்பாராகிலும், சமகாலத்தில் மகிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையே டீல் இருப்பதாக அரசியல் அரங்கில் பரவலாக பேசப்படுகிறது. அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சியை ஒதுங்கிச் செல்லத் தூண்டுவதும் மகிந்த அணியினரின் டீலுடன் தொடர்புபட்ட விடயமாகும் என்று நீல அணியின் சில முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவோ, மகிந்த ரெஜிமண்டின் செயற்பாடுகளை அவ்வப்போது விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். உண்மையில் நீல அணி வெளியேறினால் அடுத்த பெரிய மாற்று அணி மகிந்த அணியாகவேயுள்ளது. எதுவும் நடக்கலாம் என்கிற அரசியலில் அது மாத்திரம் ஒரு பெரிய விவகாரமாக இருக்க முடியாது.

இருப்பினும் தற்போதைய நிலையில் யாரை யார் ஏமாற்றுகிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தடல்புடலாக மாறிமாறி கட்சிகள் கட்டுப்பணம் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கென செலுத்தி வருகின்றன. திரை மறைவில் பேச்சுகளும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் மகிந்த  ரணில் இரு தலைவர்களும் பரஸ்பரம் ஜனாதிபதியாக தான் இருந்திருந்தால், ரணிலை கூண்டேற விட்டிருக்க மாட்டேன் என்று மகிந்தவும் மகிந்தவைப் பாதுகாப்பது எமது தலையாய கடமை என்று ரணிலும் பரிவு, பாசத்தைக் காண்பித்துக் கொண்டனர். அதுவும் ஒருவகை டீலை தொட்டுக் காட்டுகிறதோ புரியவில்லை.

பிரதமர் பதவி மகிந்தவுக்கு தரப்படும் என்றால் ரணிலை ஜனாதிபதியாக்கவும் மகிந்த தயங்கமாட்டார். துரோகமிழைத்தவரை பழிவாங்கக்கூடிய பரஸ்பர வேலைத்திட்டங்களும் கூட திரைமறைவில் மறைந்து கிடக்கலாம். எல்லாமே ஏதோ ஒருவகை மறைமுக வேலைத்திட்டங்களின் அடிப்படையிலேயே நடந்து வருவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

கட்டுரையாளர்  சட்டத்தரணி, 
சுயாதீன தேசிய முன்னணியின் 
தலைவர், ஒலி, ஒளிபரப்பாளர்.

 

TOTAL VIEWS : 1154
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
aug2e
  PLEASE ENTER CAPTA VALUE.