"என் காலில் விழுந்து தமது உறவுகளை கேட்போருக்கு நான் என்ன பதில் கொடுப்பது?"
2017-03-29 11:30:30 | General

மனிதர்கள் மத்தியில் கொடுமை மற்றும் குரூரத்தனத்தின் உண்மையை வெளிக்கொணர்வதற்கு போர்க்குற்றங்களுக்கான விசாரணை அவசியமானது. குறித்த இனக்குழுக்களைச் சார்ந்தவர்களாக அவற்றை இழைத்தவர்கள் இருப்பதனால் அவற்றை மூடி மறைப்பது பொருத்தமற்றதொன்றாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.


போரானது வன்முறையானதும் கொடூரமானதும் என்று கூறுவது போதியதொன்றல்ல. பின்பற்றப்படுவதற்கு போர் தொடர்பான தகைமைகள் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அவை பின்பற்றப்பட்டிருக்காவிடின் போதியளவு நடவடிக்கைகள் அதன் பின் தேவைப்படுகின்றது.

அதுவே பதிலளிக்கும் கடப்பாடும் நீதியும் ஆகும். அதனையே எமது மக்கள் கோருகின்றனர். போர்க்குற்றங்கள் தொடர்பாக போதிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு அதிகாரங்களின் தயக்கமும் அவற்றை அந்த கடந்த காலத்தை மூடி மறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளும் எமது மக்களை நல்லாட்சி அரசாங்கம் உண்மையில் நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் தொடர்பாக விருப்பத்தைக் கொண்டிருக்கின்றதா என்ற ஆச்சரியத்தை விட்டுச்செல்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


தெல்லிப்பழையில் கடந்த சனிக்கிழமை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி சந்திரிகா குமாரதுங்கா கலந்துகொண்ட நிகழ்வின் போதே முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் தெரிவித்ததாவது;


தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்ட வைபவத்தை ஆரம்பிக்க வருகை தந்திருக்கும் திருமதி குமாரதுங்கவை  வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இப்போது தெல்லிப்பழையிலும் பின்னர் சங்கானை, கரவெட்டி, பருத்தித்துறை ஆகிய இடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. பல திட்டங்கள் எமது மக்களுக்கு உதவியாக அமைந்துள்ளன.

பளை வீமன்காமத்தில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் நிர்மாணம், சங்கானையில் சுழிபுரம் மேற்கில் மீன் ஏல விற்பனை நிலையத்தின் நிர்மாணம், ஆலவிழுந்தான் குளம் உடுப்பிட்டி தெற்கு கால்வாய் புனரமைப்பு, பொலிகண்டி தெற்கு கிராமிய நீர் விநியோகத்தை ஆரம்பித்தல் போன்றவை திருமதி குமாரதுங்க தலைமையில்  மேற்கொள்ளப்பட்ட சில நிகழ்வுகளாகும். இந்தப் பணிகள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், யுத்தம் முடிவுக்கு வந்து 8 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இவை மிக தாமதமாகவே பரிசீலனைக்கு எடுக்கப்படுகின்றன. யுத்தத்தின் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்கான அவசர தேவை குறித்து எமது மக்கள் முழுமையான பிரக்ஞையுடன் உள்ளனர். அதேவேளை பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் குறித்தும் அவர்கள் கவலையுடன் உள்ளனர். நல்லிணக்கம் தொடர்பான பற்றுறுதியை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் இதுவரை போதாது என்ற உணர்வை எம்மில் சிலர் வெளிப்படுத்துகின்றனர். 


நல்லிணக்கத்திற்காக உள்ளீர்க்கப்பட்ட நடவடிக்கைகளில் எமது பங்கேற்பு உள்ளீர்த்துக்கொள்ளப்படாமல் உள்ளது. நல்லிணக்கமானது பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் பங்கேற்பதை கோரி நிற்பதாகவும் எமது பங்கேற்பு என்பது எமது அதிகாரிகளென அர்த்தப்படாது.

அவர்கள் மத்திய அரசை சார்ந்தவர்கள். எமது மக்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆரம்பத்திலிருந்து பங்கேற்பவர்களாக இருக்க  வேண்டும். ஆதலால் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்னுரிமை திட்ட கட்டமைப்பை தயாரிப்பதில் உள்ள முக்கியத்துவம் குறித்து நாங்கள் விமர்சனங்களை கொண்டுள்ளோம்.

பல விடயங்களில் போதியளவு கவனத்தை செலுத்த வேண்டிய தேவையுள்ளது. முக்கியமானவை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அவற்றின் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். எமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படுவதில்லை. இப்போதும் கூட எங்களை உள்ளீர்த்துக்கொள்வதற்கு காலம் பிந்திவிடவில்லை.

சம்பந்தப்பட்டவர்களில் முக்கியமானவர் பங்கேற்காவிடின் கட்டமைப்பை அமுல்படுத்த எவ்வாறு இயலும். கட்டமைப்பில் போர்க்குற்றங்களுக்கான  பதிலளிக்கும் கடப்பாடு பற்றி குறிப்பிடப்படவில்லை. எமது சட்டத்தில் போர்க்குற்ற சட்ட பரிமாணத்தை உள்ளீர்த்துக்கொள்வதற்கான குறிப்பும் இல்லை. இராணுவ சூனியமயமாக்கல், உயர்பாதுகாப்பு வலயங்கள், பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு என்பன கட்டமைப்புக்குள் உள்ளீர்த்துக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை வாபஸ்பெற வேண்டிய தேவையுள்ளது. புலம்பெயர்ந்தவர்களின் வகிபாகம் உள்ளீர்த்துக்கொள்ளப்படவேண்டும். எமது எதிர்கால அபிவிருத்தியில் நிலையான அபிவிருத்தி இலக்குகள் முக்கியமானதாக விளங்க வேண்டும். எமது மக்களின் நெருக்கடியும் அபிலாஷைகளும் போதியளவுக்கு புரிந்துகொள்ளப்படவில்லை.


எனது காலடியில் வீழ்ந்து ஆட்கள் "தயவு செய்து எமது அன்புக்குரியவர்களை கண்டுபிடித்து தாருங்கள். அவர்களை இராணுவத்திடம் கையளித்திருந்தோம். அவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது' என்று அவர்கள் அழுது கேட்கின்றனர். அவர்களுக்கு என்ன பதிலை நான் கொடுப்பது. கிளிநொச்சி அல்லது கேப்பாபுலவில் பல பெற்றோர்கள் பல்வேறு நோய்கள் வலிகளினால் துன்பப்படுகின்றனர்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை  அவர்களை பீடித்துள்ளன. தற்காலிக கூடாரங்களில் இருந்து கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பதை நான் பார்த்துள்ளேன். தமது அன்புக்குரியவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது இறந்துவிட்டனரா என்பதை அறிய முயற்சிக்கின்றனர். காணாமல் போன அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது இயங்குவதற்கு உயிரூட்டம் அளிக்கப்படவில்லை. அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள் தொடர்பாக குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அறிக்கைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.

பல்வேறு விடயங்கள் 2015 இல் ஜெனீவா தீர்மானத்தால் அடையாளம் காணப்பட்டிருந்தன. எமது உறுதிப்பாடுகள் தொடர்பாக நாங்கள் மீள்பரிசீலனைசெய்ய வேண்டிய  தேவைப்பாடு காணப்படுகின்றது. நான் வெளிநாட்டில் இருந்த போது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வன்முறை மற்றும் கப்பம்  சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை மனிதர்கள் மத்தியிலான குரூரத்தனத்தின் உண்மையை வெளிக்கொணர்வதற்கு தேவையானதாகும். நாங்கள் எமது மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு   உதவும் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றோம். அதேவேளை மோதலுக்கான அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணவும் போதிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம். 


இந்த நிகழ்விற்கு திருமதி சந்திரிகா என்னை அழைத்தமைக்காக நன்றி கூறுகின்றேன். அவரின் முயற்சிகளும் செயற்பாடுகளும் எமது முரண்பாடான சமூகங்கள் மத்தியில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை  கொண்டிருக்கின்றேன்.

TOTAL VIEWS : 1669
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
e2eto
  PLEASE ENTER CAPTA VALUE.