தாய்ப்பால் ஊட்டுவதில் முன்னிலை வகிக்கும் 23 நாடுகளில் இலங்கை
2017-08-02 09:14:49 | General

தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட தரத்தை உலகிலுள்ள எந்தவொரு நாடும் முழுமையாக எதிர்கொள்வதில்லையென ஐ.நா. சிறுவர்கள் நிதியமும் (யுனிசெவ்) உலக சுகாதார அமையமும் வெளியிட்ட புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.


உலக தாய்ப்பாலூட்டும் கூட்டு முயற்சி என்ற புதிய முன்முயற்சியுடன் இணைந்து இந்தப் புதிய அறிக்கையை இரு ஐ.நா. முகவரமைப்புகளும் வெளியிட்டுள்ளன. சர்வதேச ரீதியில் தாய்ப்பாலூட்டும் விகிதத்தை அதிகரிப்பதே இதற்கான முயற்சியாகும்.


194 நாடுகளில் சர்வதேச மட்டத்தில் தாய்ப்பாலூட்டுவது தொடர்பாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 6 மாதங்களுக்கு குறைவான 40% ஆன குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது கண்டறியப்பட்டுள்ளது. 23 நாடுகளில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டும் வீதம் 60% மேலாக காணப்படுகிறது.


1981 இல் தாய்ப்பாலுக்குப் பதிலீடாக சந்தைப்படுத்தலுக்கான சர்வதேச குறியீட்டை உள்வாங்கியிருந்த நாடுகளில் ஒன்றாக விளங்கிய இலங்கை, தாய்ப்பால் ஊட்டுவதை மேம்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதலீட்டைத் தொடர்ந்து உயர்மட்டத்திலுள்ள 23 நாடுகளுக்குள் ஒன்றாக உருவாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் 82% ஆன தாய்மார் தமது பிள்ளைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றனர். 


தாய்ப்பாலூட்டுதல் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ ரீதியான அனுகூலங்களை வழங்குகின்றமை தொடர்பான ஆதாரம் காணப்படுகின்றது. விசேடமாக முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பாலூட்டுவது வயிற்றோட்டம், நிமோனியா போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுவதாக காணப்படுகின்றது. இந்த 2 நோய்களுமே குழந்தைகளின் மரணத்திற்கு பிரதான காரணமாக காணப்படுகின்றன.

தாய்ப்பாலூட்டும் தாய்மாருக்கு கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயின் ஆபத்து குறைவாகும். பெண்கள் மத்தியில் மரணத்திற்கு காரணமாக இரு பிரதான நோய்களாக இந்த கருப்பை மற்றும் மார்ப்கப் புற்றுநோய் காணப்படுகிறது. 
"தாய்ப்பாலூட்டுதல் பற்றிய ஆச்சரியமான விடயமாக இருப்பது பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கு அது ஆதரவளிப்பதாகும்.

பிள்ளைகளின் ஆற்றலை வளர்த்தெடுப்பதிலும் அவர்கள் கற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வளர்வதை உறுதிப்படுத்தவும் மேலும் ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான இளம்பராயத்தராக வளர்ச்சியடைவதற்கும் தாய்ப்பால் உதவுகின்றது.

எந்தவொரு நாடும் தமது இளைஞர் சமூகத்தினரை ஆரோக்கியமானதாக கொண்டிருப்பதற்கு அதிகளவுக்கு மேற்கொள்ளும் முதலீடுகளில் ஒன்றாக தாய்ப்பாலூட்டுதல் காணப்படுகிறது. தமது பொருளாதாரங்கள், சமூகங்கள் என்பவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இது உதவுகின்றது' என்று இலங்கைக்கான யுனிசெவ்வின் பிரதிநிதி ரிம் சட்டர் கூறியுள்ளார்.


"இலங்கையில் 82% ஆன தாய்மார் 6 மாதங்களுக்கு தமது குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுகின்றனர் என்பதையிட்டு நாங்கள் யாவரும் பெருமைப்பட வேண்டும். அதேவேளை, உண்மையான அனுகூலங்களை நாங்கள் பெற்றுக் கொள்வதற்கு நாம் யாவரும் செயற்படுவது அவசியம். நாங்கள் யாவரும் ஒன்றிணைந்து தாய்ப்பால் பதிலீடுகளை சந்தைப்படுத்தலுக்கான சர்வதேச குறியீடுகளை கண்காணிப்பதுடன், தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதாவது தாய்மார்கள் அவசர காலத்தின் போது சரியான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு வலுவூட்டப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் குழந்தையுடன் நட்புறவு கொண்ட மருத்துவமனை முன்முனைப்பை நாங்கள் தொடர்ந்தும் வலுப்படுத்த வேண்டும். இந்த விடயத்தின் மூலம் மருத்துவமனைகள் தாய்ப்பாலூட்டுவதை மேம்படுத்துகின்றதென்பதை உறுதிப்படுத்த இயலும்.

சில சமயங்களில் நாங்கள் தொடர்ந்து எமது மருத்துவ அலுவலர்கள் தொடர்பாக முதலீடு செய்வது முக்கியமானதாகும். அவர்கள் தமது பிள்ளைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பாக தேவையான அறிவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துவார்கள்' என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.


"தாய்ப்பாலூட்டுதல் வாழ்க்கையின் சிறப்பான ஆரம்பமாக விளங்குகிறது. புதிதாக பிறக்கும் குழந்தைக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் வயது வந்த பின்னர் அக்குழந்தை ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஆரம்பத்தை இது வழங்குகிறது. தாய்ப்பாலூட்டுதல் போன்றவற்றிற்கு தலையீடுகளை மேற்கொள்ளுதல் திரும்பக்கிடைக்கும் ஒப்புவமையில்லாத முதலீடாகும்' என்று இலங்கைக்கான உலக சுகாதார அமையத்தின் பிரதிநிதி டாக்டர் ராஷியா பென்ஸ் கூறுகிறார்.


"நீடித்த முறையில் தாய்ப்பாலூட்டுதல் போஷாக்கை உறுதிப்படுத்தவும் 
சிறுமிகள், பெண்களின் இனப்பெருக்க வயதை ஆரோக்கியமான முறையில் கொண்டிருப்பதற்கும் முக்கியமானதாக இருக்கின்றது. தாய்ப்பாலூட்டுதலை பாதுகாத்து மேம்படுத்துதலில் இலங்கை முன்னணியில் விளங்குகின்றது. குழந்தை மற்றும் இளம்பிள்ளைக்கான உணவூட்டுதலுக்காõன தேசிய மூலோபாயத்தில் முக்கிய தூணாக தாய்ப்பாலூட்டுதல் இருந்து வருகிறது' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

2025 இல் 50% ஆக 6 மாதத்திற்கு குறைவான பிள்ளைகள் மத்தியில் தாய்ப்பாலூட்டுவதை அதிகரிப்பதற்கு புதிதாக பிறக்கும் குழந்தை ஒன்றிற்கு 4.7 டொலரே வருடாந்தம் முதலீடு செய்வதற்கு தேவைப்படுகின்றது என்பது தொடர்பாக புதிய ஆய்வு வெளிப்படுத்துகின்றது.நாடுகளின் சுகாதாரம் மற்றும் செல்வத்தை வளர்ப்பதற்கு தாய்ப்பால் ஊட்டுவதில் முதலீடு செய்தல் சிறப்பானதாக அமையுமென கூறப்படுகிறது.

இந்த இலக்கில் முதலீடு செய்தல் 5 வயதுக்கு குறைவான 520,000 பிள்ளைகளின் உயிர்களை பாதுகாக்கக்கூடியதாக அமையுமெனவும் 10 வருடங்களில் 300 பில்லியன் டொலர்களை பொருளாதார அனுகூலங்களாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமெனவும் இதன் விளைவாக நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டும், சுகாதார பராமரிப்புக்கான செலவினங்கள் வீழ்ச்சிகண்டும் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


சீனா, இந்தியா, இந்தோனேஷியா, மெக்ஸிக்கோ, நைஜீரியா என்று உலகின் பாரியளவில் மேலெழுந்துவரும் 5 பொருளாதாரங்களினால் முதலீடுகளில் தாய்ப்பாலூட்டுவதற்கான முதலீடு குறைவாக இருப்பதாகவும் இதன் பெறுபேறாக வருடாந்தம் 236,000 சிறு பிள்ளை மரணங்கள் ஏற்படுவதுடன், 119 பில்லியன் டொலர் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றதையும் இந்த புள்ளிவிபரம் காண்பிக்கிறது. 
சர்வதேச ரீதியாக தாய்ப்பாலூட்டுவதற்கான முதலீடு அதிகளவுக்கு தாழ்ந்த மட்டத்தில் உள்ளது.

ஒவ்வொரு வருடமும், குறைவான மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் தாய்ப்பாலூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக 250 மில்லியன் டொலரையே செலவிடுகின்றன. அத்துடன் உதவி வழங்குவோரும் மேலதிகமாக 85 மில்லியன் டொலர்களையே வழங்குகின்றனர். தாய்ப்பாலூட்டும் விகிதத்தை அதிகரிப்பதற்கு நிதியளிக்குமாறு நாடுகளுக்கு சர்வதேச தாய்ப்பாலூட்டும் கூட்டமைப்பு அழைப்புவிடுக்கின்றது.

தாய்ப்பால் பதிலீடுகளை சந்தைப்படுத்தலுக்கான சர்வதேச செயற்பாட்டை முழுமையாக அமுல்படுத்துமாறும் பொருத்தமான உலக சுகாதார ஒன்றுகூடல் தீர்மானங்களை வலுவான சட்ட நடவடிக்கைகள் ஊடாக அமுல்படுத்துமாறும் அமைப்புகளும் நலன்சார் முரண்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைப்புகளும் கூறியுள்ளன.

கொடுப்பனவுடனான குடும்ப விடுமுறை, வேலைத்தளத்தில் தாய்ப்பாலூட்டும் கொள்கைகள், சர்வதேச தொழிலாளர் அமையத்தின் பிரசவப் பாதுகாப்பு வழிகாட்டல்களை ஆகக் குறைந்த தேவைப்பாடாக கொண்டிருப்பதைக் கட்டியெழுப்புதல், உத்தியோகப்பற்றற்ற ஏற்பாடுகளை உள்ளடக்குதல் போன்றவற்றை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நோய்வாய்ப்பட்டோர் மற்றும் நலிந்த நிலையிலுள்ள புதிதாக பிறந்த குழந்தைகள் என்போருக்கு தாய்ப்பால் வழங்குதல் உட்பட பிரசவ வசதிகளில் தாய்ப்பாலூட்டுதலை வெற்றிகரமாக மேற்கொள்ள 10 நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பாலூட்டுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு தொழில்சார் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.

பரந்துபட்ட தாய்ப்பாலூட்டும் கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்களை சுகாதார வசதிகளைச் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது. கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் தேசிய மற்றும் சர்வதேச தாய்ப்பாலூட்டுவதற்கான இலக்குகளை வென்றெடுப்பது தொடர்பான நிதியளித்தல் என்பவற்றுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளையே உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது. 


நீடித்த அபிவிருத்தி இலக்குகள் பலவற்றை வென்றெடுப்பதற்கு தாய்ப்பாலூட்டுதல் முக்கியமானதாகும். அத்துடன் போசாக்கை மேம்படுத்துவதுடன், சிறுவர்கள் இறப்பு வீதத்தையும் தடுக்கிறது. அத்துடன் தொற்றா நோய்களால் ஏற்படும் நெருக்கடியையும் இது குறைத்து விடுகின்றது. தாய்ப்பாலூட்டுதல் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உதவுவதுடன், பொருளாதார வளர்ச்சி, சமத்துவமின்மையை குறைத்தல் என்பவற்றையும் மேம்படுத்துகின்றது.

 

TOTAL VIEWS : 925
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gf9kg
  PLEASE ENTER CAPTA VALUE.