குடாநாட்டுக்கான எதிர்கால 'நீர் மூலம்' எங்கே இருக்கிறது?
2017-07-26 11:43:34 | General

யாழ்.குடாநாட்டில் முக்கிய பிரச்சினையாக மேலெழுந்து வரும் "குடிநீர்ப் பிரச்
சினையை' தாமதிக்காது தீர்த்து வைக்க வேண்டிய சூழல் உருவாகி வருகின்றது.
ஆனாலும் இவற்றுக்கான நிலையான நீடித்த நிரந்தர தீர்வு காண்பதில் கடந்த பல வருடங்களாக யாழ்.மாவட்ட நிர்வாகம் பலத்த சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது.


தற்போது யாழ்.குடாநாட்டின் தரைக்கீழ் நீர் பல்வேறு வழிகளில் மாசுபடுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்.குடாநாட்டு மக்களுக்காக குறுகிய காலத்தில் உடனடியாக நன்னீர் வழங்கக் கூடிய நிரந்தரமான நீர் மூலத்தை அடையாளம் கண்டு அதனூடாக குடிநீர் வழங்கலை மேற்கொள்ள வேண்டிய அவசர சூழல் உருவாகியுள்ளது.


இவற்றுக்கான தீர்வாக 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு யாழ்ப்பாண குடிநீர் திட்டம் பல்வேறு சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் உள்ளாகி பல வருடங்கள் இழுபட்ட நிலையில் இன்று அக்குளத்தில் இருந்து நீர் வருமா? இல்லையா? என்ற தெளிவின்றி பல கோடி ரூபாவில் புனரமைப்பு வேலைகள் தொடர்கின்றன.


இந்நிலையில் இரணைமடு யாழ்ப்பாண குடிநீர் திட்டத்துக்கு மாற்றீடான தெரிவாக வடமராட்சி கிழக்கு தாளையடி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் முன் வைக்கப்பட்டு அவற்றுக்கான வேலை முன்னெடுப்புகள் 4500 கோடி ரூபா செலவில் செய்யப்பட்டு வருகின்றன.


இத்திட்டத்தின் ஊடாக யாழ்.குடாநாட்டு மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்துக்கும் பல்வேறு  எதிர்ப்புக்கள், தடைகள் ஏற்படுத்தப்பட்டு விரைவாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.


இந்தத் திட்டம் எவ்வாறு இரணைமடு திட்டம் அரசியலாக்கப்பட்டு மக்களைக் குழப்பி வீதிக்குக் கொண்டு வந்தார்களோ அதேபாணியில் இத்திட்டமும் அரசியல்வாதிகளால் குழப்பியடிக்கப்பட்டு மக்களை இந்தத் திட்டம் தொடர்பில் தெளிவற்ற நிலையை உருவாக்கியிருக்கின்றனர். இதன் காரணமாக மக்களின் எதிர்ப்பலைகள் தேவையற்ற, ஆதாரமற்ற காரணம் கண்முன் வைத்து தொடர்கின்றது.


இந்நிலையில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாக உலகில் முன்னிலையில் உள்ள அவுஸ்திரேலியாவில் மிகப் பெரியளவில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையான (Water Corporation) நீர் கூட்டுத்தாபனத்தில் கடந்த 21 வருடமாக பொறியியலாளராக கடமையாற்றும் ஈழத் தமிழரான பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை ஜெயசீலனுடன் "யாழ்ப்பாணத்துக்கான எதிர்கால நீர் மூலம்' தொடர்பில் பேசுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.


அறிமுகம்


பொறியியலாளர் சிதம்பரப்பிள்ளை ஜெயசீலன்  2007  ஆம் ஆண்டு முதல் 10 வருடங்களாக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சிரேஷ்ட பொறியியலாளராக கடமையாற்றி வருகின்றார்.


பேர்த் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஊடான உற்பத்தி விநியோகம் தொடர்பில் நீண்ட அனுபவத்தை கொண்ட பொறியியலாளர் 
சிதம்பரப்பிள்ளை ஜெயசீலன் யாழ்.குடாநாட்டுக்கான நிரந்தர, நிலையான 
நீர்மூலம் தொடர்பில் எம்மோடு பகிர்ந்து கொண்டவை.

கேள்வி: யாழ்.குடாநாட்டின் நீர் மூலம் பற்றி?


பதில்: வடக்கு, கிழக்கை பொறுத்தவரை கடந்த கால உள்நாட்டு யுத்தம் 30 வருடங்களுக்கு மேலாக நீடித்த பிரதேசமாக காணப்படுகிறது. அபிவிருத்திகள் இடம்பெறுவதற்கு தடையாக காணப்பட்டாலும் யுத்தத்தால் வடக்கின் நீர் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.


ஆனாலும் இன்றைய சூழலில் யாழ்.குடாநாட்டின் நீர்வளம் தொடர்பில் வெளியாகும் தகவல்கள், தரவுகள், செய்திகளின் அடிப்படையில் யாழ்.குடாநாட்டில் நிலத்தடி
நீர் ஆதாரம் காணப்பட்டாலும் அவை பல்வேறு வழிகளில் மாசுபட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன.


மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வது மக்களின் "அடிப்படை உரிமை'
இந்த அடிப்படையில் நிலையான நிரந்தரமான நீர் மூலத்தை அமைத்து விரைவாக மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். இது தமிழ் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தார்மீக பொறுப்பும் கூட.


கேள்வி: தங்களின் நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் யாழ்.குடாநாட்டுக்கான நிரந்தர நீர் மூலமாக எதனைக் கருதுகின்றீர்கள்?


பதில்: இன்று உலகில் முன்னணியிலுள்ள பல அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது நாட்டின் நீர் மூலத்துக்காக பல நடைமுறைகளை பின்பற்றுகின்றன.
இவற்றில் குறிப்பாக பாரிய அணை அமைத்து மழைநீரால் நீர்த் தேக்கங்களை உருவாக்கி அவற்றை சுத்திகரித்து வழங்குதல், கடல்நீரை சுத்திகரித்து வழங்குதல், நிலத்தடி நீரை சுத்திகரித்து வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பாரிய குளங்களை உருவாக்கி நீரை சுத்திகரித்து வழங்குவதோ மாசடைந்து வரும் நிலத்தடி நீராதாரத்தை நம்பியிருப்பதோ பொருத்தமானதல்ல.


ஏனெனில் இவ்விரண்டு நீராதாரத்தையும் தீர்மானிப்பதும் காலநிலை மாற்றமே. காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை எதிர்வு கூற முடியாமை இவ் இரு திட்டங்களின் வெற்றி தோல்விகளில் செல்வாக்கு செலுத்துகின்றது. இந்த வகையில் எனது அனுபவத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பின்பற்றப்படுகின்ற கடல்நீரை நன்னீராக்கும் திட்டமே யாழ்.குடாநாட்டின் நிரந்தர நீர்மூலமாக அமையும்.


ஏனெனில் காலநிலை மாற்றங்களால் எத்தாக்கத்துக்கும் உட்படாத சமுத்திரங்களின் நீரை வருடம் முழுவதும் உத்தரவாதத்துடன் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமன்றி மக்களுக்கான குடிநீரை உரிய தரத்துடன் வழங்க முடியும் என்பது எனது கருத்து.


கேள்வி: "கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்' கடல் வாழ் உயிர் சூழல்களுக்கும் சுற்றுச் சூழல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தை எப்படி நோக்குகின்றீர்கள்?


பதில்: இல்லை. இல்லை. ஒரு போதும் இல்லை. இக் கருத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். இதற்கு உதாரணமாக அவுஸ்திரேலிய நாட்டின் திட்டம் தொடர்பில் விளக்குவது பொருத்தமாக அமையும் என எண்ணுகின்றேன்.

நான் பொறியியலாளராக கடமையாற்றும் அவுஸ்திரேலிய மேற்கு மாநிலமான பேர்த் (Perth) ஒரு வரண்ட பிரதேசம். இதன் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சி 300ட்ட். இங்கு 2007 ஆம் ஆண்டு வரை 60 வீதம் நிலத்தடி நீரையும் 40 வீதம் மழைநீரைச் சேகரித்தும் நீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. ஏனெனில் வேறு நீர் மூலம் காணப்படவில்லை.
காலப் போக்கில் காலநிலை மாற்றத்தால் மக்களுக்கான மாற்று நீர் மூலம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.


இதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு பேர்த் மாநில மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கான நிரந்த நீர் மூலமாக கடல்நீரை நன்னீராக்கும் திட்டமே பொருத்தமானது என்பதை கண்டறிந்தோம்.


அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டங்கள் மிகவும் இறுக்கமானவை. சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவது என்பது இயலாத காரியம். அதற்கும் மேலாக "பசுமைப் புரட்சி இயக்கம்' அமைப்பு சூழலுக்கு பாதிப்பான திட்டங்களை எதிர்த்து வீதிக்கு இறங்கி விடும் நிலை.


இவ்வாறான நிலையில் எப்படி சூழலுக்கு தீர்வான திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்?  


2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தின் மூலம் 26,45,615 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டு பேர்த் மாநிலத்தின் 26,13,760 பேருக்கான குடிநீரை வழங்குகின்றோம். 


ஆரம்பத்தில் 2007 இல் நாள் ஒன்றுக்கு 144,000 மெகா லீற்றர் நீரை சுத்திகரித்து வழங்கிய நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக 300,000 மெகா லீற்றர் நீரை நாளாந்தம் சுத்திகரித்து வழங்கும் அளவுக்கு கடல் நீர் சுத்திகரிப்பு அவுஸ்திரேலியாவில் முன்னேற்றம் கண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் சூழலுக்கு பாதிப்பில்லாததும் மக்களுக்கான தரமான குடிநீர் கிடைப்பதுமே காரணம். 


குறிப்பாக அவுஸ்திரேலியாவின் 47 வீதம் பேர் நாளாந்தம் சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. 


பேர்த் மாநிலத்தில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டத்தின் ஊடாக நீர் கூட்டுத்தாபனம் ஊடாக 33,000 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படுகின்றதுடன் இதன் மூலம் 15,000 கிலோமீற்றர்  தூரமான கழிவு அகற்றல் முகாமைத்துவத்துக்கான செயற்றிட்டமும் மேற்கொள்ளப்படுகின்றது. உலகில் மிக நவீனகரமான உயர் தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  


கேள்வி: யாழில் அமைக்கப்படவுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம் தொடர்பில்? 


பதில்: யாழ்.குடாநாட்டுக்கான நிரந்தர நீர் மூலாதாரமாக கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். இது இன்றைய காலத்தின் கட்டாயம். யாழ்.குடாநாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப சிறியரக உற்பத்தி தொழிற்சாலையூடாக நாளாந்தம் 24,000 கன மீற்றர் நீரே உற்பத்தி செய்யப்படவுள்ள நிலையில் இது மிக சொற்பளவே. 


இதனால் இச் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி செலவுகள் மிக அதிகமாக இருக்கும். சுமாராக ஒரு லீற்றர் நீரை சுத்திகரிப்பதற்கு 100 ரூபாவுக்கு மேல் செலவாகும் நிலை காணப்படுகின்றது. 


காலப்போக்கில் குறித்த திட்டம் விரிவாக்கப்படும் பட்சத்தில் செலவினத்தைக் குறைக்க முடியும். 


இதற்கும் மேலாக கிளிநொச்சி இரணைமடு நீர்த் தேக்கத்தில் இருந்து மேலதிகமாக வருடாந்தம் சேகரிக்கப்படும் 13500 கன அடி நீரையும் இத்திட்டத்தோடு பருவ காலத்தில் சுத்திகரித்து வழங்கும் போது ஓரளவு செலவீனத்தை கட்டுப்படுத்த முடியும் என்று எண்ணுகின்றேன். 


கேள்வி: இறுதியாக உங்கள் தமிழ் உறவுகளோடு என்ன பேச விரும்புகின்றீர்கள்? 


பதில்: மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் ஈழத்தில் கால் பதித்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. 


இது எமது தாய் மண். இங்கு வாழ்கின்ற ஒவ்வொருவரும் கடந்த கால போரால் பாதிக்கப்பட்டவர்கள். பல்வேறு இழப்புகளை சந்தித்தவர்கள். இன்று கிடைத்திருக்கின்ற இவ் இடைவெளியை சரியாக திட்டமிட்டு மீண்டெழ முயற்சிக்க வேண்டும். 


ஒவ்வொருவரும் எம் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் மனப்பக்குவம் வளர வேண்டும். இன்று மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் எங்களைத் தாண்டி எமது எதிர்கால சந்ததிக்கு பயன்படுவதாக அமைய வேண்டும். எதிர்கால சந்ததியின் தேவைகளை இப்போதே உணர்ந்து அதற்கேற்ப நகரும் எந்த இனமும் தோற்றதில்லை. இதுவே உலக வரலாறுகளும் கூட என்றார்.


நெடுந்தீவு ஜெயபாலன்

TOTAL VIEWS : 1102
comments
S.Balasingam
Harvesting and use of rain water must be initiated at all possible locations in the Peninsula. Big or small this process would provide considerable relief to all those harvest rain water. Construction of about 10 cubic meters 10 000 liters capacity water tank complete with gutters and filters would cost only LKR 75 000/ US 500/ . So NPC and govt and other well wishers must support this.
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
azj3v
  PLEASE ENTER CAPTA VALUE.