டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு மக்கள் பெரும் பீதியில்
2017-07-26 11:39:17 | General

நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்பாடற்ற விதத்தில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இந்த வருடத்தின் முதல் ஆறரை மாதங்களில் 103,114 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான உத்தியோகபூர்வ புள்ளிவிபரமொன்று தெரிவித்திருந்தது. குறைந்தது 290 பேர் வரை பலியாகியுள்ளனர்.


கடந்த வருடத்திலும் பார்க்க இந்த வருடம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோரின் தொகை 38% அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 55,150 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் 97 பேர் இறந்திருந்தனர். உலக சுகாதார அமையத்தின் புள்ளிவிபரத்தின் பிரகாரம் 2010 க்கும் 2016 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 4.3 மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


நுளம்பினால் பரவும் டெங்கு காய்ச்சல் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டதாகும். இளம் பிள்ளைகள் மற்றும் முதியோர்களுக்கே ஆபத்து அதிகமாக காணப்படுகிறது. 1965 இல் முதன்முறையாக இலங்கையில் டெங்கு அடையாளம் காணப்பட்டது. ஆயினும், 1989 க்குப் பின்னரே தொற்றுநோயாக பரவ ஆரம்பித்தது.

தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கத்தினால் இயலாமல் இருப்பது குறித்து கடும் கவலையும் அதிருப்தியும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

மருத்துவமனைகள் டெங்கு நோயாளர்களினால் நிரம்பி வழிகின்றன. அதேவேளை நிலைமையை சமாளிப்பதற்கு இயலாத தன்மை அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். 


டெங்கு நோயாளர்களில் அதிக எண்ணிக்கையானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் 42%மானோர் தலைநகர் கொழும்பு அமைந்துள்ள மேல்  மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.  கொழும்பு மாவட்டமே அதிகளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றது.

18,186 பேர் கொழும்பில் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். கொழும்பின் 15 நிர்வாகப் பிரிவுகளில் 14 பிரிவுகள் அதிக ஆபத்தான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்புக்கு அடுத்ததாக கம்பஹாவும் (12,121 பேர்) அடுத்ததாக குருநாகலும் (4,889 பேர்) களுத்துறை (4,589 பேர்), மட்டக்களப்பு (3,946 பேர்), இரத்தினபுரி (3,898 பேர்), கண்டி (3,853 பேர்) பாதிப்பை கொண்டிருக்கின்றது. 


கொழும்பிலுள்ள சகல மருத்துவமனைகளும் டெங்கு நோயாளிகளினால் நிரம்பிக் காணப்படுகின்றன. மேலும் நோயாளிகளை ஏற்றுக் கொள்வதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால் புதிதாக ஆட்களை அனுமதிக்க மருத்துவமனை அதிகாரிகள் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளிலும் இத்தகைய நெருக்கடி காணப்படுகிறது.

டெங்கு நோய்க்கு சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள நெருக்கடியான நிலைமை காணப்படுவதால் ஆயிரக்கணக்கான டெங்கு நோயாளர்கள் ஆபத்தான நிலைமையில் உள்ளனர்.


எவ்வாறாயினும் இந்த நெருக்கடி தொடர்பாக பொதுமக்கள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டை சுமத்துகிறது. தமது இருப்பிடங்களையும் சுற்றுப் புறங்களையும் துப்புரவாக வைத்திருக்கத் தவறியமையாலேயே டெங்கு நோய் பரவுவது அதிகரித்திருப்பதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. குப்பை கூளங்களை வீசுவதால் அவை நுளம்புகள் பெருகுவதற்கு காரணமாக அமைவதாகவும் சூழல் மாசடைவதும் இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 


கடந்த ஜூனில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் தென்னிலங்கையில் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். அத்துடன் மீதொட்டமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் நிலைமை காணப்படுகிறது. முன்கூட்டியே அனர்த்தங்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு அரசாங்கத் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.

உண்மையில் கடந்த நான்கு தசாப்த காலங்களாக ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட சிக்கனக் கொள்கைகளின் நேரடி விளைவே இந்த சமூக ரீதியான அனர்த்தங்கள் என உலக சோசலிச இணையத்தளம் சுட்டிக்காட்டுகிறது.  பொது சுகாதார தேவைகளுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டமை  தடுப்பு நடவடிக்கைகளின் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதையும் குறைத்துவிட்டதாகவும் இதனால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் அந்த இணையத்தளம் கூறுகிறது. 


1970 கள் வரை சுகாதார தேவைகளுக்காக நிகர தேசிய உற்பத்தியில் 2% மே ஒதுக்கீடு செய்யப்பட்டது. 80 களில் இந்த தொகை 1.2% ஆக வீழ்ச்சி கண்டது. 2008 இல் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து சமூக ரீதியான நிகச்சித் திட்டங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டது. சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின் அறிவுறுத்தலின் கீழ் சமூக நிகழ்ச்சித் திட்டங்களுக்கான குறைப்பீடுகள் தீவிரமடைந்தன. பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சியை வழங்கும் திட்டங்களும் பொது சுகாதார துறையில் குறைவடைந்திருந்தன.

நாட்டிலுள்ள பிரதான தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவமனையில் ஆட்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக சிரேஷ்ட மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆனந்த விஜயவிக்ரம ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருந்தார். எமது விடுதிகளில் போதியளவுக்கு பயிற்சி பெற்ற தாதிமாரை நாங்கள் கொண்டிருக்கவில்லை. தற்போது பயிற்சித் தாதிமாருடனேயே நாங்கள் பணியாற்றுகின்றோம். அவர்கள் நியமனத்துக்காக காத்திருக்கின்றனர்.  

குறைந்தது. 25  30 பயிற்சி பெற்ற தாதிமார் எமக்கு மேலதிகமாக தேவைப்படுகின்றனர். நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் வரும்  நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக எமது நிறுவனம் இருக்கும் நிலையில் இந்த வெற்றிடத்தை நிரப்புவது அவசியமாகும். விசேடமாக டெங்கு நோயாளிகளுக்கு அவசர பராமரிப்பை வழங்குவதற்காக இந்த விடயம் குறித்து முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் உள்ளூராட்சி ஒதுக்கீடுகளை படிமுறையாக குறைத்துள்ளன. சமூக நலன்புரி சேவைகளை மட்டுப்படுத்துவதற்கென ஆரம்பத்தில் கருதப்பட்டது. சுகாதார வசதிகள் வீதி மற்றும் கால்வாய்கள் அனைத்தின் செயற்பாடுகள் நலன்புரி சேவைகளில் உள்ளடங்கியிருந்தன. இதேவேளை குப்பை கூளங்களை அகற்றுவதற்கு இயலாத தன்மையை கொழும்பு மாநகர சபை கொண்டிருப்பதாக அதற்கு எதிராக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநகரசபையிடம் 1200 தொழிலாளர்களும் 50 ட்ரக்குகளும் மட்டுமே இருப்பதாகவும் இந்த ட்ரக்குகள் 20 வருட கால பழைமை வாய்ந்ததெனவும் கூறியுள்ளார்.

1990 களிலிருந்து மாநகர சபை அதிகாரிகள் தனியார் முகவரமைப்புகளை அமர்த்தியிருந்தனர். சமூக சேவைகளை நடத்துவதில் தனியார் மயப்படுத்தலின் அங்கமாக இது முன்னெடுக்கப்படுகிறது.  அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நிதிப் பிரச்சினைகள் காரணமாக ஒதுக்கீடுகளை அரசாங்கம் குறைக்க வேண்டுமென உயர்மட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததாக கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ருவான் விஜேமுனி கூறியிருந்தார்.


டெங்குக்கு எதிராகவும் ஏனைய சமூக அனர்த்தங்களுக்கு எதிராகவும் போராடுவதற்கு வளங்களைத் திரட்டிக் கொள்வதற்குப் பதிலாக அரசாங்கம் இந்தத் தொற்றுநோயை பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் இராணுவ மயப்படுத்தலுக்காக பயன்படுத்தி வருகிறது. பொலிஸாரும் இராணுவக் குழுக்களும் வீடுவீடாக தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் அரசாங்க அதிகாரிகளும் செல்கின்றனர்.

நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் காண்பதற்கான இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2000 க்கும் அதிகமானோர் டெங்கு தடுப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் காணப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இது இவ்வாறிருக்க பூட்டப்பட்டிருக்கும் தனியார் கட்டிடங்களை இராணுவத்தினர் உட்சென்று உடைப்பதற்கு உரிய சட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த நாடியிருப்பதாக ஆங்கில ஊடகமொன்று நேற்று தெரிவித்தது. சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இந்த யோசனையை முன்வைத்திருந்தனர். இந்த நோக்கத்துக்காக கட்டுப்பாட்டு அறையொன்றை கொண்டிருப்பதுடன் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பத்து அதிகாரிகளுக்கு இந்தப் பணியை ஒப்படைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், நிலைமையை கையாள்வதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்கும் அவர்கள் விரும்புகின்றனர். இந்த யோசனையின் பிரகாரம் நுளம்பு பெருகும் இடங்களை வைத்திருப்பது கண்டயறியப்பட்டால் சகல அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதாக அந்த யோசனை அமைந்திருக்கிறது.

இந்தத் தண்டனைக்குரிய நடவடிக்கைகள் டெங்கை இல்லாமல் செய்வது தொடர்பாக எதனையும் செய்யப் போவதில்லை. ஆயினும் உழைக்கும் வர்க்கம் மற்றும் வறியவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு இது உதவுவதாக அமையும். எவ்வாறாயினும் சமூக சேவைகளை இல்லாமல் செய்தல் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விசனம் அதிகரித்துச் செல்கிறது. பொது சுகாதார வசதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களும் இதில் உள்ளடங்கும். 

TOTAL VIEWS : 1187
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
2dlyg
  PLEASE ENTER CAPTA VALUE.