தனி ஒருவன்
2017-11-04 11:45:36 | General

எஸ்.பாலசுப்பிரமணியம்


இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவின்  ஆட்சியானது இந்தியாவை ஓரங்கட்டி சீனாவின் பக்கம் சாய்வதை அவதானித்து வந்த சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் இலங்கை அரசு கிழக்காசிய ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு வந்த ஒரு சூழலில் தான் 2015 ஜனவரி எட்டாம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கிழக்காசிய ஜனநாயகம் என்கிறது ஒருவகையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் அனைத்து நடவடிக்கைளையும் முடக்குவது. அதாவது கம்போடியா, தாய்லாந்து, மியன்மார் போன்று சீனாவைச் சார்ந்திருப்பதாகும்.


இலங்கையில் ஏற்பட்ட அரசின் அதிகார மாற்றத்திற்கு தமிழ் மக்கள் பங்களிப்பு செய்யாமல் விட்டிருந்தால் அதிகார மாற்றம் சாத்தியப்பட்டிருக்காது. அதுமட்டுமல்லாது தோல்வி அடைந்திருந்தால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் சிறிது நாளில் காணாமல் போயிருப்பார்கள். தமிழ் மக்கள் இதில் பிரதான பாத்திரம் வகித்த போதிலும் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி எந்தவித நிபந்தனைகளோ  அல்லது இனப் பிரச்சினை பற்றிய தீர்வு பற்றியோ புதிய அரசாங்கத்துடன் இடம்பெறவில்லை.


கூட்டமைப்பின் பெயரில் இந்த விடயங்களைக் கையாண்ட சம்பந்தன் தனது கூட்டுக் கட்சித் தலைவர்களுடன் பேசி ஆலோசனைகளைப் பெறவுமில்லை. அவர்களைப் பொருட்படுத்தவுமில்லை. இதனைத் தமக்கு சாதகமாக்கிக் கொண்ட மைத்திரி ரணில் சந்திரிகா இலங்கையில் இனப் பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்ற தோற்றப்பாடுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்திருந்தனர்.


ஜனாதிபதி தேர்தலை அடுத்து இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுடைய நீண்டகால இனப் பிரச்சினையை எடுத்துக் காட்டி அதற்கான தீர்வுகளையும் முன்வைத்து சிங்கள மக்கள் முன் தேர்தல் விஞ்ஞாபனம் சென்றடைந்திருந்தால் தமிழரின் இனப் பிரச்சினை பற்றிய தெளிவான விபரம் சிங்கள் மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும்.


அது மட்டுமன்றி அரசு மாற்றமடைய தமிழ் மக்களின் ஆதரவை முன்னின்று பெற்றுக் கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் ரணில்  மைத்திரி கூட்டுக்கு  ஆதரவளிப்பதற்கான நிபந்தனை விதிக்காதது வரலாற்றுத் தவறாகும்.
அரசியல் தீர்வு ஒன்று தமிழ் மக்களுக்கு கிடைக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஒன்றுபட்ட சக்தி ஒன்று தேவை என்பது உணரப்பட்டது.

அதனால் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் உண்மையான ஆர்வலர்கள் அனைவரையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அனைவரும் ஒன்றுகூடி தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுத்தனர். ஒரு கட்சி இன்றி ஏனைய கட்சிகள் முடிவுகள் எடுத்ததில்லை. ஒரு ஆரோக்கியமான  சூழல் நிலவியது. ஆனால் காலப்போக்கில் கருத்து முரண்பாடுகளால் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. 


தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் இயங்குகிறார். இதனால் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகியுள்ளார். ஆனால் இரா.சம்பந்தன் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் அபிப்பிராயங்களைப் பெறாது ஒரு தலைப்பட்சமான தன்னிச்சையான முடிவுகளை எடுத்து செயற்படுத்தி வருகிறார். இது கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல.

ஒரு அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டது போல சம்பந்தனும் முதிர்ச்சி ஏற்பட்டமையால் அவரிடம்  போராட்ட குணத்தை காணமுடியவில்லை. பத்திரிகைச் செய்தியாளர்களின் கேள்விகளுக்குக் கூட ஆணித்தரமான பதில் பெற முடியவில்லை என்றார். சம்பந்தன் தானாகவே தனக்கு அடுத்த தலைமையை கட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும். முன்னர் அ.அமிர்தலிங்கம் கட்சித் தலைவராக இருந்த போது ஒரு பத்திரிகைப் பேட்டியின் போது  தனக்கு அடுத்து கட்சியை வழிநடத்தக்கூடிய தகைமை இரா.சம்பந்தனிடம் இருப்பதாகப் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.


தமிழ் மக்களின் நலன் கருதியும் கட்சியின் நலன் கருதியும் இரா.சம்பந்தன் ஏனைய கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து அவர்களின் ஒப்புதலுடனேயே  அரசுக்கான ஆதரவை வழங்க வேண்டும். அதனால் சம்பந்தன் நூறு வீதம் மைத்திரி ரணில் அரசை பாராளுமன்றில் காப்பாற்றி வருகிறார். ஆனால் இவரது கோரிக்கைகள் எதனையும் அரசு கண்டு கொள்வதில்லை. முக்கியமான தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை அரசு புறந்தள்ளி வருகிறது.

யாழ். இந்துக் கல்லூரி விழாவுக்கு சென்ற ஜனாதிபதி கைதிகளுக்கு ஆதரவான போராட்டக்காரர்களை மதித்து அவர்களுடன் கதைத்தது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் கைதிகள் இருபத்தைந்து நாட்களுக்கும் மேல் உணவு தவிர்த்ததினால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் செய்தி தான் அப்போது தான் அறிவது போன்று போராட்டக்காரர்களை  பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இருந்தும் கைதிகளின் நன்மைக்காக மறுநாள் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்களை நீதி அமைச்சர் நாட்டில் இல்லை. வந்ததும் தீர்மானம் எடுப்பதாகக் கூறினார். அது வரை கைதிகள் உயிர்...? 


இதே ஜனாதிபதி தன்னைக் கொல்ல வந்ததாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட கொலைக்காரனை உடனும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். ஒரு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நீதி அமைச்சர் நாட்டில் இல்லை. அவர் வரட்டும் என சிறுபிள்ளைத் தனமாக பதிலளித்துள்ளார்.

இதனை உடனும் எமது தலைவர் எதிர்க்கட்சித் தலைவர், ஊடகங்களை அழைத்து ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கிழிகிழியென கிழித்திருக்க வேண்டாமா? இது மட்டுமல்ல இரு நூற்றைம்பது நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர்  விவகாரம் சொந்தக் காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிக்க போராட்டம் போன்ற தமிழ் மக்களின் போராட்டங்கள் அரசு புறக்கணித்து வருகிறது.

சம்பந்தன் அரசை ஆதரிக்க ஆரம்பிக்கும் போதே நிபந்தனையுடனான ஆதரவை வழங்கியிருந்தால், மக்களின் பிரச்சினைகளை அரசு புறந்தள்ளும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீரென தனது ஆதரவை விலக்கிக் கொள்ளலாம் என்ற பயம் அரசிடம் இருக்கும். இதனால் சுலபமாக தீர்க்கக்கூடிய சிறு சிறு பிரச்சினைகளை அரசு தீர்க்க முன்வந்திருக்கும்.


இனியாவது தமக்கு வாக்களித்து தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிய பொது மக்களின் வெறுப்பையும் ஏனைய எதிர்க்கட்சியினர் இரா.சம்பந்தனின் கையாலாகாத் தனத்தை எள்ளி நகையாடுவதையும் சம்பந்தன் தவிர்க்கும் வகையில் ஏனையவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க தன்னை இனியாவது தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

TOTAL VIEWS : 1150
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zjzc2
  PLEASE ENTER CAPTA VALUE.